குருவுக்கே உரிய 12வது மாதமாகிய பங்குனியும், சூரியனுக்கே உரிய 12வது நட்சத்திரமாகிய உத்திரமும் சேருகின்ற நன்னாளே பங்குனி உத்திரத் திருநாளெனக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களில் இந்நாள் பிரம்மோத்ஸவமாகவும், கல்யாண உத்ஸவமாகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வைணவ - சிவ ஸ்தலங்களிலும் பங்குனி உத்திர வைபவம் விசேஷமாக நடைபெறுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடைபெறுகின்ற பன்னிரண்டு விழாக்கள் குறித்து திருப்பூம்பாவை பதிகத்தில் திருஞான சம்பந்தர் பாடியவைகளில், பங்குனி உத்திர விழாவும் உள்ளதென கூறப்பட்டிருக்கிறது.
கல்யான விரதம்: அநேக முருக பக்தர்கள் உத்திர நன்னாளில் விரதமிருந்து, இறைவனை வணங்கி வழிபடுவார்கள். திருமணமாகாத ஆண் - பெண் இருபாலர்களும் திருமணம் நடக்கவேண்டி, நம்பிக்கையுடன் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் காரணம், ‘கல்யாண விரத நாளென’ பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
தெய்வீகத் திருமணங்கள்: ஸ்ரீராமர் - சீதை, முருகர் - தெய்வயானை, சுந்தரேஸ்வரர் - மீனாட்சி, ஆண்டாள் - ரங்கமன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில்தான் நடைபெற்றுள்ளன.
ரதி தேவிக்கு உதவிய சிவபெருமான்: ஒரு சமயம் சிவபெருமான் தவமிருக்கையில் அதை மன்மதன் கலைக்க, நெற்றிக்கண்ணால் சிவபெருமான் அவரை எரித்துவிட்டார். மன்மதனின் துணைவி ரதி, தன்னுடைய கணவருக்கு உயிர்ப் பிச்சையளிக்க சிவனிடம் வேண்டினாள். பங்குனி உத்திர நாளில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்ததும், ரதி தேவிக்காக மன்மதனை எழுப்பித் தந்து உதவிய நாள் பங்குனி உத்திரம்.
ஹரிஹர புத்திரர் அவதார நாள்: ஞானமும், தபசும் கலந்த சிவனின் அம்சமும், அழகும், சக்தியும் கலந்த விஷ்ணுவின் அம்சமும் சேர்ந்து ஹரிஹர புத்திரனாக, பதினெட்டாம்படி காவலனாக பம்பையில் வீற்றிருக்கும் பகவானாக சுவாமி ஐயப்பன் அவதரித்த நன்னாள் பங்குனி உத்திரம்.
விரத பயன்கள்:
* திருமகள் பங்குனி உத்திர விரதத்தைக் கடைப்பிடித்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.
* பங்குனி உத்திர விரதமிருந்து, இந்திரன் இந்திராணியையும், பிரம்மதேவன் சரஸ்வதியையும் அடைந்தார்கள்.
* இந்நாளில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட, வீட்டில் சுபிட்சமும், தடைப்பட்ட சுப காரியங்களும் சுமுகமாக முடியுமென பெரியோர்கள் கூறியுள்ளனர்.
* இந்த தினத்தில் விரதமிருந்து, குலதெய்வக் கோயிலில் நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட, கோடி நன்மைகள் கிடைக்கும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமி நாளில் விரதமிருந்து இறைவனை வழிபட நற்பலன்கள் ஏற்படும். இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அநேக பக்தர்கள் முருகப்பெருமானுக்கு இன்று பால் காவடி, பால் குடம் சுமந்து பாத யாத்திரையாகச் சென்று வழிபடுவதுண்டு. பங்குனி உத்திர நன்னாளில், முருகனை வணங்கி வழிபடுவோர்க்கு முக்தி கைகூடுமென கூறுவது வழக்கம்.