கேது பகவான் சொரூபத்தில் திருநீலகண்டேஸ்வரர்!

கேது பகவான் சொரூபத்தில் திருநீலகண்டேஸ்வரர்!
Published on

சென்னை, போரூருக்கு அருகில் கெருகம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆதிகாமாட்சி சமேத திருநீலகண்டேஸ்வரர் ஆலயம். இது கேது பரிகார தலமாகத் திகழ்கிறது. இத்தலத்தினை, ’வட கீழ்ப்பெரும்பள்ளம்’ என்று அழைக்கின்றனர். கேது பகவான் ஞானகாரகன் என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்டென்று ஞானப்பாதைக்குத் திரும்புவார்கள். ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அது விரைவில் வெற்றியைத் தராது. சென்னையைச் சுற்றி அமைந்துள்ள நவகிரகத் தலங்களில் இது கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது.

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது வலி மிகுதியில் வாசுகி பாம்பு நஞ்சைக் கக்கியது. பாற்கடலில் இருந்தும் நஞ்சு உருவானது. இவை இரண்டும் சேர்ந்து ஆலாலம் எனும் கொடிய விஷமாய் மாறின. இவற்றால் யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக ஈசன் அந்த நஞ்சை விழுங்கினார்.  இதனால் பதைபதைத்த பார்வதி தேவி ஈசன் விழுங்கிய நஞ்சு, தொண்டையை விட்டுக் கீழே இறங்காதவாறு ஈசனின் கண்டத்திலேயே நிலை நிறுத்தினார். அன்று முதல் ஈசன் திருநீலகண்டேஸ்வரர் ஆனார். திருநீலகண்டேஸ்வரர், ஆதிகாமாட்சியோடு அருளும் அற்புதத் திருத்தலம் இது.

தெற்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு சிறிய நுழைவாயிலோடு கோயில் காட்சி தருகிறது. கருவறையில் ஈசன் திருநீலகண்டேஸ்வரராக லிங்க ரூபத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.  எதிரே நந்திகேஸ்வரர் அமைந்துள்ளார். திருநீலகண்டேஸ்வரரே இத்தலத்தில் கேது பகவானாக அருள்பாலித்து வருவதாக ஐதீகம். இதனால் இத்தலத்தில் கேது பகவானுக்கென தனி சன்னிதி இல்லை. லிங்க பாணமே பாம்பின் தலையாகவும், பாம்பின் உடல் பகுதி ஆவுடையாரைச் சுற்றியும் அமைந்து நீர் ஊற்றும் பகுதியில் பாம்பினுடைய வால் பகுதி முடிவு பெறுகிறது. எனவே, இத்தலத்தில் திருநீலகண்டேஸ்வர் கேது பகவானாக வழிபடப்படுகிறார்.

அம்பாள் ஆதிகாமாட்சி என்ற திருநாமத்தோடு அழகே வடிவாய் தெற்கு திசை நோக்கி அருளுகின்றார். அம்பாளுக்கு எதிரே மகாமண்டபத்தில் சிம்ம வாகனம் காட்சி தருகிறது. இத்தல விநாயகப் பெருமான் அருள்மிகு ஸ்ரீ சங்கடஹர கணபதி என்ற திருநாமத்தோடு தனிச் சன்னிதியில் அருளுகின்றார். அம்பாள் சன்னிதிக்கு அருகில் ஸ்ரீ காலபைரவர் ஒரு தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் கோயிலில் அமைந்துள்ளார்கள்.  கோயில் முன்மண்டப கற்தூண்களில் கேது பகவான் மற்றும் பைரவர் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வெளிச்சுற்றில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இச்சன்னிதியில் இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில் நடுவில் காளிங்க நர்த்தன கண்ணன் அமைந்து அருள்பாலிக்கிறார்.

சிவனுக்கும் நந்திக்கும் நடுவே உள்ள விதானத்தில் சூரியனை கேது விழுங்குவது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர் கீழே நின்றபடி ஈசனையும் அம்பாளையும் மனமுருக வேண்டிக் கொண்டால் கேதுவின் கெடு பலன்கள் விலகும் என்பது ஐதீகம். தல விருட்சம் வில்வம். இக்கோயிலுக்குத் தீர்த்தம் கிடையாது. சிவ ஆலயங்களுக்குரிய உத்ஸவங்கள் அனைத்தும் இக்கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சிவராத்திரி, ராகு கேது பெயர்ச்சி, பிரதோஷம், பௌர்ணமி, காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, பங்குனி உத்திரத்தன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் (புஷ்பாபிஷேகம்) போன்ற பல உத்ஸவங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

தரிசன நேரம்: காலை 7 முதல் 11 மணி வரை. மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை.

அமைவிடம்: கிண்டி-ராமாபுரம் வழியாக போரூர் செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ளது கெருகம்பாக்கம். போரூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com