‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மார்கழி மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார். தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இது, ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது. தேவர்களுக்கு அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படும் இம்மாதம் முழுவதும் இறைவழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் இம்மாதத்தில் வருகிறது. எனவே, சுத்தமான காற்றை சுவாசித்து உடல் நலனைப் பேணும் பொருட்டு இம்மாதத்தில் அதிகாலை வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த அதிகாலை இறைவழிபாடு குறித்து மாணிக்கவாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர். கோயில்களிலும் அதிகாலையில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
மார்கழி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில்தான் மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே, ‘மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி’ என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. இம்மாதத்தில் செய்யப்படும் ம்ருத்யுஞ்ச ஹோமம் சிறப்பானதாகும். மேலும், இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உத்ஸவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
திருவாதிரை திருவிழா மார்கழி பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது சிவபெருமான் அம்சமான நடராஜ பெருமானுக்கானதாகும். திருவாதிரையைக் கொண்டே சிவபெருமானுக்கு, ‘ஆதிரையன்’ என்ற பெயர் வழக்கத்தில் உள்ளது. இவ்விழா பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். திருவாதிரை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகத்தின் ஒருசில பகுதிகள், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் ஆகியோரால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாகக் அனுசரிக்கப்படுகிறது. இவ்விழாவின்போது திருவாதிரைக் களியும், ஏழுகறிக் கூட்டும் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன. இன்று மேற்கொள்ளப்படும் விரதம் சிவபெருமானுக்கு மிக உகந்ததாகும்.
திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரை தினத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, திருவாதிரையோடு சேர்த்து மொத்தம் பத்து நாட்கள் ஆகும். இந்த நாட்களில் அதிகாலையில் எழுந்து நீராடி, சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இந்த விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர். இவ்விரதத்தினை பெரும்பாலும் கன்னிப்பெண்களே கடைப்பிடிப்பர். இந்த விரதத்தின்போது திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன. வழிபாட்டின்போது சுவாமிக்கு பிட்டு படைக்கப்படுகிறது. இதனால் இது, ‘பிட்டு வழிபாடு’ என்று அழைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி வழிபாடு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில் கொண்டாடப்படுவதாகும். இது திருமாலை வணங்கும் திருநாளாகும். பெரும்பாலும் அனைத்து இந்து மக்களாலும் இன்று விரதம் மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரத முறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. ‘காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது இவ்விரதம் பற்றிய பழமொழி. இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்வாகும். இன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு விழித்திருந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்பது நம்பிக்கை.
ஆயர்பாடி கோபியர்கள் மார்கழி மாதம் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாயனி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதம் என்பதால் இது, ‘பாவை நோன்பு’ என்று வழங்கலாயிற்று. ஆண்டாள் பாவை நோன்பினை மேற்கொண்டே அரங்கனை கணவனாக அடைந்தாள். பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், கூந்தலில் மலர் சூடாமல் புற அழகில் நாட்டம் செலுத்தாமல் இறை வழிபாட்டில் மட்டும் மனதினைச் செலுத்தி இந்த நோன்பினை மேற்கொண்டாள் ஆண்டாள். எனவே, கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதம் அதிகாலையில் நீராடி கோயிலுக்குச் சென்று ஆண்டாளின் திருப்பாவையைப் பாடி வழிபாடு மேற்கொள்கின்றனர். திருமணமான பெண்கள் மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
ஆண்டுதோறும் டிசம்பர் 31ந் தேதி, மலை மேல் உள்ள முருகன் கோயில்களில் படி உத்ஸவ விழா சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் குழுக்களாகச் சென்று மலையின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுகின்றனர். இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை தொடங்கி, மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் விநாயகர் சஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாட்கள் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர். கடைசி நாள் முழு உபவாசம் மேற்கொள்ளப்படுகிறது. விரதத்தின் நிறைவு நாளன்று பலவித உணவுப்பொருட்களை ஏழை எளியோருக்குத் தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத் துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.
மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனுமத் ஜயந்தி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இன்று கடைபிடிக்கப்படும் இந்த விரதத்தினால் மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அனுமன் அருளுவார் என்பது நம்பிக்கை. இன்று அனுமனுக்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி தினம் ‘உற்பத்தி ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு திருமாலை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். பகையை வெல்ல உதவும்.