தென்னாடுடைய சிவன் குடி கொண்டிருக்கும் தலங்களில் திருபுவனம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இங்கே சிவபெருமான் லிங்க வடிவில் கம்பஹரேஸ்வரராகவும், அர்ச்சா மூர்த்தி வடிவில் சரபேஸ்வரராகவும் எழுந்தருளி இருக்கிறார். பிரமாண்டமான ஆலயம், மூன்று கோபுரங்களுடனும், ஏராளமான சிற்ப வேலைப்பாடுகளுடனும் திகழ்கிறது.
கோயில் புராணம் என்ன?
மஹாவிஷ்ணு மீது கடும் பகை கொண்டிருந்த அரக்கன் ஹிரண்யகசிபு, ‘நாராயணா‘ என்று அவரை யாரும் அழைத்து போற்றி, வணங்கக்கூடாது என்று கடுமையாகக் கட்டளையிட்டான். ஆனால், மைந்தன் பிரகலாதனோ தந்தையின் கட்டளையை மறுத்து நாராயணனின் பெயரையே நாளும் உச்சரித்தான். அதனால் மகனை பலவழிகளில் கொல்ல முயன்றான் அரக்கன். மாலனின் அருளால், பிரஹலாதன் ஒவ்வொரு முறையும் உயிர் பிழைத்தான்.
ஹிரண்யகசிபு வதைக்கப்பட வேண்டிய தருணம் நெருங்கி விட்டதால், தூணிலிருந்து நரசிம்மர் உதித்தார். அவனைத் தன் கூரிய நகங்களாலேயே கிழித்து வதம் செய்தார். தன் பக்தன் பிரஹலாதனைக் கொடுமைப்படுத்திய அவனை வதம் செய்த பின்னும் அவர் உக்ரம் தணியவில்லை.
உலகையே அழிக்கத் தொடங்கினார். தேவர்கள் அனைவரும் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தனர்; திருமாலின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர்.
சிவபெருமான் அவர்களது வேண்டுகோளை ஏற்றார். அண்டமே அஞ்சி நடுங்கும் வண்ணம், உடலில் பாதி யாளியாகவும் மறு பாதி பட்சியாகவும், அபூர்வமான தோற்றத்துடன் சரபேஸ்வரராக எழுந்தருளினார். நரசிம்மருடன் போரிட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. சரபேஸ்வரரின் இறக்கையிலிருந்து பத்ரகாளி வெளிப்பட்டு, நரசிம்மரின் கோபத்தைத் தான் ஏற்று ஜீரணித்தாள். நரசிம்மர் கோபம் தணிந்தார்.
ஆலயத்தில் சரபேஸ்வரர் எழுந்தருளியிருப்பது இந்த வரலாற்றின்படிதான்.
ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. ஏழு நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரம் ஆலயத்துக்கு அழகு சேர்க்கிறது. இரண்டு பிராகாரங்கள். வெளிப்பிராகாரத்தில் யாகசாலையையும், வசந்த மண்டபமும் அமைந்துள்ளன.
வெளிப்பிராகாரத்தைக் கடந்தால் முதற் பிராகாரம். இந்தத் திருச்சுற்றின் வடக்கில் அறம் வளர்த்த நாயகியின் சந்நிதி அமைந்திருக்கிறது. அன்னை தெற்கு நோக்கி நின்றபடி அருள்பாலிக்கிறாள். நடுக்கம் தீர்க்கும் கம்பஹரேஸ்வரருடன் துணை சேர்ந்து பக்தர்களின் உள்ளம் மற்றும் உடல் நடுக்கங்களைப் போக்குகிறாள் அம்மை.
கர்ப்பூர ஆராதனையின் பொன்னொளியில் அன்னையின் திருவதனத்து அருள் புன்னகை ‘அஞ்சேல்‘ என்று அபயமளிக்கிறது.
சிவபெருமான் சரப்பறவை வடிவம் தாங்கி நரசிம்மரின் உக்ரத்தைத் தணித்ததால் சரபேஸ்வரர் என்ற பெயரில் முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் தனிச்சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார்.
யாளியின் உடலும், பறவையின் தலையும் கொண்டு காட்சியருளும் சரபேஸ்வரரை தரிசிக்கும் போது தீயவர்கள் பயத்தில் பரிதவிப்பார்கள். யாருக்கும் தீங்கு விளைவிக்காமல், ஊழ்வினையால் அல்லல்களை அனுபவிக்கும் பக்தர்களோ தங்களைக் காத்தருள ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் தங்கள் பக்கம் இருக்கும் உண்மையை உணர்ந்து ஆனந்தம் எய்துவார்கள்.
சரபர் சகல தோஷங்களையும் நீக்குபவர். பகைவர்களிடமிருந்து காப்பவர். தீராத நோய்களைத் தீர்ப்பவர். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவற்றைப் போக்குபவர். ஞாயிற்றுக் கிழமை ராகுகாலத்தில் இவரது சந்நிதி வாசலில், பதினோரு தீபங்களை ஏற்றி வழிபட்டால் நிச்சயம் நன்மைகள் விளையும்.
அன்னையின் சந்நிதியைக் கடந்து முன் மண்டபம் சென்றால், விநாயகர், முருகர் ஆகியோரை தரிசிக்கலாம். அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் மூலவர் கருவறை நம்மை வரவேற்கிறது. தூங்கா விளக்குகளின் பொன்னொளியில் கம்பஹரேஸ்வரர் அற்புத தரிசனம் நல்குகிறார். தெள்ளு தமிழில் ‘நடுக்கம் தீர்த்த பெருமான்‘ என்று வழங்கப்படுகிறார். பிரகலாதன், இந்திரன் முதலாதி தேவர்கள், பிரம்மா, மக்கள் ஆகியவர்களின் கம்பத்தினை (நடுக்கத்தினை) நீக்கியருளியதால் இவர் வடமொழியில் கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
வடக்கு வெளிப் பிராகாரத்தில் ஸ்தல விருட்சமான வில்வ மரம் நெடிதுயர்ந்து வளர்ந்திருக்கிறது. பெருமானுக்கு உகந்த வில்வமரத்தை, ஈசனையே வணங்குவது போல் பக்தர்கள் வலம் வந்து வணங்குகிறார்கள்.
புலன்களை ஒடுக்கி, தான் என்ற அகந்தையைப் போக்கிக் கொள்ள சரபேஸ்வரர் வழிபாடு உதவி செய்யும்.
கும்பகோணம் – மயிலாடுதுரை வழியில் 18 கி.மி. தொலைவில் இக்கோயில் அமைந்திருக்கிறது.