மகாபெரியவரை சோதித்த கவிஞர் கண்ணதாசன்!

மகாபெரியவரை சோதித்த கவிஞர் கண்ணதாசன்!
Published on

ருசமயம் மகாபெரியவரை தரிசிக்கச் சென்ற கவிஞர் கண்ணதாசன் பெரியவரிடம், "ஸ்வாமி, பகவான் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பாதாகச் சொல்கிறார்கள். பாற்கடல் என்றால், வெண்மை நிறமாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், பாற்கடல் மேகவர்ணமாக அல்லவா காட்சி தருகிறது" என்று கேட்டார்.

அவருடைய கேள்வியில் சற்றே குதர்க்கம் இருப்பதாகச் சுற்றிலும் இருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், கண்ணதாசன் கேட்டதற்கு மகாபெரியவர் பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக புன்னகைத்தார். அன்றைக்கு மதியம் கண்ணதாசன் கேள்விக்கு விடை கிடைக்கும் என்றும், அதுவரை கண்ணதாசன் காத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவாகியது.

அன்று பிற்பகல் உம்மிடி செட்டியார், மகா பெரியவரை தரிசிப்பதற்கு வந்தார். மகாபெரியவரை நமஸ்கரித்து எழுந்த உம்மிடியார், தான் கொண்டு வந்திருந்த பெரிய மரகதக்கல்லை பெரியவருக்குச் சமர்ப்பித்து, ஏற்றுக்கொள்ளுமாறு பிரார்த்தித்துக் கொண்டார்.

மகாபெரியவர் பதில் ஒன்றும் சொல்லாமல், மடத்துச் சிப்பந்தியிடம் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வருமாறு பணித்தார். பால் வந்ததும் உம்மிடியார் கொடுத்த மரகதக்கல்லை அந்தப் பாலில் போடுமாறு செய்தார். அதைப் பார்த்த உம்மிடியார், ‘தான் கொடுத்த மரகதத்தின் தரத்தைதான் அப்படிச் சோதித்துப் பார்க்கிறாரோ’ என்று நினைத்தார்.

மரகதத்தின் தரத்தை அப்படிப் பாலில் போட்டுச் சோதித்துப் பார்ப்பது வியாபார ரகசியம். இது மகாபெரியவருக்கு எப்படித் தெரியும் என்ற வியப்பும் உம்மிடியாருக்கு ஏற்படவே செய்தது.

மகாபெரியவர் தம்முடைய அத்யந்த பக்தரான உம்மிடியாரை சந்தேகிப்பாரா என்ன? அவர் அப்படிச் செய்ததற்குக் காரணமே வேறு. மரகதக் கல்லை பாலில் போடச் செய்த மகாபெரியவர், கவிஞர் கண்ணதாசனை அழைத்து மரகதக்கல் போடப்பட்டிருந்த பாலைப் பார்க்குமாறு கூறினார். கண்ணதாசன் அந்தப் பாத்திரத்தைப் பார்த்தார். பாத்திரத்தில் இருந்த பால் பச்சை நிறத்துக்கு மாறி இருந்தது. மரகதக் கல்லின் நிறம் பாலில் பிரதிபலித்தது.

இதழ்களில் குறுநகை தவழக் கண்ணதாசனைப் பார்த்த மகா பெரியவா, "மரகதப் பச்சை பாலோட நிறத்தை எப்படிப் பச்சையா மாத்திடுச்சு பார்த்தியோ?  அப்படித்தான் மேகவர்ணம் கொண்ட மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டதும், அவருடைய நிறமே பாற்கடலில் பிரதிபலிக்குது. அதனால்தான் பாற்கடல் மேகவர்ணத்துல தெரியறது" என்றார்.

மகாபெரியவரின் செயல்முறை விளக்கம் கண்ணதாசனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவருடைய மனதில் தெளிவும் ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தை வைத்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்தான், 'திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே…' என்ற பாடல்.

அதன் பின்னர், உம்மிடியார் பக்கம் திரும்பிய மகாபெரியவர், அவரிடம் தமக்குச் சமர்ப்பித்த மரகதக் கல்லை வரதராஜ பெருமாள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்குமாறு பணித்து அவருக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com