சக்தி வழிபாட்டிற்கு காஷ்மீரம் ஒரு முக்கிய இடமாகும்

அத்தியாயம்- 12
சக்தி வழிபாட்டிற்கு காஷ்மீரம் ஒரு முக்கிய இடமாகும்
Published on

காஷ்மீரத்தில் இந்து மதத்தின் இருவகை அமைப்பாக சைவமும், சாக்தமும் பரவியிருந்தது போல, புத்த மதமும் பரவி இருந்தது. வைதீகச் சமயங்களுக்கும், தத்துவங்களுக்கும் வரவேற்பும் வாழ்வும் தந்து வளர்த்த காஷ்மீரம் வைதீகத்திற்குப் புறம்பான சமயங்களுக்கும், தத்துவங்களுக்கும் கூட ஆதரவைத் தந்திருந்தது. 

பிரத்தியபிக்ஞான சைவம்"(புரிந்து அறிந்து கொள்ளுதல்), என்றும், "திரிகம்" (சிவம், சக்தி, ஜீவன் ஆகிய மூன்று) என்றும் வழங்கப்படும் காஷ்மீரத்து சைவ சமயமும்… "பரம்பொருள் ஒன்றே" என உரைகளும் அத்வைதத்தின் ஒரு வகைதான்.

 சங்கரர் தமது மிகச் சிறிய தோத்திர நூலான தட்சிணாமூர்த்தி துதியில் அத்வைத உண்மைகள் சிலவற்றை விளக்கும்போது காஷ்மீரச் சைவத்தின் மிக முக்கியமான சில பரிபாஷச் சொற்களை அப்படியே எடுத்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கரரின் குருவிற்கும் குருவான கௌடபாதர், மாண்டூக்ய உபநிசத்திற்குச் செய்யுள் வடிவம் செய்துள்ள விரிவுரையான காரிகையில் இதுபோல் சில அத்வைத உண்மைகளை விளக்க சில பௌத்த மத பரிபாஷைச் சொற்களை அப்படியே எடுத்து ஆள்கிறார்.

மாயாஜாலத்தாலொரு நகரத்தையே கண்ணாடியில் காண்பது போன்றது இந்த உலகம் என தட்சிணாமூர்த்தி துதியில் ஒரு உவமை வருகிறது. ஆகவே, உலகத் தோற்றம் மாயையின் விளைவு என வர்ணிக்கப்படுகிறது. ஒரு பெரிய யோகியோ அல்லது ஒரு மாயா வித்தைக்காரனோ செய்து காட்டும் ஜாலம் போன்றது....இது என்று வர்ணிக்கப்படுகிறது. பூதங்களும், பௌதீகங்களும் உடல், உள்ளம் என்னும் இரண்டின் காரண விஷயங்களும் உட்பட அனைத்துமே மாயையின் விளையாட்டே."ஆத்மா அஞ்ஞானத்தால் ஏமாற்றப்பட்டுத் தவறான நம்பிக்கை கொண்டு விடுவதால் மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து தொடரும் சம்சாரம் என்ற நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறது. 

ஆனால், அது பிரத்ய பிக்ஞை அடையும் போது - அப்போது உண்மையை புரிந்து உணரும்போது அல்லது அஞ்ஞான உறக்கத்திலிருந்து விழித்து எழும்போது, இந்த உலகத்தின் இயல்பான மாயைத் தன்மையையும் இரண்டாவதாக எதுவும் இல்லை என்ற ஆத்ம தத்துவத்தையும் உணர்கிறது. அதற்குப் பிறகு அந்த ஆத்மாவிற்கு எந்தவித கஷ்டமும், வேதனையும் கிடையாது. 

சிவபெருமான் தெற்கு நோக்கி வீற்றிருந்து, உலகத்துக்கே ஆசானாய் இருந்து வாயால் ஒரு வார்த்தை கூட பேசாமல் சின்ன முத்திரையை உபதேசிப்பது அத்வைத தத்துவம். சித்+முத்திரை= சின்முத்திரை. சித்+ஞானம். முத்திரை= குறி அல்லது அடையாளம். 

வலது கையின் சுண்டு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்றும் தனியே நிற்க… ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் இணைத்துக் காட்டுவதே சின் முத்திரை.

தனியே நிற்கும் மூன்று விரல்களும் ஆத்ம பொருள்கள் அல்லாத உடல், உயிர், உள்ளம் என்ற மூன்றையும் அல்லது முக்குணங்களையும் குறிப்பனவாம். அவற்றை நீக்கி ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஒன்றாய் இணைந்து அத்வைத அனுபூதி பெறுவதே இந்த முத்திரை தரும் உபதேசம், இவ்வாறு இந்த இடத்தில் சங்கரர் காஷ்மீரத்தில் "பிரத்யாக்ஞை" என்று கூறும் பரிபாஷைச் சொல்லிக் கொண்டு அத்வைதத்தின் சாரமான பொருளைக் கூறுகிறார். 

சக்தி வழிபாடும் காஷ்மீரத்து சைவம் போலவே ஒருவகை அத்வைதம்தான். ஆனால் ஒரு சிறு வேறுபாடு உண்டு. எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அந்த பேருண்மையான கடவுளின் சக்தி அம்சத்தை இது வற்புறுத்தும்... ஆன்மீக உணர்விற்கும், ஒழுங்கு முறைக்கும் சக்தி வழிபாடு துணை செய்யும் என்பதால் இப்படி வற்புறுத்தப்படுகிறது. 

சக்தி வழிபாட்டிற்கும் காஷ்மீரம் ஒரு முக்கிய இடமாகும். 

பாரத தேசத்திற்கு “ஆரியா வர்த்தம்” என்ற பெயர் உண்டு. இந்த தேசத்தை ஸ்ரீசக்கிரத்தில் பிந்துத் திரிகோணம் என்பார்கள். அதன் மூன்று முனைகள் காஷ்மீரம், நேபாளம், கன்னியாகுமரி என்பனவாம். காசி க்ஷேத்திரமே பிந்துவாகும். இந்த வகையில் காஷ்மீரம் காமேசுவரியின் இருப்பிடம். அனைத்திலும் உயர்ந்த பிரபுவான காமேசுவருடைய தேவியே காமேசுவரி. காஷ்மீரத்தின் சரித்திரத்தைக் கல்ஹனர் என்ற கவி "ராஜ தரங்கிணி" என்ற பெயரில் எழுதியுள்ளார். இது கி.பி. 1148-49ல் எழுதப்பட்டது. 

அந்த காஷ்மீரத்தில் சாரதாதேவிக்கு ஒரு கோயில் இருப்பதாகவும். ஆன்மீக வழிபாடு செய்ய வங்க நாட்டைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி அங்கு வருவதுண்டு என்றும் கூறப்பட்டிருக்கிறது. 

அப்போது காஷ்மீரத்தை ஆண்ட மன்னன் லலிதாநித்யன் என்பவன், இந்தக் கோயில், மேல் கிருஷ்ண - கங்கைப் பகுதியில் இருந்ததாகவும், அந்த இடம் ‘சாரத்’ என வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எம்.ஏ. ஸ்டெயின் என்பவர்,  காஷ்மீரத்தின் உள்நாட்டுப் பகுதியில் இரண்டு மூன்று நாட்கள் "போலோர்" மலையை நோக்கிச் சென்றால் அந்த இடத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததும் அடிக்கடி யாத்திரிகர்கள் வந்து வணங்குவதுமான ஒரு மரவடிவம் இருந்ததாகவும் அதன் பெயர் ‘சாரதா’ என்றும் சொல்லப்பட்டது. இந்த தேவிக்கு மாற்றாகவே ஸ்ரீநகரின் அருகில் ஒரு கோயில் அமைக்கப்பட்டதாக ஸ்டெயின் தெரிவிக்கிறார். 

சங்கரர் சாரதாதேவியை வழிபடச் சென்றதை அடுத்து காண்போம். 

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com