காசியில் ஏற்பட்ட பஞ்சத்தை போக்குவதற்காக பார்வதிதேவி அன்னபூரணியாக அவதாரம் எடுத்து வீற்றிருந்தார். அப்படியிருக்கையில் சிவபெருமான் பிச்சாதனராய் வந்து அவருடைய பிச்சை பாத்திரத்தில் பிச்சை பெற்ற தினம்தான் இந்த அக்ஷய திரிதியையாகும். அன்னபூரணி தாயார் சிவபெருமானுக்கே பிச்சை வழங்கிய இந்த அக்ஷய திரிதியை தினமன்று நம் வீட்டில் செய்யக்கூடிய ஒரு விஷயத்தால் வீட்டில் பஞ்சம் என்பதே ஏற்படாது.
உலக உயிர்களின் பசியை போக்குவதற்காகவே அவதாரம் எடுத்து வந்தவர்தான் அன்னபூரணி தாயார். உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய உணவுக்கு அடிப்படையாக இருப்பவரும் அன்னபூரணி தாயாரே ஆவார்.
அழகான நகைகளை அணிந்து நவரத்தின இருக்கையில் அமர்ந்து ஒரு கையில் தங்க கரண்டியும், இன்னொரு கையில் அக்ஷய பாத்திரத்தையும் ஏந்தி காட்சியளிக்க கூடியவர்தான் அன்னபூரணி தாயாராவார்.
அன்னபூரணி தாயார் அவதாரம் எடுக்க காரணம், ஒருமுறை பிரம்ம தேவனுக்கு கர்வம் அதிகரித்தது. சிவபெருமானுக்கும் ஐந்து தலை, தனக்கும் ஐந்து தலையிருக்கிறது. இதனால் தானும் சிவபெருமானும் சமம் என்று கர்வம் கொள்கிறார். சிவனை காண்பதற்கு வருகிறார். அப்போது பார்வதிதேவி தவறுதலாக பிரம்மனை சிவனென்று நினைத்து வணங்கிவிடுகிறார். இதனால் பிரம்மதேவனுக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. பிரம்மதேவனின் ஆணவத்தை அடக்க சிவன் பிரம்மனின் ஒரு தலையை கொய்துவிடுகிறார்.
பிரம்மதேவனின் தலையை கொய்து எடுத்ததால் சிவபெருமானுக்கு தோஷம் ஏற்படுகிறது. பிரம்மனின் தலை சிவபெருமானின் கைகளில் ஒட்டிக் கொண்டேயிருக்கும். இப்படி இந்த தோஷம் போக அனைத்து இடங்களிலேயுமே பிச்சை எடுப்பார். ஆனாலுமே தோஷம் நீங்காது. இதற்கு நடுவிலே பார்வதி தனக்கு தானே ஒரு தண்டனையை கொடுத்துக் கொள்வார். பிரம்மனை சிவனென்று நினைத்து வணங்கியதற்காக பூவுலகிற்கு வருவார். பூவுலகிற்கு வந்த பார்வதிதேவி காசி நகரில் அன்னபூரணி தாயாராக அவதாரம் எடுப்பார்.
எதற்காக பார்வதிதேவி காசியிலேஅன்னபூரணியாக அவதாரம் எடுத்தார் என்பதற்கு கந்தபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதை என்னவென்றால், ஒருமுறை பார்வதி தாயார் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்தி விடுவார். சிவபெருமான் ஒரு கண்ணில் சூரியனையும், இன்னொரு கண்ணில் சந்திரனையும் ஏந்தியிருப்பதால் உலகமே இருட்டில் மூழ்கிவிடும். இதனால் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்து உலகுக்கு ஒளி தருவார். இதனால் பார்வதிதேவி தனக்கு தானே தண்டனை கொடுத்துக்கொள்வார்.
காசி மாநகரத்தில் அன்னபூரணியாக எழுந்தருளி அனைத்து உயிர்களின் பசியையும் போக்கிக் கொண்டிருப்பார். இதை கேள்விப்பட்ட மன்னரும் உணவருந்த வருவார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியிலே அவரும் அமர்ந்து உணவருந்தும்போது அள்ள அள்ள குறையாத அக்ஷயபாத்திரத்தில் இருந்து அன்னம் வருவதை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்.
இவர் பார்வதிதேவி என்பதை உணர்ந்து அவரை வணங்குவார். அன்னபூரணி காசி மாநகரத்திற்கு வந்ததால் இனி என்றும் காசியில் பஞ்சம் என்பதே இருக்காது என்று கூறுவார். இந்த நிலையில் தான் சிவபெருமான் காசிக்கு வந்து அன்னபூரணி தாயாரிடம் பிச்சை வாங்கிய பிறகு அவருடைய கைகளில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்துவிடும். அந்த நாளை தான் அக்ஷய திரிதியையாக கொண்டாடுகிறோம்.
இப்படிப்பட்ட அன்னபூரணி தாயாரின் காயத்ரி மந்திரத்தை தினம் தினம் சொல்லி வழிப்படும் போது அன்ன தோஷமே வராது. அக்ஷய திரிதியை அன்று அன்னபூரணி படத்தை கண்டிப்பாக சமையலறையில் மாட்டுவது சிறப்பு. இந்த படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு வாசனை நிறைந்த மலர்களை சூடவேண்டும்.
பித்தளை அல்லது செம்பு தட்டில் அரிசி முழுவதுமாக நிரப்பி தாயாரின் சிலையை வைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூக்களால் அலங்கரிக்கலாம். இத்துடன் இரண்டு கிண்ணத்தில், ஒன்றில் கல் உப்பும், இன்னொன்றில் வெல்லத்தையும் போட்டு வையுங்கள். அரிசி, பருப்பு, கல் உப்பு, வெல்லம், மஞ்சள் இந்த ஐந்து பொருட்களும் கட்டாயமாக அக்ஷய திரிதியை நாளன்று அன்னபூரணி தாயாரிடம் வைத்து வழிப்பட வேண்டியது அவசியமாகும்.