ஐப்பசி என்றவுடன் நினைவுக்கு உடனே வருவது, துலா காவேரி ஸ்நானம், தீபாவளிப் பண்டிகை, கேதார கௌரி பூஜை, ஸ்கந்த ஷஷ்டி போன்றவைகள்தான். இவைகளைத் தவிர, இன்னும் பல்வேறு பண்டிகைகள் ஐப்பசி மாதத்தில் வருகின்றன. அனைத்தையும் பார்க்கலாமா!
துலா காவேரி நானம்:
18/10/2024
அன்று துலா காவேரி ஸ்நானம் ஆரம்பமாகிறது.
மிகவும் விசேஷமான தினம்.
ஏனெனில், கங்கையை விட புனிதமான காவேரி ஆறு, தனது இனிமையாலும், அழகாலும் அனைவரின் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்குபவள். ஆகவே, இன்றைய தினம் ஸ்ரீரங்கம்
காவேரியில் நீராடுவது மகத்தான புண்ணிய பலனை அளிக்குமென நம்பப்படுகிறது. இதை, தொண்டரடிப்பொடி ஆழ்வார், தனது பாடல் மூலம் பாடியுள்ளார். அப்பாடல்,
"கங்கையில் புனிதமாய் காவிரி நடுவு பாட்டு, பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள், எங்கள் மால் ஈசன் கிடந்ததோர் கிடைக்கை கண்டும் எங்ஙனம் மறந்து வாழ்வேன் ஏழையேன் ஏழையேனே!" என்பதாகும்.
வீடுகளில் இருப்பவர்களும் கூட, ஸ்நானம் செய்கையில், கங்கே! யமுனே! சரஸ்வதி! கோதாவரியென அனைத்து புண்ணிய நதிகளின் பெயர்களைக் கூறியவாறே ஸ்நானம் செய்வது வழக்கம்.
28/10/2024-
"யம தீபம்" என்று கூறப்படும் இந்நாளில், வீட்டின் பூஜையறையில், ஸ்ரீ யமதர்மராஜருக்கு நெய் தீபமேற்றி பூஜிப்பது, நோயற்ற வாழ்வை அளிக்கும். நீண்ட ஆயுளையும் கொடுக்கும். மாலை நேரத்தில், வீட்டின் வெளிப்புறத்தில் அழகாக கோலமிட்டு, தெற்கு நோக்கி ஒன்பது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. வீட்டினர் அனைவரும் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
தனத்திரயோதசியும் இன்றைய நாளாதலால், அவரவர் சக்திக்கேற்ப, தங்கம் வாங்கினால், அபரிதமாக வளர்ச்சியை வீட்டில் ஏற்படுத்தும்.
30/10/ 2024
இரவு நரக சதுர்த்தி ஸ்நானம். ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதார தினம்.
31/10/2024
அதிகாலை தீபாவளிப்பண்டிகை. 3 மணி முதல் 5 மணிக்குள் நல்லெண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, புத்தாடையணிந்து இறைவனை பூஜிக்க வேண்டும். ஸ்ரீமகாலெட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பானதாகும்.
01/11/ 2024
கேதார கௌரி பூஜை மற்றும் அமாவாசை நாளாகிய இன்று, பித்ருக்களை பூஜிப்பது நல்லது. கேதார கௌரி பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலமளித்து வணங்குவது சாலச் சிறந்ததாகும்.
02/11/2024
முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி விரதம் ஆரம்ப நாள். அனைத்து முருகர் கோவில்களிலும் விசேஷமாக கொண்டாடப்படும் தெய்வீக நிகழ்வு.
03/11/2024
பாவ்பீஜ் அல்லது யம துதியை என்று கூறப்படும் இந்நன்னாளில், யமதர்ம ராஜரை பூஜிப்பது நல்ல பலனை அளிக்கும். சகோதரிகள், சகோதரர்களைக் கூப்பிட்டு அன்புடன் விருந்து வைத்து, பரிசுகள் கொடுப்பது வழக்கம். சகோதரர்களும் கொடுப்பார்கள்.
07/11/2024
ஸ்கந்த ஷஷ்டி விழாவாகிய இன்று முருக பக்தர்கள் விரதமிருந்து பலவகை காவடிகள் எடுத்தும், பால் குடங்கள் ஏந்தியும், முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களுக்குச் சென்று வழிபடுவார்கள். முருகப் பெருமான் தரிசனம், புண்ணிய பலன்களை கொடுக்கும்.
மேலும் பல தெய்வீகப் பெருமைகளை அடுக்கடுக்காக கொண்ட ஐப்பசி மாதத்தை வணங்கி வரவேற்போம்.