பெண்கள் அணியும் மங்கலப் பொருட்களில் ஒன்று வளையல். அதிலும் சப்தம் எழுப்பும் கண்ணாடி வளையல்கள் பெண்களுக்கு அழகு தருவதோடு, மிகுந்த மங்கலம் தருவதாகவும் கருதப்படுகிறது. அதேபோல், சுமங்கலிப் பெண்கள் வளையல் அணியாமல் இருக்கக் கூடாது என்கிறது சாஸ்திரம். இன்றும் சில கிராமப்புறங்களில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன்பு வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் முதலில் அணிவிப்பார்கள். பிறகுதான் வளையல் போடத் தொடங்குவார்கள். காரணம், கர்ப்பவதியாக இருக்கும் பெண்ணின் அருகில் தோஷம் இருப்பவர்களோ, வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறவர்களோ அல்லது பொறாமை மனம் படைத்தவர்களாலோ எந்த ஆபத்தும் அந்தப் பெண்ணுக்கு வராமல் இருக்கவே வேப்பிலை வளையல் அணிவிப்பார்கள். வேப்பிலை இருக்கும் இடத்தில் கிருமிகள் அண்டாது. துஷ்ட சக்தியும் அண்டாது என்பது ஐதீகம்.
வேப்பிலை வளையலைப் போலவே கண்ணாடி வளையலும் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. கண்ணாடி வளையல் அணியும்போது மனதில் ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். அத்துடன் கண்ணாடி வளையல் எழுப்பும் கலகல ஓசையால் துஷ்ட சக்திகள் எதுவும் நெருங்காது. அத்துடன், கண்ணாடி வளையலின் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. அதிலும் பச்சை, சிவப்பு கண்ணாடி வளையல்களை நிறைய பெண்கள் விரும்புவர். இதற்குக் காரணம், பச்சை நிறம் மனதை அமைதிப்படுத்தும். வாழ்வை செழுமையாக்கும். சிவப்பு நிறம் கண் திருஷ்டியை அகற்றும் சக்தி கொண்டது.
தங்கமோ, வெள்ளியோ அல்லது கண்ணாடி வளையலோ எதுவாக இருந்தாலும் சரி, பெண்கள் கண்டிப்பாக கைகளில் வளையல் அணிய வேண்டும். இதனால் குடும்பத்தில் லக்ஷ்மி கடாட்சம் உண்டாவதோடு, மனதில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும்.