பைரவரைப் பணிவோம்!

பைரவரைப் பணிவோம்!
Published on

சிவனுக்கு – ஈசான்யம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து முகங்கள். பிரம்மாவுக்கு நான்கு முகங்கள். எனவேதான் அவரை நான்முகன் என்று அழைக்கிறோம். ஆனால், படைப்புக் கடவுளான பிரம்மாவும் ஐந்து முகங்களுடன்தான் தோன்றினார். அப்படியென்றால் அவரது ஒரு முகம் என்னவாயிற்று? இந்தக் கேள்விக்கான விடையில்தான் பைரவரின் பிரபாவம் அடங்கியிருக்கிறது. கூர்ம புராணத்திலிருந்து அதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

ருமுறை, மேருமலையில் தவசீலர்களான பெரும் முனிவர்கள் தவமிருந்த காட்டுப் பகுதிக்கு வந்தார் பிரம்மா.

“முனிவர்களே! படைக்கும் கடவுள் யார்?” - அவர்களிடம் கேட்டார் பிரம்மா.

“தாங்கள்தான்! அதிலென்ன சந்தேகம்?” என்றார்கள்  முனிவர்கள். பிரம்மா அகம்பாவத்தோடு சிரித்தபடி, “நானே பரப்பிரம்மம், நானே உலக முதல்வன்” என்றெல்லாம் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டார். பிரம்மா ஏன் இப்படிப் பேசுகிறார் என்று புரியாமல் திகைத்தனர் முனிவர்கள். அந்த சமயம் பார்த்து அங்கே வந்து சேர்ந்தார் திருமால். பிரம்மாவின் அகந்தையைப் பார்த்து சினம் கொண்ட திருமால் முனிவர்களிடம்,

“உலகத்தைக் காத்து ரட்சிப்பது யார்?” என்றார்.

“நாராயணரே! தாங்கள்தான்” என்றார்கள் முனிவர்கள். “அப்படியென்றால், நானே முழு முதற் கடவுள்; உலக முதல்வன்” என்றார் விஷ்ணு. பிரம்மா ஆத்திரம் தலைக்கேற, ‘நானே முதல்வன்’ என்று சொல்ல, விஷ்ணுக்கும் பிரம்மாவுக்கும் பெரும் மோதல் உருவானது. அப்போது அங்கே பிரசன்னமானார் சிவபெருமான்.

சிவனைப் பார்த்ததும், “வா... மகனே வா” என்று அவரைக் கிண்டலடித்தார் பிரம்மா. அத்தோடு சும்மா இருந்திருந்தால் பரவாயில்லை. “நீயோ அழிக்கும் சக்தி; நானோ படைக்கும் சக்தி. முழு முதற் கடவுள் யார்? நீயே சொல்; சுடுகாட்டில் திரியும் நீ, எப்படி முழு முதற் கடவுள் ஆகமுடியும்?” - பிரம்மா ஆணவமாகப் பேசப்பேச, சிவனுக்கு ஆத்திரம் தலைக் கேறியது. அவரது ஒரு முகமான வாமதேவத்தில் இருந்து நெருப்பு ஜ்வாலை வீசியது. சிவனின் அனல் பறக்கும் கோபத்தைப் பார்த்தும் பிரம்மா வாயடைக்கவில்லை,

தொடர்ந்து அகந்தையோடு பேசினார். மேலும் தாங்க முடியாமல் சிவன், அக்னி ஜ்வாலையிலிருந்து பிரம்மாவுக்கு பதிலடி கொடுக்க பைரவரை அனுப்பினார். ஆவேசமாக பிரம்மா முன் வந்த பைரவர், ஐந்தாவது முகத்தைப் பார்த்து ஓர் அடி கொடுத்தார். அந்த முகம் பறந்து போனது. இனியும் தாமதித்தால் அழிவுதான் என்பதை உணர்ந்த பிரம்மா, தடாலென சிவபெருமான் காலில் விழுந்து, தப்பித்தார்.

பிராமணனான பிரம்மாவைத் தாக்கியதால், பைரவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அடித்து வீழ்த்திய பிரம்மாவின் ஐந்தாவது கபாலம், பைரவரின் கரங்களில் வந்து ஒட்டிக் கொண்டது. தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க, பல தவசீலர்களின் ஆசிரமங்களுக்குப் போனார் பைரவர். ஆனாலும், தோஷம் நீங்கவில்லை. இறுதியாக, திருமாலைப் பார்க்கப் போனார். ஆனால், திருமாலின் தளபதியான விஷ்வக்சேனர் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆத்திரமுற்ற பைரவர், சூலத்தால் அவரைக் குத்தி அதில் அவரை கோத்துக் கொண்டார். உள்ளே போய் திருமாலை வணங்கி தோஷம் போக வழி கேட்டார். அதிர்ந்துபோன திருமால், “நீ காசிக்குச் சென்று, கங்கையில் ஸ்நானம் செய். தோஷம் நீங்கும்” என்றார்.

கையில் கபாலமும் சூலத்தில் விஷ்வக்சேனரும் இருக்க, பூலோகத்துக்கு வந்தார் பைரவர். அவருடன் ஒரு நாயும் சேர்ந்து கொண்டது. நாய், தர்ம தேவதையின் குறியீடு. (மகாபாரதத்தின் இறுதியில் பஞ்ச பாண்டவர்கள் சொர்க்கத்துக்குப் போகும் போது தருமரை ஒரு நாய் பின் தொடரும். ஆனால், சொர்க்கம் செல்லும் ரதத்தில் நாயை ஏற்ற மறுப்பார்கள். ‘அப்படியென்றால் நானும் வரவில்லை’ என்பார் தர்மர். ‘உன்னைச் சோதிக்கவே வந்தேன் தருமா’ என்று பிரத்யட்சமாவாள் தர்ம தேவதை) கங்கையில் ஸ்நானம் செய்ததும் பைரவரின் கையிலிருந்து கபாலம், தொப்பென்று கீழே விழுந்து தோஷம் விலகியது. உயிர் பெற்ற விஷ்வக்சேனர், மீண்டும் திருமால் மாளிகைக்குச் சென்றார். பைரவர் ஈஸ்வரனை அடைத்து அவரது பாதம் பணிந்தார். “இனி என்னுடைய க்ஷேத்திரங்களுக் கெல்லாம் நீயே பாதுகாவலர்” என்று ஆசி கொடுத்து அனுப்பினார் ஈஸ்வரன்.

சிவாலயங்களில் வட கிழக்கில் இருப்பார் பைரவர். பாதுகாவலரான இவருக்கு க்ஷேத்திர பாலகர் என்ற பெயரும் உண்டு. தவிர காலன், கால காலன் என்றும் அழைப்பார்கள். அறியாமை, மாயை, ஆணவப் போக்கை அழித்தொழித்தவர் பைரவர். இவருக்கு வடுகன் (சிறுவன்) என்ற பெயரும் உண்டு.

‘பைரவர்’ என்ற சொல்லுக்கு, தன்னை வழிபடுபவர்களின் துன்பத்தையும், அதற்குக் காரணமான பாபங்களையும் நீக்குபவர் என்ற பொருள் உண்டு. பைரவருக்கு நான்கு கரங்கள். ஒரு கையில் உடுக்கை, மற்றொரு கையில் சூலம்; மூன்றாவது கையில் மண்டையோடு; நான்காவது கையில் பாசக்கயிறு. தலையின் மேல் எழும் நெருப்பு ஜ்வாலைகள். சிவக்ஷேத்திரங்களில் எட்டு திக்கையும் காவல் காப்பதால், அஷ்ட பைரவராகவும் உருவெடுக்கிறார் பைரவர். அப்படிப்பட்ட அஷ்ட பைரவர் கோயில் கொண்டுள்ள க்ஷேத்திரம் காஞ்சிபுரத்தில் உள்ளது.

காஞ்சிபுரம் நகரின் மேற்கெல்லையில் இருக்கிறார்கள் அஷ்ட பைரவர்கள். அஷ்ட பைரவர்களுக்கும் தனித் தனி சன்னிதிகள் இருக்கின்றன.

சம்ஹார பைரவர் மூலவராக இருக்கிறார். இவருக்கு வயிரவேசப் பெருமான் என்ற பெயரும் உண்டு. இந்த வயிரவரை வணங்கினால் பிறவிப்  பெருங்கடலை சுலபமாக நீந்தி சிவனடியை அடைய முடியும் என்கிறது காஞ்சி புராணம்.

விரித்த பல் கதிர் கொள் சூலம்

வெடி படுத மரு கங்கை.

தரித்தோர் கோல கால

பயிரவனாகி வேழம்

உரித்து உமை அஞ்சக் கண்டு

ஒண்திரு மனிவாய் விள்ளச்

சிரித்து அருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வனாரே

என்கிறார் திருநாவுக்கரசர்.

பத்தாம் நூற்றாண்டில் உத்தம சோழனால் கட்டப்பட்ட கோயில். அஷ்ட பைரவர்களும் லிங்க வடிவமாகக் காட்சி தருகிறார்கள். சன்னிதிகளின் மேல் விதானத்தில் வாகனங்களின் பின்னணியில் உருவத் தோடு காட்சி தருகிறார்கள். மூலவர் சம்ஹார பைரவருக்குப் பின்னால், சுவரில் புடைப்புச் சிற்பமாக சோமாஸ்கந்தர் இருக்கிறார். இது பல்லவர் காலத்தை ஒட்டியது எனலாம். கோயிலில் துர்க்கை, நவகிரகம், சனீஸ்வரன் மற்றும் அய்யன் ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com