உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி!

கிருஷ்ண ஜன்மாஷ்டமி
கிருஷ்ண ஜன்மாஷ்டமி
Published on

கிருஷ்ணாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, கோகுலாஷ்டமி, யதுகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி என பல பெயர்களில் அழைக்கப்படும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஜன்மாஷ்டமி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜன்மாஷ்டமி குறித்து இப்பதிவில் காண்போம்.

நேபாளம்: இங்குள்ள கிருஷ்ணர் கோயில் 1667ம் ஆண்டு சித்தி நரசிம்ம மல்லா மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. லலித்பூரில் உள்ள இந்த புராதனமான கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜன்மாஷ்டமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக உள்ள முன்னாள் அரச அரண்மனையின் வளாகத்தில் அமைந்துள்ள 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கிருஷ்ணர் கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகிறார்கள். நேபாளத்தில் மக்கள் நள்ளிரவு வரை விரதம் அனுஷ்டித்து பகவத் கீதை படிப்பதும், பக்தி பாடல்கள் பாடுவதும் என இந்நாளைக் கொண்டாடுவார்கள்.

ஃபிஜி: ஃபிஜியில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் உத்திரபிரதேசம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த மூதாதையர்களைக் கொண்டுள்ளனர். கிருஷ்ணாஷ்டமி இவர்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். 8 நாட்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள்.

பாகிஸ்தான்: கராச்சியில் உள்ள ஸ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திரில் பஜனை பாடல்களும், பிரசங்கங்களும் நடைபெறும். பாகிஸ்தானில் இது விருப்ப விடுமுறை நாளாகும்.

இங்கிலாந்து: குறிப்பாக லண்டனில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள் அதிகம் இருக்கும். கலாசார நிகழ்ச்சிகள், கிருஷ்ணரைப் பற்றிய நாடக நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள் என சிறப்பாக இவ்விழா நடைபெறும்.

மொரிஷியஸ்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் தொகை இங்கு கணிசமான அளவில் உள்ளது. இந்தத் தீவு முழுவதும் உள்ள கோயில்களில் பகவத் கீதை பாராயணங்கள், சிறப்பு பிரார்த்தனைகள், பஜனைகள் நடைபெறும்.

பங்களாதேஷ்: ஜன்மாஷ்டமி கொண்டாடப்படும் மற்றொரு நாடு பங்களாதேஷ். இங்கு ஜன்மாஷ்டமிக்கு தேசிய விடுமுறை உண்டு. பங்களாதேஷின் தேசிய கோயிலான டாக்காவில் உள்ள தாகேஸ்வரி கோயிலில் இருந்து ஜன்மாஷ்டமி ஊர்வலம் தொடங்கி பழைய டாக்காவின் தெருக்களில் செல்லும்.

அமெரிக்கா: அமெரிக்காவின் அரிசோனாவில் கவர்னர் ஜேனட் நபோலிடானோ இஸ்கானை அங்கீகரித்து ஜன்மாஷ்டமிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் அமெரிக்க தலைவர். அமெரிக்காவில் கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமி, ராதாஷ்டமி போன்ற பண்டிகைகள் பக்தியுடனும், உற்சாகத்துடனும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கரீபியன் நாடுகளிலும் பரவலாக ஜன்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம் இங்குள்ள பல இந்துக்கள் உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, வங்காளம், தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள்.

வட இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகை ஸ்ரீ கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமியாகும்.

உத்தரப் பிரதேசம் (மதுரா மற்றும் பிருந்தாவனம்): கிருஷ்ணரின் ஜன்ம பூமியான (பிறந்த இடமான) மதுரா மற்றும் குழந்தை பருவத்தை கழித்த பிருந்தாவனம் இரண்டு இடங்களிலும் ஜன்மாஷ்டமி வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ராஸ் லீலா’ எனப்படும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் (மாடு மேய்க்கும் பெண்கள்) கிருஷ்ணரின் விளையாட்டுத்தனமான நடனம், ‘ஜாங்கி’ (கிருஷ்ணரின் வாழ்க்கையின் காட்சிகளை சித்தரிக்கும் அட்டவணை) போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. நள்ளிரவில் பக்தி பாடல்கள், பஜனைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

தஹி ஹண்டி கொண்டாட்டம்
தஹி ஹண்டி கொண்டாட்டம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் குறிப்பாக மும்பையில் ‘தஹி ஹண்டி’ கொண்டாட்டத்தில் தயிர் நிரப்பப்பட்ட பானை உயரமாக தொங்க விடப்பட்டு அதனை உடைக்க மனித பிரமிடுகளை உருவாக்கி தயிர் பானைகளை உடைத்து கொண்டாடும் வழக்கம் உள்ளது. இசை, நடனம் என்று வெகு சிறப்பாக நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
15 நிமிடம் வேகமாக நடப்பதில் இத்தனை நன்மைகளா?
கிருஷ்ண ஜன்மாஷ்டமி

ராஜஸ்தான் மற்றும் குஜராத்: குஜராத்தில் குறிப்பாக கிருஷ்ணர் தனது ராஜ்யத்தை நிறுவி ஆட்சி செய்ததாகக் கூறப்படும் ‘துவாரகா’வில் பக்தர்கள் ‘ராஸ் கர்பா’ எனப்படும் பாரம்பரிய நடனம் ஆடுவதும், ஊர்வலங்கள் சிறப்பு விழாக்களுடன் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. ராஜஸ்தானில் ‘ஜாங்கி’ நிகழ்ச்சிகளும் தொட்டில்களில் கிருஷ்ணரின் சிலைகள் வைக்கப்பட்டு தொட்டில் ஆட்டுவதும் உண்டு.

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு பகுதியில் ஜன்மாஷ்டமி தோக்ரே / தாகுரே தா வ்ரத் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஜன்மாஷ்டமி என்பது ஜம்மு பகுதியில் காத்தாடி பறக்கும் பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. ஜன்மாஷ்டமியுடன் தொடர்புடைய மற்றொரு விழா ‘தேயா பர்னா’வாகும். இதில் டோக்ராக்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் குல தேவதாக்களின் பெயரில் தானியங்களை தானம் செய்கிறார்கள். பெண்கள் ஜாண்ட் என்ற புனித மரத்தை இந்நாளில் வழிபடுகிறார்கள். திரௌபாத் எனப்படும் சிறப்பு ரொட்டிகள் தயாரித்து தெய்வங்களுக்கும் பசுக்களுக்கும் வழங்குகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com