குறைவற்ற வாழ்வருளும் குமரஞ்சேரி முருகன்!

குறைவற்ற வாழ்வருளும் குமரஞ்சேரி முருகன்!

ரி காத்த ராமர், ஏரி காத்த அம்மன் என பல தெய்வங்களைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஏரியில் கண்டெடுக்கப்பட்ட 7 அடி உயர பிரம்மாண்டமான பிரம்ம சாஸ்தா கோல முருகனைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா? அப்படிப்பட்ட அதியற்புதமான அழகு ததும்பும் முருகன் வீற்றருளும் திருத்தலம்தான் குமரஞ்சேரி.

தொண்டை மண்டலத்தின் அநேக இடங்களில் இதுபோன்று பிரம்ம சாஸ்தா வடிவிலான முருகன் திருமேனிகளை தரிசித்திருக்கலாம். ஆனால், இது போன்றதொரு பிரம்மாண்ட வடிவ குமரனை குமரஞ்சேரியில் மட்டுமே தரிசிக்க முடியும்.

முதன்முதலில் கல்லிலே கலைநயம் கண்ட பல்லவர்கள் கால கலாசிற்பம் இந்த கந்தன் என்பதில் துளியும் ஐயமில்லை. கி.பி. 6ம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் பல குடைவரைக் கோயில்களையும், பல்வேறு கலைநயமிக்க சிற்பங்களையும் வடித்த பெருமை முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் மகன் மகேந்திரவர்ம பல்லவனையே சேரும். எனவே, மகேந்திரவர்ம பல்லவனின் கைவண்ணத்தில் எழுந்ததுதான் இந்த முருகன் சிற்பம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் ஆனித்தரமான கூற்று.

அரசர் காலத்தில் கோயிலுக்குள் இருந்து கோலோச்சிய இந்த கந்தன், காலப்போக்கில் ஏரிக்குள் மறைந்தார். கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில், கோடைக்காலத்தில் ஏரி வற்றியபோது, முருகனின் சிரசு மட்டும் வெளியே தெரிந்தது. அதைக் கண்ட ஊர் மக்கள் ஒன்று கூடி, பத்து அடி ஆழத்திலிருந்த முருகன் சிலையை வெளியே எடுத்து, ஏரிக்கரையில் கொட்டகை ஒன்றை அமைத்து அதில் குமரனைக் குடியமர்த்தினார்கள். ராஜேந்திரன் என்பவரின் பெரு முயற்சியால் ஆலயம் எழுப்பப்பட்டு, பின்னர் ஆலயத்துக்கு இடம்பெயர்ந்தார். வெயிலில் காய்ந்த கந்தனுக்கு கொட்டகை அமைத்துத் தந்தவன், பின்னர் கோமகனாக மாறிய கதையும் உண்டு. ஆலயம் எழுப்பிய ராஜேந்திரன் என்பவர் அயல்நாடு (மலேசியா) சென்று அளவற்ற செல்வம் சேர்த்தார்.

2003ம் ஆண்டு குடமுழுக்குக்குப் பின்னர், குழந்தை வரம் வேண்டுவோர்களுக்கு குழந்தை பாக்கியமும், வீடு வேண்டுவோர்க்கு வீடும் அளித்தான் இந்த வள்ளி மணாளன். மழை வேண்டிய அன்பருக்கு மழையைக்கூட தந்தருளினான். கல்யாண வரத்தோடு, வழக்குகளிலும் வெற்றியைத் தந்தான். வியாபார விருத்தி, கல்வி விருத்தியென இந்த முருகன் தந்த வரங்கள் ஏராளம். அவன் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை.

ஆலய கருவறையுள் கருணைமுகம் காட்டி, வலது மேல் கரத்தில் அக்ஷ மாலையும், இடது மேல் கரத்தில் கமண்டலமும் தரித்து, இடது கீழ்க்கரத்தை தொடை மீது வைத்த வண்ணம் வலது கீழ்கரத்தால் அபயம் அளித்தபடி அருள் சுரக்கும் அழகு திருமேனியுடன் ஆஜானுபாகுவாகத் திருக்காட்சி தந்து திக்குமுக்காடவைக்கின்றார். உத்ஸவர் சிலையும் அருகிலேயே உள்ளது. வெளி மண்டபத்தில் கணபதி கோயில் கொண்டுள்ளார். எதிரே மயில் வாகனம் காட்சி தருகிறது.

இந்தக் கோயிலில் விசேஷங்களாக சித்ரா பௌர்ணமி, சித்திரை கிருத்திகை, கந்தர் சஷ்டி ஆகியன சிறப்புடன் அனுசரிக்கப்படுகின்றன. சித்திரை கிருத்திகையில் பக்தர்கள் அலகுக் காவடி எடுத்து வருவது சிறப்பு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் கிருத்திகைகளில் இங்கு முருகனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன.

குழந்தை வரம் வேண்டுபவர்கள், கிருத்திகையில் இங்கு தம்பதி சமேதராக வந்து ஸ்வாமியின் வலது கரத்தில் ஒரு எலுமிச்சை கனியை வைத்து, அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பின்னர், ஆலயத்தில் பிரசாதமாகத் தரப்படும் எலுமிச்சை கனியை துணியில் முடித்து, கோயிலுக்கு வலப்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டி, பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு செய்ய, விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பலரது அனுபவமாக உள்ளது.

புது வீடு, நிலம் வாங்க விரும்புபவர்களும், தொழில் மேன்மை அடைய நினைப்பவர்களும், தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்தக் கோயிலை ஆறு முறை வலம் வந்து, முருகனுக்கு செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட, விரும்பியபடியே வீடு, நிலம் அமைகின்றது. தொழிலிலும் அமோக வளர்ச்சி கண்டு ஆனந்தம் அடையலாம்.

அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி - பழவேற்காடு பேருந்து சாலையில் மெதூரிலிருந்து வடக்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமரஞ்சேரி. பொன்னேரியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் பேருந்தில் குமரஞ்சேரியை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com