கோலாகல கோஜாகிரி பூர்ணிமா!

விசேஷம்
கோலாகல கோஜாகிரி பூர்ணிமா!
Published on

ந்திரன் பூமிக்கு மிக அருகே வரும் தினம் ‘கோஜாகிரி பூர்ணிமா’ எனக் கொண்டாடப்படுகிறது. மழைக்காலம் முடிந்து அறுவடை விழா ஆரம்பமாகும் நேரம் வருகின்ற இந்த சக்தி வாய்ந்த பௌர்ணமியில் சந்திரனின் பதினாறு கலைகளையும் காண இயலுமெனவும், மனதுக்கும், ஆன்மாவுக்கும் நிறைவு தரும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் குணப்படுத்தும் பண்புகளை உடையது எனவும் கூறப்படுகிறது. கோஜாகிரி என்பதின் பொருள் விழித்திருப்பதாகும். இதைப் பற்றிய சில செய்திகள்…

அரசர் ஒருவர் கைவினைப்பொருட்களைச் செய்யும் கலைஞன் ஒருவரிடம், ‘உன்னுடைய பொருள் ஏதாவது ஒன்று விற்பனை ஆகவில்லையென்றால் அதை நானே வாங்கிக் கொள்கிறேன்’ என்று கூறுகிறார். ஒரு சமயம் அந்தக் கலைஞர் செய்த பொம்மை ஒன்று விற்பனையாகாததால், அரசர் அதை வாங்கி தனது வீட்டில் வைத்துக்கொண்டார். அதன் பிறகு அரசர் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார். அந்த பொம்மை, ‘அலெச்சுமி’ (மூதேவி) என்று அவருக்குத் தெரியாது. அவரது தவிப்பைக் கண்ட ராணி, கணவருக்கு உதவ, லெட்சுமி தேவியை வணங்கி விரதமிருந்து பௌர்ணமியன்று இரவு முழுவதும் விழித்திருந்து வழிபடுகிறாள். இதைக் கண்டு மனமிரங்கிய லெட்சுமி தேவி, அரசியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அருள்புரிய, அலெச்சுமி அந்த வீட்டிலிருந்து விலகிச் செல்கிறாள்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு பௌர்ணமி நாளன்று இரவில் தனது புல்லாங்குழலை இசைக்க, அந்த இனிமையான இசையைக் கேட்டு ராதை மற்றும் இதர கோபிகா ஸ்தீரிகளும் வெளியே வந்து அவருடன் நடனமாடுகிறார்கள். கிருஷ்ணர் தனது மாயையினால் ஒவ்வொரு கோபியருடனும் தான் ஆடுவது போல் பிரதிபலிக்கச் செய்கிறார். அனைவரும் மனநிறைவு அடைந்து மகிழ்கிறார்கள். லெட்சுமி தேவியை நினைத்து இரவு முழுவதும் விழித்திருந்து பூஜை செய்பவர்களின் இல்லங்களுக்கு தேவி வருகை தந்து ஆசிர்வாதம் செய்வதாக ஐதீகம்.

கோஜாகிரி பூர்ணிமா மேற்கு வங்கத்தில், ‘லோக்கி பூஜா’ என்றும், குஜராத்தில், ‘ஷரத் பூர்ணிமா’ என்றும், ஒடிஸாவில், ‘குமார பூர்ணிமா’ என்றும், மராட்டியத்தில், ‘கோஜாகிரி’ என்றும் அழைக்கப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் குடும்பத்தின் தலைமகன் அன்றைய தினம் கௌரவிக்கப்படுவது வழக்கம். கார்த்திகைக் கடவுள், தாரகாசுரனுடன் யுத்தமிட்ட நாளாக இன்று கருதப்படுவதால் ஒடிஸாவில், ‘குமார பூர்ணிமா’ என இது கூறப்படுகிறது. புதுமணத் தம்பதியினருக்கு இது முக்கியமான பண்டிகையென்பதால், ‘அமிர்த் பர்சா’ என அழைக்கப்படுகிறது.

கோஜாகிரி குதூகலம்: இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக இரவு நேரம் வெளியே வந்து சந்திரனின் ஒளிக்கதிர்கள் தம்மேல் படும் வண்ணம் நிற்பார்கள். சின்னஞ்சிறுசுகள், காதலர்கள், புதிதாக மணம் முடித்தவர்கள் போன்றவர்கள் இந்நாளைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அகன்ற பாத்திரமொன்றில் சூடான பாலை விட்டு, முழு நிலவு அதில் படும்படி வைத்து, அதன் பிம்பம் அதில் அழகாக ஜொலிப்பதைக் கண்டு மகிழ்வார்கள். நிவேதனமாக அரிசிப் பாயசம் செய்து, பூஜை முடிந்த பின்னர் பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவார்கள்.

மிதிலை நகர்ப்பகுதியில் இந்த பூர்ணிமா, ‘கோஜா கராஹ’ என்று அழைக்கப்படுகிறது. இன்று அவரவர் வீட்டு முன் புறத்தை சுத்தப்படுத்தி, அரைத்த ஈர அரிசி மாவினால் அலங்கார வடிவமைப்பில் கோலமிடுவது வழக்கம். வீட்டிலுள்ள சில முக்கியமான கடவுள் சிலைகளை அதன் மீது வைத்து, தாமரை விதைகள், வெற்றிலை, அரிசிப் பாயசம் ஆகியவற்றை சந்திரனுக்குப் படைப்பதுண்டு.

பூஜை செய்யும் விதம்: இன்று அதிகாலை நீராடி, புத்தாடை அணிந்து, சூரிய பகவானுக்கு உணவு படைத்து வணங்கிய பிறகு முழுநாளும் விரதமிருந்து லெட்சுமி தேவி மற்றும் இந்திர பகவானை வழிபடுவார்கள். பால், இளநீர் போன்ற நீராகாரங்களை மட்டுமே அருந்துவார்கள். இரவில் பாயசம் செய்து 108 விளக்கேற்றி சந்திரனுக்கு நிவேதனம் செய்து பூஜிப்பதுண்டு. வீட்டின் வெளிப்புறம் ஒரு கிண்ணத்தில் நிறைய உணவையும் மற்றொரு கிண்ணத்தில் சிறிது இனிப்பையும் வைப்பது வழக்கம். இது எதற்காக?

துரதிருஷ்டத்தைக் கொண்டு வரும் அலெச்சுமி (மூதேவி) நிறைய உணவு வைத்திருக்கும் கிண்ணத்திலுள்ளதைச் சாப்பிட்டு திரும்பி வெளியே சென்று விடுவதாகவும், அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் லெட்சுமி தேவி சிறு கிண்ணத்திலிருக்கும் இனிப்பைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்வுடன் வீட்டினுள் வருவதாகவும் ஐதீகம்.

பூஜை, கலசம், அலங்காரம்: செப்பு கலசமொன்றில் அரிசி, காசு மற்றும் தண்ணீர் விட்டு மேலே மாவிலைக் கொத்து, அதன் நடுவே மஞ்சள் தடவிய தேங்காய் வைக்க வேண்டும். கலசத்தின் கழுத்தைச் சுற்றி சிவப்பு நூலைக் கட்ட வேண்டும். கலசத்தின் வெளிப்பகுதியில் நான்கு வேதங்களையும் குறிக்கும் வண்ணம் குங்குமத்தினால் ஸ்வஸ்திக் வரைய வேண்டும். இதை தேவி படத்தின் அருகே வைத்து விளக்கேற்றி லெக்ஷ்மி அஷ்டோத்ரம், லெக்ஷ்மி சகஸ்ரநாமம் போன்றவைகளைக் கூறி பூஜை செய்ய வேண்டும். பூர்ணிமா தினம் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது அவசியம். கோஜாகிரி பூர்ணிமா இந்த வருடம் 9.10.2022 அதிகாலை 3.42 முதல் 10.10.2022 அதிகாலை 2.24 மணி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.

தசரா முடிந்து நான்கு நாட்கள் சென்றபின் வரும் கோஜாகிரி பூர்ணிமாவை வணங்கி வரவேற்று வழிபட்டு நற்பலன்கள் பெறுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com