
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோயிலுமே தனித்தன்மை கொண்டது. அவற்றின் வழிபாடுகளும் மாறுபட்டவையாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள உருகாதேஸ்வரி அம்மன் கோவில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள உம்மத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மட்டுமே தரிசனம் தரும் வகையில் அமைந்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் முன்பு கிராமத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. கிராமத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த இக்கோவில் இப்பொழுது இந்து அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தரும் வகையில் இக்கோவில் திறந்திருக்கும்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் திருவிழா நடைபெறும். இதில் சாம்ராஜ்நகர் மட்டுமின்றி பெங்களூர், மைசூர், தமிழகம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். திருவிழா முடிந்த பின்பு சில நாட்கள் வரை இரவு நேரத்தில் கோவில் அருகே யாரையும் செல்ல அனுமதிப்பதில்லை. புராணத்தின் படி இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
உருகாதேஸ்வரி தேவியின் எட்டு அக்கா தங்கைகள் இரவு நேரத்தில் கோவிலுக்கு வந்து தங்கள் ஊர் மக்களின் கஷ்டங்களையும், சுகங்களைப் பற்றியும் பேசியபடி அமர்ந்து இருப்பார்கள். அப்போது அவர்களை யாரும் பார்க்கக் கூடாது என்பது ஐதீகம்.
இதே போன்று ஒரு நாள் திருவிழா முடிந்த பின் அக்கா தங்கைகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருவிழாவில் தாங்கள் மறந்து விட்டு சென்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்காக வந்த பாட்டியும் பேரனும் அவற்றை எடுப்பதற்காக மீண்டும் கோவிலுக்கு அருகில் வந்தனர். அங்கு தேவியர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
இதை கவனித்த தேவியர்கள் அவர்களை திரும்பி பார்க்காமல் செல்லுங்கள் என்று கூற பாட்டியும் பேரனும் அதை கேட்காமல் திரும்பி பார்த்ததால் இருவரும் கல்லாக மாறியதாகவும், இன்றும் கருவறை சுவரின் அருகே இரண்டு கல் உருவங்களாக காணப்படுகின்றன. அன்று முதல் திருவிழா முடிந்த சில நாட்கள் வரை கிராமத்தினர் இருட்டிய பிறகு யாரும் கோவில் அருகில் செல்லத் துணிவதில்லை. இந்தக் கட்டுப்பாடு பல ஆண்டுகளாக இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு வந்து உருகாதேஸ்வரியை மனம் உருகி வேண்டி தரிசிக்க மன அமைதி, சந்தோஷம், நிம்மதி கிடைக்கும் என்றும், வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் விலகும் என்றும் நம்பப்படுகிறது. செய்யும் தொழில் வெற்றி அடையவும் பக்தர்கள் மாதந்தோறும் வந்து அம்பாளை தரிசிக்கின்றனர்.
எப்படி செல்வது?
அமைதி ததும்பும் பழமையான அதேசமயம் அற்புதமான ஸ்ரீ உருகாதேஸ்வரி கோவில் ரவீந்திரநாத் தாகூர் நகர், தட்டகல்லி 3வது நிலை (Dattagalli), மைசூரில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் அசோகபுரம் ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து கிட்டத்தட்ட 2 1/2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ உருகாதேஸ்வரி கோவில்.