தன்னில் தானே நிலைபெற்ற இறைவன்!

தன்னில் தானே நிலைபெற்ற இறைவன்!
Published on

காஞ்சி மகாபெரியவர் கும்பகோணம் காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீ சங்கர மடத்தில் முகாமிட்டிருந்த சமயம். காவிரிக்கு அக்கரையில் இருந்த ஒரு பக்தர் தினமும் பெரியவரின் பூஜைக்காகப் பூக்கள் கொண்டு வந்து சமர்ப்பிப்பது வழக்கம். ஆனால் பூ கொடுக்கும் பக்தர், “நாம் கொண்டு வந்து பூக்களைக் கொடுப்பதால்தான் இந்த மடத்தில் பூஜையே நடக்கிறது” என்று மனதில் எண்ணி கொண்டு அந்தக் கர்வத்தோடு பூ கொடுப்பதைக் கவனித்தார் காஞ்சி பெரியவர்.

மறுநாள் அந்த பக்தர் பூ கொண்டு வந்தபோது அவரை அழைத்த பெரியவர், “நீ காவிரிக்கு அக்கரையில் இருந்துதானே பூ கொண்டு வருகிறாய்? வரும் வழியில் காவிரி நதியை கடந்து வருகிறாய் அல்லவா? ஒரு புண்ணிய நதியைக் கடந்தால், அந்த நதியில் இறங்கி ஆசமனம் பண்ணி விட்டுத்தான் கடக்க வேண்டும். அல்லது நதியில் ஒரு காசு போட வேண்டும். இவற்றில் எதையாவது நீ செய்தாயா?” என்று கேட்டார்.

உடனே அந்த பக்தர், “ஓ! எனக்குத் தெரியாத சாஸ்திரமா? தினமும் நான் காவிரியில் ஆசமனம் செய்து விட்டுத்தான் காவிரியைக் கடந்து வருகிறேன்!” என்று பதில் அளித்தார்.

அதைக் கேட்ட பெரியவர், “அப்படியா? ரொம்ப சந்தோஷம்! ஆசமனம் செய்யும்போது, பூவைக் கையில் வைத்துக்கொண்டே செய்ய முடியாதே! எச்சில் பட்டுவிடுமே! பூக்களை என்ன செய்வாய்?” என்று கேட்டார்.

“பூக்களைப் படித்துறையில் வைத்து விட்டு ஆசமனம் செய்வேன்!” என்று சொன்னார் பக்தர்.

“மனிதர்களின் கால்படும் தரையில் இறைவனின் பூவை வைக்கலாமா?” என்று கேட்டார் பெரியவர்.

“நான் படியை ஊதிச் சுத்தம் செய்து விட்டு அதன்பின்தான் பூவை வைப்பேன்!” என்றார் பக்தர்.

“அப்படியானால் இது எச்சில் பூ! இதை பூஜைக்குப் பயன்படுத்த முடியாது’’ என்று சொல்லி, பூக்களைத் திரும்பக் கொடுத்து விட்டார்.

கர்வத்துடன் வந்த பக்தரின் முகம் வாடியதைக் கண்ட பெரியவர், “இதோ பார்! காவிரி என்பது புண்ணிய நதி! புண்ணிய நதியின் படித்துறை தூய்மையானது. எனவே அங்கு பூவை வைத்தாலும் தோஷம் இல்லை. நீ வாயால் ஊதிப் படித்துறையைச் சுத்தம் செய்வதாக எண்ணுவதுதான் தவறு!” என்று விளக்கம் அளித்தார்.

ர்வம் நீங்கிய அந்த பக்தர் வேறு பூக்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த அளவில், அதைப் பெற்றுக்கொண்ட காஞ்சி பெரியவர், அவரிடம் ஒரு கதை சொன்னார்.

“பாடகர் ஒருவர் பெருமாள் கோயிலில் இனிய பாடல்கள் பாடி வந்தார். தன்னைப் போல் பாடுவதற்கு உலகில் வேறு யாரும் இல்லை என்ற கர்வம் அவரிடம் இருந்தது. அவர் மெய்மறந்து பெருமாளைப் பற்றிப் பாடும்போது, சில நேரங்களில் பெருமாள் நாட்டியமே ஆடுவார்.

இந்நிலையில் ஒருநாள் அந்தப் பாடகர் பெருமாளிடம்,’எனக்கு முக்தி கொடு!’ என்று வேண்டினார்.

அதற்குப் பெருமாள், ‘நீ ஆணவத்தை விட்டு விட்டு என்னிடம் சரணாகதி செய்தால்தான் முக்தி அளிப்பேன். இத்தனை ஆணவத்தோடு இருப்பவனுக்கு முக்தி தர மாட்டேன்!’ என்று சொல்லி விட்டார்.

‘நான் இத்தனை நாள் உனக்காகப் பாடினேனே!’ என்றார் பாடகர்.

‘அதற்குத்தான் நான் நடனம் ஆடிக் காட்டி விட்டேனே! அந்தக் கணக்கும் இந்தக் கணக்கும் சரியாகிவிட்டது!’ என்று பதில் சொல்லி விட்டார் பெருமாள்.

இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், புதிதாகப் பூக்கள் கொடுத்தோ, பாட்டு பாடியோ, பூஜை செய்தோ இறைவனுக்கு பெருமை உண்டாக வேண்டிய தேவையே இல்லை. இறைவன் என்றென்றும் எல்லையில்லாத மேன்மையோடுதான் இருக்கிறார். பக்தர்களான நமது கடமை இறைவனுக்கு தொண்டாற்றுதல் என்பதால் தொண்டுகள் புரிகிறோமே ஒழிய, இவற்றால் அவருக்குப் புதிய பெருமைகள் வரப்போவதில்லை.

பெருமாளின் கூர்மாவதார வரலாற்றை அறிவோம். மந்தர மலையையே தன் முதுகில் கூர்ம மூர்த்தி தாங்கினாரே! அந்தக் கூர்ம மூர்த்தியை யார் தாங்கினார்கள்? இன்னொருவர் அவரைத் தாங்கவேண்டிய தேவை இல்லாதபடி, தன்னில் தானே நிலை பெற்றிருக்கிறார் திருமால்! இதைப் புரிந்துகொள்” என்று அறிவுரை கூறி அந்த பக்தரை அனுப்பி வைத்தார்.

மந்தர மலையைத் தாங்கிய கூர்ம மூர்த்தி, தன்னைத் தாங்க இன்னொருவர் தேவைப்படாதபடி, தன்னில் தானே நிலைபெற்றிருந்தபடியால், ‘ப்ரதிஷ்டித:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ப்ரதிஷ்டித:’ என்றால் நிலை நிற்பவர் என்று பொருள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com