‘கதகளி’யாட்டம் தொடங்கிய கணபதி ஆலயம்!

‘கதகளி’யாட்டம் தொடங்கிய கணபதி ஆலயம்!

விநாயகர் என்றாலே, ‘கொழுக்கட்டைப் பிரியர்’ என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் கேரள மாநிலம், கொட்டாரக்கராவிலிருக்கும் விநாயகருக்கு ‘நெய்யப்பம்’ தான் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இந்த மகாகணபதியை நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்.

கேரள தேசத்தில் பல சிவபெருமான் கோயில்களை நிறுவினார் பரசுராமர். அந்தக் கோயில்களில் கொட்டாரக்கரா சிவபெருமான் கோயிலும் ஒன்று. கேரளாவின் புகழ் பெற்ற சிற்பி பெருந்தச்சன் கொட்டாரக்கரா சிவனை வழிபட்டுவிட்டு, நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் காணப்பட்ட ஒரு பலா மரம் அவரை மிகவும் ஈர்க்க, அதன் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, அதில் கணபதி திருமேனி ஒன்றைச் செய்து, அதை கொட்டாரக்கரா சிவன் கோவிலில், பிரதிஷ்டை செய்தார். பிறகு அதற்கு ஒரு தனிச்சன்னிதியும் அமைக்கப்பட்டதாக கோயில் தல வரலாறு கூறுகிறது.

கோயில் தோற்றம்
கோயில் தோற்றம்

இது தவிர, சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு கொட்டாரக்கராவில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய நாராயணன் எனும் வேதியர், தினமும் கொட்டாரக்கரா சிவன் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் கோயிலுக்குச் சென்று திரும்பியபோது ஓரிடத்தில், “வேதியரே! இங்கிருக்கும் என்னையும் வணங்கிச் செல்லுங்கள்’’ என்ற குரல் கேட்டது. அக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிய அவர், அங்கு ஒரு பலா மரம் சாய்ந்து கிடந்ததைக் கண்டார். அந்தப் பலா மரத்தின் வேர்ப்பகுதி இருந்த பள்ளத்தில், பலா மரத்தினாலான விநாயகர் உருவத் திருமேனி ஒன்று இருப்பதைக் கண்டார். விநாயகர் திருமேனி அழகைக் கண்டு வியந்த அவர், தன்னிடம் பேசியது அந்தப் பலா மர விநாயகர்தான் என்பதை அறிந்து, அந்த கணபதியை அங்கேயே கோயில் கொண்டு அருள்புரிய வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுதலை ஏற்று விநாயகரும் அந்த இடத்திலேயே கோயில் கொண்டார். அதன் பிறகு அங்கு விநாயகருக்குப் புதிதாகக் கோயில் கட்டப்பட்டது என்று மற்றொரு வரலாறும் கூறப்படுகிறது.

நெய்யப்பம்
நெய்யப்பம்

வேண்டியவர்க்கு வேண்டியதை அருளி அற்புதங்கள் புரிந்ததால், இந்த விநாயகரின் பெருமை அனைத்துப் பகுதிகளிலும் பரவத் தொடங்கியது. இதனால் பரசுராமரால் நிறுவப்பட்ட சிவன் கோயிலை விடப் பெருமையுடையதாக இது மாற்றம் பெற்றது. அங்கிருந்த விநாயகரும் ‘மகாகணபதி’ என்ற திருநாமத்தைப் பெற்றார். இக்கோயில் கருவறையில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். கருவறையின் பின்புறம் பகவதி அம்மன் கோயில் உள்ளது. அம்மன் மேற்கு நோக்கிய நிலையில் இருப்பதால், ‘மேற்கு’ என்பதைக் குறிக்கும் மலையாளச் சொல்லான, ‘படிஞ்ஞாயிறு’ என்பதைச் சேர்த்து, ‘படிஞ்ஞாயிறு பகவதி’ என்று இந்த அம்மன் அழைக்கப்படுகிறார்.

க்கோயில் கணபதி அப்பம் ஒன்றைக் கையில் வைத்தபடி காட்சி தருகிறார். கோயிலுக்கு வரும் பக்தர்கள், மகாகணபதிக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நெய்யப்பத்தைப் படைத்துத் தங்களின் வேண்டுதல்களை அவர் முன்பு சொல்லி வழிபடுகின்றனர். நெய்யப்பம் கொண்டு வழிபடுபவர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறிவிடுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்கள் இந்த ஆலய அலுவலகத்தில் தங்கள் வழிபாட்டுக்குத் தேவையான நெய்யப்பங்களின் எண்ணிக்கையைச் சொல்லி, பணத்தைச் செலுத்தினால் அதற்கான நெய்யப்பங்களை வழங்குகின்றனர். இதற்காகக் கோயில் பணியாளர்கள் அதிகாலை 5 முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் நெய்யப்பத்தைச் செய்து கொண்டே இருக்கின்றனர்.

கேரள நடனங்களில் ஒன்றான, ‘கதகளி’ கொட்டாரக்கரா மகாகணபதி கோயிலில்தான் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான வரலாறு ஒன்றும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் கொட்டாரக்கரா பகுதியை ஆண்டு வந்த மன்னர் ஒருவர், மகாகணபதியின் பக்தராக இருந்தார். அவர் தனது மகளின் திருமண விழாவில் பலவிதமான கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். வடக்கு மலபார் பகுதியில் புகழ் பெற்ற ஒரு களியாட்டக் குழுவினரை அழைத்து, ‘கிருஷ்ணன் களியாட்டம்’ என்ற கலை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டார். அந்தக் குழுவினர், ‘கொட்டாரக்கரா மக்களுக்குச் சிறிதும் கலையுணர்வோ, அதை விரும்பும் தன்மையோ இருக்காது. எனவே, அங்கு நிகழ்ச்சி நடத்த எங்களால் இயலாது’ என்று சொல்லி மறுத்து விட்டனர். இதனால் வருத்தமுற்ற மன்னர், கொட்டாரக்கரா மகாகணபதியிடம் முறையிட்டார். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய விநாயகர், அவரை ‘ராமாயண காவியம்’ ஒன்றை எழுதும்படிச் சொன்னார். மன்னரும் ராமாயணத்தை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து எழுதி முடித்தார். அதற்கு, ‘ராமனாட்டம்’ என்று பெயரிட்டு, அதை மகாகணபதி சன்னிதியில் வைத்து வழிபட்டார்.

அன்றிரவு மன்னருக்கு மீண்டும் ஒரு கனவு தோன்றியது. அந்தக் கனவில் மகுடம், பச்சை, தாடி, மினுக்கு, கத்தி, கதை முதலிய பல உருவங்கள் தோன்றின. மன்னர் அந்த உருவங்கள் அனைத்தையும் கொண்டு, புதியதாக ஒரு களியாட்டத்தைத் தொடங்கினார். அதற்குக், ‘கதகளியாட்டம்’ என்று பெயர் சூட்டினார். இப்படித் தோன்றியதுதான் கேரளாவின் கதகளியாட்டம். எனவே, கதகளியாட்டக் கலைஞர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது, இக்கோயிலுக்கு வந்து மகாகணபதிக்கு ’நெய்யப்ப வழிபாடு’ செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

இக்கோயில் வளாகத்தில், தர்மசாஸ்தா, சுப்பிரமணிய சுவாமி, நாகதேவதைகளுக்கும் தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன. விநாயகர் சதுர்த்தி, திருவாதிரை, சிவராத்திரி, ஆயில்யம் மகம், நவராத்திரி, பிரதிஷ்டா தினம், தைப்பூசம், விசு, மண்டலச் சிறப்பு எனும் சிறப்பு விழாக்கள் இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன. கேரள மாநிலம், கொல்லம் வடகிழக்கில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொட்டாரக்கரா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com