

கர்தமேஷ்வர் மகாதேவ் கோயில் ஸ்தல வரலாறு!
இந்தியாவின் பொக்கிஷமான ராமாயண புராதான கதையில் அதன் நாயகனான ஸ்ரீ ராமர் , மனித குலத்தின் எதிரியான ராவணனை வதம் செய்து விடுவார். ராவணன் ஒரு அசுரனாக இருந்தாலும் , தனது தந்தையின் வழியில் அனைத்து வேதங்களையும் கற்று அந்தணர் கடமையும் ஆற்றியிருந்தான்.
இதன் காரணமாக, ராவணனை வதைத்த பின்னர் ஸ்ரீ ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பின்னர் , ராமர் தனது குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பெயரில் , தனது பாவங்களில் இருந்து விடுபடுவதற்காக , காசியில் அமைந்துள்ள கர்தமேஷ்வர் மகாதேவ் கோயிலுக்கு சீதையுடன் வந்து வழிபாடு நடத்தினார். இங்குள்ள சிவபெருமானை வழிபட்ட பின்னர் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்பது புராதன வரலாறு.
இந்து புராணங்களின்படி வாரணாசி என்பது சிவபெருமானின் திரிசூலத்தின் மீது அமர்ந்துள்ள நகரமாக நம்பப்படுகிறது. இது வாரணாசி என்றும் காசி என்றும் மேலும் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்டு வருகிறது. காசியில் தனது இறுதி கடமையை முடிக்கும் ஒவ்வொருக்கும் முக்தி கிடைக்கிறது. உலகில் முதன் முதலில் தோன்றிய நகரமாகவும் வாரணாசி திகழ்கிறது. ஹிந்து ஆன்மீக பூமியின் மையமாகவும் தலைமையிடமாகவும் எப்போதும் இந்த நகரம் இருக்கிறது.
கோயிலின் கட்டுமானங்கள்:
காசியின் ஒவ்வொரு துகள்களிலும் சிவபெருமான் நிறைந்துள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். வாரணாசி பூமியில் பிறந்த மனிதர்களுக்கு முக்தி அளிக்கும் புண்ணிய ஸ்தலமாக இருக்கிறது. காசியில் எஞ்சி இருக்கும் , மிகப் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்தக் கோயிலின் புராதான கட்டுமானம் யாரால் செய்யப்பட்டது என்று எவராலும் அறிய முடியவில்லை. ஆயினும் , கிபி 4 ஆம் நூற்றாண்டுக்கும் பழமையான கட்டுமானங்களை கொண்டுள்ளதாக தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன.
இந்த கோயில் பலமுறை புனரமைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கட்டப்பட்டுள்ளது. முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் வாரணாசியில் இருந்த ஏராளமான கோயில்கள் அழிக்கப்பட்ட போது இந்த கோயிலும் பாதிக்கப்பட்டது. பின்னர் வங்காளத்தின் ராணி பவானி 1751-1757 ஆம் ஆண்டு வாக்கில் மக்களின் வழிபாட்டிற்காக இந்த கோயிலை மீண்டும் புணரமைத்து கொடுத்தார். அவரது சீரியத் திருப்பணியில் பஞ்சக்ரோஷி பாதையில் கோயில்கள் மற்றும் அதை சுற்றியுள்ள புராதன குளங்கள் சீர்படுத்தப்பட்டன.
கோயிலின் பாரம்பரியம் மற்றும் வழிபாடு:
இந்த கோயிலில் உள்ள சிவலிங்கம் கர்த்தம பிரஜாபதி இந்த முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பூமியில் மனிதர்களை படைப்பதற்காக பிரம்மா முதலில் படைத்த பிரஜாபதிகளில் கர்த்தம பிரஜாபதியும் ஒருவர் என்பதால் இந்த லிங்கத்தின் தொன்மையும் அறியலாம். ஸ்ரீ ராமரின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியதால் , இந்தத்தலம் பல்வேறு தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
கோயிலின் மூலவராக சிவபெருமான் இருக்கிறார் மேலும் மகாவிஷ்ணு , ஶ்ரீ தேவி , விநாயகர், சூரியன், கங்கை, யமுனை போன்ற கடவுள்களின் சிலையும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வாரணாசியின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் காசி நகர்வலம் நடைபெறுகிறது. இந்த ஆன்மீக நகர்வலம் பஞ்சக்ரோஷி யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
யாத்திரையின் ஆரம்பம் இந்த கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பிறகு தான் தொடங்குகிறது. அந்த யாத்திரையின் போது கோயிலின் குளங்களில் உள்ள நீரினை பக்தர்கள் தங்கள் தலையில் தெளித்துக் கொள்கின்றனர். மேலும் கார்தம கூபாவில் உள்ள குளத்தில் தங்களது பிம்பத்தை பார்ப்பதன் மூலம் உயிர் பயம் நீங்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களுக்கு உண்டு.
கோயிலுக்கு செல்லும் வழி:
இந்த கோயிலுக்கு செல்ல சென்னையிலிருந்து விமானம் வழியாக பயணம் செய்து, வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி விமான நிலையத்தை அடையலாம். அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்தமேஷ்வர் கோயிலுக்கு செல்ல வாடகைக் கார்கள் மற்றும் பேருந்து மூலம் செல்லலாம். ரயில் வழியாக பயணம் செய்பவர்கள் வாரணாசி மாநகரத்தை அடைந்து அங்கிருந்து 14 கிமீ வரை கார்/ஆட்டோ ரிக்ஷா அல்லது பேருந்து மூலம் கோயிலை அடையலாம்.