பாவங்கள் நீங்க, வியாதிகள் தீர, பேரின்பம் எய்த இந்த 9 தீர்த்தங்களில் நீராடுவோம்!

Avudaiyarkoil
Avudaiyarkoil
Published on

திருப்பெருந்துறை தலத்தின் திருக்கோயில் கருவறையில் ஆன்மநாதசுவாமி அநாதி மூர்த்தியாக எழுந்தருளி, ஐந்தொழில் நடத்தலால் இது அநாதி மூர்த்தி தலமாகும். இத்தலம் கயிலையை விட மேலாகும். இத்தலத்திற்கு ஆதியும், அந்தமும் இல்லை. இத்தலத்தை அடைந்தவர்க்கு மீண்டும் பிறப்பு இல்லை. இக்கோயில் ஆவுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.

திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பிகை யோகாம்பிகை எனவும், சிவ யோக நாயகி எனவும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் கருவறையில் யோகபீடம் மட்டுமே காணப்படும். அந்த பீடத்தின் மேல் யோகாம்பிகை சிவயோகம் புரிகின்றார்.

தீர்த்தங்கள்:

திருப்பெருந்துறையில் ஆன்மநாதரால் ஆதியில் உண்டானவை ஒன்பது தீர்த்தங்கள்.

1. சிவ தீர்த்தம்

இது அம்பாள் சந்நிதிக்கு எதிரே கிணறு ரூபமாக இருக்கிறது. இதற்கு ஆத்மகூபம், ஆன்மநாத கூபம் என்றும் பெயர்கள் உண்டு. இதன் தீர்த்தம் ஆன்மநாதர்க்கு அபிஷேகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

2. அக்கினி தீர்த்தம்

இது ஆன்மநாதர் ஆலயத்தில் தென்மேற்கில் குளமாக இருக்கிறது. இதற்கு சக்தி தீர்த்தம், திருத்தமாம் பொய்கை என்ற பெயர்கள் உண்டு. இதன் தீர்த்தத்தை கண்டாலும், தொட்டாலும், பருகினாலும், நீராடினாலும், நினைத்த பயனை பெறலாம்.

3. தேவ தீர்த்தம்

இது ஆன்மநாதர் ஆலயத்தின் எதிரே தெற்கு திசையில் நெல்லியடி என்ற இடத்தில் பெரிய தடாகமாக விளங்குகிறது. இதற்கு நாததீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இத் தீர்த்தத்தில் நீராடுவோர் இம்மை இன்பமும், மறுமை போகமும் அனுபவித்து இறுதியில் சிவனடி சேர்ந்து பேரின்பம் எய்துவர்.

4. முனிவர் தீர்த்தம்

இது திருக்கோயிலின் வடக்கு வீதிக்கு அருகில் ஓடையாக இருக்கிறது. இதற்கு விந்து தீர்த்தம், ரிஷி தீர்த்தம் என்ற பெயர்களும் உண்டு. இதில் நீராடினால் சகல பாதகங்களும் நீங்கும்.

5. அசுர தீர்த்தம்

இது திருக்கோயிலின் மேற்கு திசையில் இருக்கிறது. இதற்கு சதாசிவ தீர்த்தம், குளிர்ச்சிக்குளம், என்ற பெயர்களும் உண்டு. இதில் நீராடுவோர் பாவங்கள் நீங்கி வீடுபேறு அடைவார்கள்.

6. வாயு தீர்த்தம்

இது ஆன்மநாதர் ஆலயத்திற்கு வட மேற்கு திசையில் இருக்கிறது. இதற்கு மகேச தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இத் தீர்த்தத்தில் நீராடினால் தீராத வியாதிகள் தீரும்.

7. சிவகங்கை தீர்த்தம்

இது ஆன்மநாதர் ஆலயத்திற்கு வடகிழக்கே உள்ள கைலாசநாதர் திருக்கோயிலுக்கு வடக்கே உள்ளது. இதற்கு உருத்திர தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இதில் நீராடுவோர் கைலாய பதவி பெறுவார்கள்.

8. நாராயண தீர்த்தம்

இது திருக்கோயில் வடக்கு வீதியில் பெருமாள் கோயிலுக்கு மேற்கே ஓடை ரூபமாக இருக்கிறது. இதற்கு விஷ்ணு தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. இதில் மூழ்குபவர்கள் முப்பகையும் நீங்கி மெய்ஞானம் பெற்று வீடு பேறு அடைவார்கள்.

9. பிரம தீர்த்தம்

இது திருக்கோயிலுக்கு மேற்கு திசையில் இருக்கிறது. இது முதன்மையப்பர் சந்நிதிக்குளம் என்று இப்போது சொல்லப்படுகிறது. இதில் மூழ்குபவர்கள் மகா பாதகங்கள் எல்லாம் நீங்கப் பெறுவர்.

இதையும் படியுங்கள்:
முருகனின் அபூர்வ வடிவங்கள் இருக்கும் கோவில்கள் பற்றிப் பார்க்கலாம்!
Avudaiyarkoil

நவந்தருபேதமான ஒன்பது தீர்த்தங்களேயன்றி மேலும் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. அவை:

1 அறுபத்து நான்கு கோடித்தீர்த்தம்

இறைவனின் திருவருளால் இத்தலத்தில் வெட்டின இடமெல்லாம் நீர் பெருகியது. இப்படி வெட்டி, நீர் வரக் கண்ட குளங்களே அறுபத்து நான்கு கோடி தீர்த்தம் ஆகும்.

2 வெள்ளாறு

இது ஆன்மநாதர் கோயிலுக்கு வடக்கே ஓடுகிறது. இதற்கு ஆனந்த வெள்ளாறு என்ற பெயரும் உண்டு.

3 திருத்தொட்டித் தீர்த்தம்

ஆன்மநாதருக்கும் யோகாம்பிகைக்கும் அபிஷேக நீர் தேங்கி இருக்கிற தொட்டி திருத்தொட்டி தீர்த்தமாகும். இந்த நீரை முகர்ந்து நீராடுகிறவர்கள். உடலைப் பற்றிய பல நோய்களும், உயிரைப் பாதித்து இருக்கிற மலப்பிணியும் நீங்கிப் பாதகங்களும் நீங்கப் பெறுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com