ஜம்மு காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் ஆலய கும்பாபிஷேகம்!

ஜம்மு காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் ஆலய கும்பாபிஷேகம்!
Published on

ந்திர மாநிலம், திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. உலகமெங்குமிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்துவிட்டுச் செல்கின்றனர். நாளுக்கு நாள் பெருமாளை தரிசிக்க வரும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருவதால் கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியாத வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களிலும் ஏழுமலையானுக்கு கோயில்களை நிர்மாணிக்கும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி, சென்னை, டெல்லி, புவனேஷ்வர் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஆறாவதாக ஜம்முவின் மஜீன் பகுதியில் திருப்பதி பெருமாளின் திருக்கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வந்தது. இதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் பரப்பளவு நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஆண்டு வழங்கியது. இந்த இடத்தில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, முடிவடைய உள்ளன. புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு அருகில் இந்த ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்தக் கோயிலின் கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், வரும் ஜூன் மாதம் 8ம் தேதி அந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி அதிகாரிகளுடன் சென்று இந்த ஏழுமலையான் கோயிலை ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோயில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. வரும் ஜூன் 8ம் தேதி கோயில் திறக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும். திருப்பதி கோயிலில் எந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைகள் இங்கும் பின்பற்றப்படும்" என்று கூறினார். குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து அன்றைய தினமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com