கணுப் பொங்கலும் காணும் பொங்கலும் - தாத்பர்யங்கள் என்ன?

கணுப் பொங்கல் பண்டிகை
கணுப் பொங்கல் பண்டிகை

ணுப்பொங்கல் அன்று (பொங்கல் பண்டிகையின் மறுநாள்) காலையில் முதல்நாள் செய்த சர்க்கரைப் பொங்கலுடன், மஞ்சள் மற்றும் சிகப்பு நிற சாத வகைகள், தயிர் சாதம் போன்றவற்றை செய்வார்கள். மொட்டை மாடியிலோ அல்லது திறந்த வெளியிலோ ஒரு இடத்தை சுத்தம் செய்து கோலமிட்டு, பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்து, பூ, பழம் ஆகியவைகள அக்கொத்தில் வைப்பார்கள். மஞ்சள் இலைகளை அதன்மேல் பரப்ப, தயாரித்து வைத்திருக்கும் பலவண்ணச் சாதங்களை அதன்மேல் வைப்பார்கள்.

மஞ்சள் குங்குமத்துடன் நிறைந்த சுமங்கலியாக இனித்த வாழ்வுடன், நிர்மலமான மனதுடன், சகோதரனும், தானும் நீடுழி வாழ வேண்டுமென பஞ்ச பூதங்களிடம் பெண்கள் கணுவன்று பிரார்த்தனை செய்வதாக ஐதீகம்.

சித்ரான்னங்கள் தயாரித்து, நிவேதனம் செய்து சகோதரன் குடும்பத்தினருடன் சாப்பிடுவார்கள். துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, காரங்கள் நிறைந்த வாழ்க்கையை சரிக்கட்டிக் கொண்டு அனுசரித்துப்போக வேண்டுமென்பதைக் குறிக்கவே சித்ரான்னங்கள் செய்யப்படுகின்றன.

காணும் பொங்கல் (கணுப் பொங்கல் பண்டிகையின் மறுநாள்) என்பது உறவினர்களையும் நண்பர்களையும் நலம் காணும் நன்னாள். உல்லாசம் பயணங்களை பலர் மேற்கொள்வார்கள்.

கன்னிப் பெண்களுக்கு இன்றைய தினம் குஷியோ குஷி! பெண்கள் புத்தாடை அணிந்து தலையில் பூ வைத்து அலங்கரித்துக்கொண்டு தோழிகளுடன் சுதந்திரமாக வெளியில் சுற்றச் செல்வதை வீட்டுப் பெரியவர்கள் கட்டுப்படுத்த மாட்டார்கள்.

மேலும், மார்கழி மாதம் 30 நாட்களும் வீட்டு வாசலில், பிடித்து வைத்திருந்த சாணிப் பிள்ளையார்களை சேகரித்து காணும் பொங்கலன்று குளம் அல்லது ஆறுகளில் கரைப்பது வழக்கம்.

கணுப் பொங்கல் பண்டிகை
கணுப் பொங்கல் பண்டிகை

கரைப்பதற்கு முன்பாக, பெண்கள் பிள்ளையாரைச் சுற்றி கும்மியடித்துப் பாடும் பாடல் ஒன்று பின்வருமாறு:

‘புள்ளையாரே! புள்ளையாரே!

புடிச்சு வெச்ச புள்ளையாரே!

போன மாச மார்களில

பூப்போல வந்தீங்கிளே புள்ளையாரே!

இந்த மாசத் தையில தை! தைன்னு

ஆத்துத் தண்ணீல இறங்கறீரே புள்ளையாரே!

ஆத்தோடு குளத்தோடு போனாலும்

அளாம போய்வாங்க புள்ளையாரே!

பாட்டுப் பாடி, கும்மியடிச்ச எங்களை

மறந்துடாதீங்க புள்ளையாரே!

காத்துக் கெடக்கும் கன்னியருக்கு

கல்யாணம் நடக்கோணம் புள்ளையாரே!

காலமெலாம் கூட இருந்து

காப்பாத் தணும் புள்ளையாரே!

புள்ளையாரே! புள்ளையாரே!

பத்திரமா போய் வாரும் புள்ளையாரே!’

என்பதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com