வாழ்வை செழிப்பாக்கும் செவ்வாய் தோஷப் பரிகாரம்!

வாழ்வை செழிப்பாக்கும் செவ்வாய் தோஷப் பரிகாரம்!
Published on

செவ்வாய் தோஷம் என்றாலே பலர் பயப்படுவார்கள். காரணம், கல்யாணத்துக்கு பெரும் தடையாக இருக்கும் தோஷங்களில் இது முக்கியமான தோஷம் ஆகும். பொதுவாக, ஆண் அல்லது பெண் யார் ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகக் கட்டத்தில் லக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷம் ஆகும்.

மேற்சொன்ன 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் மட்டும் அதை செவ்வாய் தோஷம் என்று சொல்லிவிட முடியாது. இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. அதாவது, மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் அது தோஷம் இல்லை. அதேபோல், குரு, சூரியன், சனி, சந்திரனுடன் சேர்ந்திருந்தாலும் தோஷமில்லை. சூரியன், சந்திரன், குரு, சனி ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என ஜோதிடம் கூறுகிறது. அதேமாதிரி சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. மேலும், 2ம் இடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷமில்லை. 4ம் இடம் மேஷம், விருச்சிகமானால் தோஷமில்லை. 7ம் இடம் கடகம், மகரமானால் தோஷமில்லை. 8ம் இடம் தனுசு, மீனம் இருந்தால் தோஷமில்லை.

சரி, செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம்தான் என்னவென்றால், மனதாலும் உடலாலும் முற்பிறவிகளில் செய்த பாவ செயல்களின் விளைவுகளே செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணமாகிறது. மற்றவர்களின் நலனை பாதிக்கக்கூடிய வகையில் செய்யும் செயல்களே பின்பு பாவப் பலனாக வந்து சேர்கிறது.

செவ்வாய் தோஷத்தால் உண்டாகும் பிரச்னைகள் என்னவென்றால், திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மண வாழ்க்கை, சந்தேக குணம், இடைக்கால பிரிவு, குழந்தையின்மை, மணமுறிவு, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை, முரட்டு பிடிவாதம், ஒழுக்கமின்மை, மாங்கல்ய பலமில்லாமை, சகோதர உறவுகளுடன் ஒற்றுமைக் குறைவு, பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி, ஆயுள் பலமின்மை, கடன் தொல்லை போன்ற பிரச்னைகள் செவ்வாய் தோஷத்தால் ஏற்படுகின்றன.

செவ்வாய் தோஷத்துக்கான பரிகாரங்கள்: முருகன் மற்றும் துர்கை வழிபாடு சிறந்த பலன் தரும். அடிக்கடி அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகனை வழிபடவும். அங்குள்ள நவகிரக சன்னதி செவ்வாயையும் வழிபடவும். வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்வது நல்ல பலன் தரும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது நல்ல பரிகாரமாகும். அதேபோல், பிறந்த தேதி அல்லது கிழமைகளில் நவகிரக செவ்வாய்க்கு அர்ச்சனைச் செய்வதால் நன்மை உண்டாகும். இதுபோன்ற பரிகாரங்களைச் செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் விலகி, வாழ்க்கை செழிப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com