

வீரபாகு - முருகப்பெருமானின் முக்கிய படைத் தளபதிகள் ஒருவராவார். நவவீரர்கள் (9 வீரர்கள்) என்பவர்கள் முருகப்பெருமானின் துணிச்சலான தெய்வீகப் பணியாளர்களாவர். இவர்களில் வீரபாகு முதன்மையானவர். கந்த புராணத்தின் படி, நவவீரர்கள் பார்வதி தேவியின் சிலம்பிலிருந்து பிறந்தவர்கள். இவர்கள் சூரபத்மனுடன் நடந்த போரில் முருகப்பெருமானுக்கு உதவியாக இருந்தனர்.
சூரபத்மனும் நெருப்புப் பொறியில் தோன்றிய கந்தனும்:
சூரபத்மன் என்னும் அசுரன் கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் மகத்தான வரங்களைப் பெற்றான். சிவனைத் தவிர வேறு யாருமே அழிக்க முடியாத வரத்தையும், எல்லா உலகங்களையும் ஆளும் அதிகாரத்தையும் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்தான். துன்புற்ற தேவர்கள் சிவபெருமானிடம் தங்களுடைய துயரங்களைச் சொல்லி சூரனை அழிக்கும் படி வேண்டினர்.
தேவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு நெருப்புப் பொறிகளை வெளிப்படுத்தி, தேவர்களை நோக்கி, "ஆறுமுகம் கொண்டவனான இவனே உங்களுடைய துயர் தீர்ப்பான்" என்று அருளினார்.
நவசக்தி தேவியர்:
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய நெருப்புப் பொறிகளின் அனலைத் தாங்க முடியாமல் தேவர்கள் ஓடினர். அருகில் இருந்த பார்வதி தேவியும் வெப்பம் தாங்க முடியாமல் ஓட, அவள் காலில் அணிந்துள்ள சலங்கை சிதறி அதிலிருந்த நவரத்தினக் கற்கள் சிதறி விழுந்தன. அந்த ஒன்பது கற்களில் இருந்தும் 9 தேவியராக நவசக்தி தேவியர் தோன்றினர். அவர்கள் காவல் தெய்வங்களாக இருந்து பார்வதி தேவிக்கு தொண்டு செய்து வரும்படி சிவன் அவர்களை பணித்தார். ஈசனின் திருவுள்ள குறிப்பின்படி அவர்கள் கருத்தரித்தனர். ஆனால் திடீரெனத் தோன்றிய நவதேவியரும் ஈசனருகே நிற்பதைக் கண்ட சக்திதேவி அவர்களிடம் கோபம் கொண்டு அவர்களது கரு பிரசவமாகாமல் நீண்ட காலம் அப்படியே தங்கியிருக்க வேண்டும் என்று சபித்தார்.
வியர்வை முத்துக்களில் இருந்து தோன்றிய லட்சம் வீரர்கள்:
கர்ப்பத்தின் பாரம் தாங்காமல் அவர்களுக்கு வியர்வை கொட்டியது. அந்த வியர்வை முத்துக்கள் வெடித்து சிதறின. அவற்றிலிருந்து கத்தி, கேடயம், சூலம் ஆகிய ஆயுதங்கள் தாங்கிய லட்சம் வீரர்கள் தோன்றினர்.
அம்பிகையின் கோபம் தணிய வேண்டி சரவணப் பொய்கையின் அருகில் தவமியற்றினர். காலம் கனிந்து முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்த தருணத்தில் பார்வதி தேவி நவசக்தியருக்கும் அருள்புரிந்தாள். நவசக்தியரும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றனர்.
நவவீரர்கள்:
மாணிக்கவல்லி வீரபாகுவையும், முத்துவல்லி வீரகேசரியையும், புஷ்பராகவல்லி வீரமகேந்திரனையும், கோமேதகவல்லி வீரமகேஸ்வரனையும், வைடூரியவல்லி வீரபுரந்தரனையும், வைரவல்லி வீர ரட்சகனையும், மரகதவல்லி வீர மார்த்தாண்டனையும், பவளவல்லி வீராந்தகனையும், இந்திரநீலவல்லி வீரதீரனையும் வீரத் திருமகன்களாகப் பெற்றனர். இவர்களில் மிகுந்த பலசாலியாக வீரபாகு விளங்கினார். ஒன்பது வீரர்களும் அந்தந்த மணிகளின் நிறத்திலும், அதற்குரிய உடைகளையும் அணிந்திருந்தனர். இவர்கள் நவவீரர்கள் எனப்பட்டனர். கந்தனை வணங்குபவர்கள் இவர்களையும் வணங்கினால் எதிரிகள் பயம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ்வார்கள்.
ஆறுமுகப்பெருமான்:
தேவர்களை துன்பப்படுத்தி வரும் சூரபத்மனையும் அவனது சகோதரர்களையும் அழிப்பதற்காக அவதரித்துள்ள முருகனுக்குத் துணையாக இருக்க சரவணப் பொய்கையை அடைந்தனர். உலகை ஈன்று ஆளும் அன்னை, சரவணப் பொய்கையில் விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய மகனின் ஆறு உருவங்களையும் இரு கரங்களால் அன்பாக எடுத்து தழுவ, அந்த ஆறு உருவங்களும் ஒன்றாகி, ஓருடல், ஆறுமுகம், பன்னிரு கரங்கள் கொண்ட திருக்கோலத்தை பெற்றார் முருகன்.