

கதை 1: நிறை மனம்
தன் குருவிடம் ஒரு சீடன், "குறை மனம் எப்போது நிறை மனம் ஆகும்..?" என்று கேட்டான்.
குரு அவனிடம் ஓர் ஓட்டை பானையை கொடுத்து, அதில் நீர் நிரப்புமாறு கூறினார்.
"சுவாமி.. ஓட்டை குடத்தில் எப்படி நீர் நிரப்ப முடியும்..?" என்றான் சீடன்.
குடத்தை நீருக்குள் அமிழ்த்தினார் குரு. இப்போது குடம் நிறைகுடமாக இருந்தது.
துறவி கூறினார்; "இதேபோல மனதைக் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால், அது நிறைந்த மனம் ஆகிறது. நீருக்குள் போட்ட ஓட்டைக் குடம் நிறைவது போல, இறை உணர்வு எனும் கடலுக்குள் மனதை அமிழ்த்தினால் மனதும் நிறை மனமாகிவிடும்".
கதை 2: நாத்திகன் கற்ற பாடம்
நாத்திகன் ஒருவன் ஒரு மகானிடம் சென்று, "சுவாமி..! நான் திராட்சை சாப்பிடலாமா..?" என்று கேட்டான்.
"தாராளமாக சாப்பிடலாம்.." என்றார் மகான்.
"தண்ணீர் பருகலாமா..?"
"குடிக்கலாம்.."
"சிறிது புளிப்பு பொருள்...?" இழுத்தான் அவன்.
"தவறு ஏதுமில்லை.. சாப்பிடலாம்.." என்றார் மகான்.
"இம்மூன்றும் சேர்ந்ததுதானே திராட்சை மது.. அதை மட்டும் ஏன் வேண்டாம் என்கிறீர்..?" என்று கிண்டலாகக் கேட்டான் அவன்.
உடனே மகான் அவனிடம், "நான் உன் தலையிலே சிறிது மண்ணைப் போடலாமா?" என்று கேட்டார்.
"ஓ... தாராளமாக.." என்றான் அவன்.
"சிறிது நீர் தெளித்தால்..?" கேட்டார் மகான்.
"தெளியுங்கள்..!" என்று கூறி தலையைக் காட்டினான் அவன்.
அந்த மண்ணையும், நீரையும் ஒன்றாகப் பிசைந்து, தீயில் காட்டி உருவாக்கப்பட்ட செங்கலை உன் தலையில் போடட்டுமா..?" கேட்டார் மகான்.
பதில் ஏதும் பேசாமல் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் நாத்திகன்.