

துலாம் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தராசுக்கோலில் உள்ள முள் நடுவில் நிற்பதுபோல் யார் பக்கமும் சாராமல் நடுநிலையில் இருப்பவர் நீங்கள். பிறகேன் டென்ஷன்? இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் உங்களின் நேர்மையை. பொறுமைக்குப் பரிசு தராமலா போய்விடுவான்? தரப்போகிறான் பாருங்கள் இந்தப் பராபவ வருடம்.
‘பொறுமை கசக்கும்; அதன் பலனோ இனிக்கும்’ என்ற அரதப்பழசான பழமொழி ஒன்று உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்று இந்த ஆண்டுதான் உணரப்போகிறீர்கள்.
நான் மட்டும் ஏன் பொறுத்துப் போகவேண்டும்? அவள் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறாளா? இவன் பொறுத்துப் போகிறானா என்றெல்லாம் கேள்விகள் கேட்டீர்களே? இப்போது பார்த்தீர்களா அது அளிக்கும் அவார்ட் மற்றும் ரிவார்ட் எந்த அளவு கனமானது என்று?
சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு அல்லது மகனுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், வெளியில் உள்ள பொறாமைக்காரர்களின் தலையீட்டால் குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும். அது உங்கள் மனசை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது மட்டும் உங்களின் பொறுப்பு என்பதில் உறுதியாக இருங்கள். இந்தப் பக்கத்து உறவினர்களால் அந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்து உறவினர்களால் இந்தப்பக்கத்திலும் குடும்பப் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதை நன்கு எதிர்பார்த்துக் கேடயத்துடன் தயார் நிலையில் இருங்கள். ஆமாம், அதென்ன கேடயம் என்று கேட்கிறீர்களா? உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பொறுமையைவிடப் பெரிய கேடயம் இல்லை என்பதை உணர்ந்தவர்தானே நீங்கள்.
இன்னொரு விஷயத்தில் உங்களை நான் ஜாக்கிரதைப் படுத்தியே ஆக வேண்டும். ஜோக் அடிக்கிறேன் பேர்வழி என்று யாரிடமாவது ஏதாவது பேசி வைத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்களைப் பொருத்த வரையில் வேண்டுமானால் அது நகைச்சுவையாக இருக்கலாம். அவர்களை அது சுடும். ஏன் தெரியுமா? உங்களையும் அறியாமல் ஏதேனும் உண்மையைச் சொல்லி வைத்துவிடுவீர்கள். உண்மை சுடுமல்லவா?
உங்கள் குடும்ப விஷயங்களில் யாருடைய தலையீட்டையும் அனுமதிக்க வேண்டாம். அது உங்கள் பெற்றோராக இருப்பினும். அலுவலகப் பணியாளர்களுக்கு வேலைப் பளு மற்றும்/ அல்லது கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். உங்களை நம்பி அப்படி ஓர் பொறுப்பை ஒப்படைத்தது பற்றி மனதில் பெருமிதம் ஏற்படும். எனவே, அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். இத்தனை உழைத்தும் மேலிடம் நம்மைக் கண்டுகொள்ளவில்லையே என்றோ, நமக்குப் பின்னால் உள்ளவர்களும் நம்மைவிடக் கல்வித் தகுதி குறைந்தவர்களும் ரேஸில் நம்மை முந்திக்கொண்டு போகிறார்களே என்றும் குடைச்சல் ஏற்பட உங்கள் மண்டையை அனுமதிக்காதீர்கள். அப்புறம் நம் மண்டைக்குடைச்சல் அத்தனையும் அவசரமான மற்றும் தவறான புரிதலின் காரணமாக ஏற்பட்டது என்று உணர்ந்து அசடு வழிய வேண்டியிருக்கலாம். கடைசியில் ஓடி வந்தாலும் முதலில் மூக்கை நுழைக்கும் குதிரையைப்போல் உங்களை முந்தியவர்களையெல்லாம் முந்தப் போகிறீர்கள். அதுவும் இந்த ஆண்டுதான் நிகழும். நம்பவில்லை என்றால் பங்குனி மாசம் திரும்பிப் பார்த்து “அட... ஆமாம்... வேதா சொன்னது கரெக்ட்தான்” என்று சொல்லப் போகிறீர்கள் பாருங்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும் என்றால் அனுசரித்துப் போவதில் என்ன தயக்கம்? கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். மனஸ்தாபத்துக்குக் காரணமானவர்களைத் தொடர்பு எல்லைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். கிட்டே சேர்க்கவே வேண்டாம்.
பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கியப் பணிகளை மேற்கொள்வீர்கள். இப்போது நான் சற்று சிரமப்பட்டால் என்ன? என் குழந்தைகள் நன்றாய் இருப்பார்களே என்று நினைத்துச் செயல்படுவீர்கள்.
அதற்காக அவர்கள் இப்போதே உங்களுக்கு நன்றியுரை வழங்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். இப்போது அவர்களுக்கு உங்கள் செயலின் தீவிரம் புரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. அவர்கள் உங்கள் தியாகத்தையும் முயற்சியையும் உணரும் காலம் ஒன்று பிற்பாடு வரும். அப்போது வட்டிக்கு வட்டி போட்டுத் தங்கள் பாசத்தையும் நன்றியுணர்வையும் காட்டுவார்கள். அப்போது சேர்த்து வைத்து சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்.
உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, அரசியல் பேச வேண்டாம். பெண்களுக்கு எடுத்த காரியம் ஆரம்பத்தில் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் மட்டும் உங்களுக்கே உரித்தான உற்சாகம் -குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு ஒன்று ஏற்படும். அதை நீங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது எதிர்மறை விஷயங்களுக்கு மட்டும்தானா என்ன? சந்தோஷ விஷயங்களுக்கும் அது பொருந்தும் என்பதை உணருவீர்கள். மகன் அல்லது மகளால் மகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் பெருமிதப்படும்படியான விஷயம் ஒன்றை அவர்கள் செய்வார்கள். அவர்களின் அசல் திறமையைச் சற்றுக் குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள்தானே? அதை உணருவீர்கள்.
நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களின் தெய்வபக்தி அதிகரிக்கும் என்று சொல்வதைக் காட்டிலும் பக்தி உங்கள் உள்ளத்தில் உள்ளது என்பதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படும் என்பதே பொருத்தம்.
கமிட் செய்துகொண்டு வாக்குக் கொடுத்ததன்படி எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பெரிய பாராட்டையும் புகழையும் எதிர்பார்த்திருந்த உங்களுக்குச் சிறு ஏமாற்றம் ஏற்படலாம். ஆனால், அது சில காலத்தில் மனசிலிருந்து காணாமல் போய் அடுத்த வேலையைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
நீங்கள் நினைத்ததையும்விடப் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மார்க்பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். அதோடுகூட, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் கவனமும் உங்கள்மீது விழும். அவர்களின் அன்பும் பிரியமும் கிடைக்கவும் செய்யும்.
வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சில படிகள் முன்னேற்றம் தெரியும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாணவர்களுக்குத் தடைகளை தாண்டிக் கல்வி கற்கும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்துக் கல்வியை முழுமையாக முடிப்பீர்கள். மகான்கள் மற்றும் குரு தரிசனம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் திறமையை உணருங்கள். உணர்வீர்கள்.
ஏற்கனவே, கடந்த ஆண்டுகளில் செய்து முடித்த காரியங்களினால் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கும் சிறிதளவு வாய்ப்பு உண்டு. உங்கள் முன்னேற்றத்துக்கு தடை எதுவும் இருக்காது. வருடத்தின் பிற்பாதியில் உங்கள் சோம்பல் உங்களைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டால் போதுமானது.
வீட்டு உபயோகத்துக்கு மட்டுமின்றி உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான புதிய பொருள்களின் சேர்க்கையும் உண்டாகும். உடன் பிறப்புக்களின் நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பொதுவாகவே சற்று அதிக ஜாக்கிரதை உணர்வு இருந்தாலும்கூட, இந்த வருடம் நீங்கள் மேலதிக கவனமாக இருக்க வேண்டியது உங்களின் ஆரோக்ய விஷயத்தில்தான். சற்று எச்சரிக்கையுடன் பார்த்துக்கொள்வது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்னைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மற்றவர்களிடம் கொடுக்காத பொறுப்பை அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதன் மூலம் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும் என்றாலும் உங்கள் மேல் மற்றவர்களுக்கு உள்ள பொறாமையும் அதிகரிக்கும். பொது இடங்களில் யாருடைய வம்புதும்புக்கும் போகாதீர்கள். ‘நீங்க உண்டு; உங்கள் வேலை உண்டு’ என்று இருங்கள். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
சிலருக்குக் கண் பரிசோதனை செய்து கண்ணாடி போடவேண்டி வரலாம். அது ஒன்றும் கவலைப்பட வேண்டிய விஷயம் இல்லை. இன்னும் கேட்டால் உங்களின் தோற்றப்பொலிவு இந்த ஆண்டு அதிகரிப்பதற்கான காரணிகளில் இந்தக் கண்ணாடியும் சேர்ந்துகொள்ளும். மற்றவை உங்களின் அலங்கார ஆர்வம் மற்றும் நடை உடை பாவனைகளில் நீங்கள் செய்யப்போகும் மாற்றம். என்ஜாய்.
மற்ற ராசிபலன்களை படிக்க Click Here