

இன்று சனிக்கிழமை. சனி பகவானின் பிடியிலிருந்து விடுபட்டு, நன்மைகள் பெற, காரைக்காலில் உள்ள திருநள்ளாறு திருத்தலம் சென்று வரலாம், வாருங்கள்.
கலி புருஷன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சனி பகவான், நிடத நாட்டு மன்னன் நளனைப் பிடித்துக் கொண்டார். நாட்டை இழக்கவைத்து, மனைவி, மக்களைப் பிரித்த சனி, கார்க்கோடன் என்ற பாம்பை ஏவி, நளனைக் கொத்தும்படியும் செய்தார். அதனால் குரூபியான நளன், இருதுபன்னன் என்ற மன்னனிடம் தேரோட்டியாகப் பணியில் சேர்ந்தான். விரைவில் அவன் மனைவி தமயந்தி அவனை அடையாளம் கண்டுகொள்ள, அதேசமயம், கார்க்கோடனின் விஷ வீரியமும் மறைய, நளன் பழைய இளமை உரு பெற்றான்.
தன் மனைவி, மக்களை அடைந்ததோடு, நாட்டையும் போரிட்டு மீட்டுக் கொண்டான். ஆனால் அப்போதும் சனி பாதிப்பு முற்றிலும் மறையாததால், நாரத முனிவர் அறிவுரைப்படி, திருநள்ளாறு வந்தான். இங்கே ‘நள தீர்த்தம்‘ உருவாக்கி நீராடினான். ஆலயத்துள் நளன், குடும்பத்தாருடன் அடியெடுத்து வைத்த அக்கணமே அவனைப் பீடித்து, பல துன்பங்களை அளித்த சனிபகவான், அந்த ஆலய சாந்நித்தியத்தால், அதிர்ந்து அவனை விட்டு விலகினார். மூலவரான தர்ப்பாரண்யேஸ்வரருக்கு பயந்து மூன்றாம் கோபுர வடக்குப் பக்க மாடத்தில் மறைந்து கொண்டார்.