மடைப்பள்ளி மாண்பு காத்த மாதவன்!

மடைப்பள்ளி மாண்பு காத்த மாதவன்!
Published on

ந்த வீட்டில் திருமணம் நடைபெறுகிறது என்பதற்கு வாசலில் கட்டப்பட்டிருந்த இரண்டு வாழை மரங்கள் மட்டுமே அடையாளமாக இருந்தது. மற்றபடி வேறு எந்த அடையாளமும் அங்கு இல்லை. பிம்பளம் என்ற நகரத்தில் உள்ள பாண்டுரங்கனின் பரம பக்தன் நீளோபாவின் வீட்டுத் திருமணம்தான் அது. தனக்கும், தனது மனைவி மற்றும் மகளுக்கும் தேவையான உணவை தினமும் உஞ்ச விருத்தி எடுத்து சாப்பிட்டு வருபவர் நீளோபா. அழகு இருந்தும், பணம் இல்லாததால் தனது மகளுக்குத் திருமணம் நடைபெறுமா? என்ற கவலையில் தவித்து வந்தார் நீளோபாவின் மனைவி. ஆனால் ‘அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வான்’ என்று அவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு, பகவானை தொழுவதிலேயே தனது காலத்தைக் கழித்து வந்தார் நீளோபா.

இந்த நிலையில்தான் நீளோபா மகளின் அழகில் மயங்கி ஒரு வாலிபன் அவளை திருமணம் செய்துகொள்ள முன்வந்தான். அவனும் ஒரு ஏழைதான் என்றாலும், அழகிலும் வலிமையிலும் சிறந்தவனாக இருந்தான். திருமணத்துக்கான நாள் குறிக்கப்பட்டு, அந்த நாளும் நெருங்கி விட்டது. நாளை விடிந்தால் திருமணம். ஆனால், நீளோபாவின் வீடு கலகலப்பின்றி காணப்பட்டது. நீளோபாவின் வீட்டில் பணப் பஞ்சம் என்பதால், அவரது உறவினர்களின் மனதிலும் அன்புப் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் நீளோபாவின் திருமண வீடு வெறிச்சோடிப் போய் கிடந்தது. எங்கே திருமண வீட்டுக்கு முன்னதாகவே சென்றால், பொருள் உதவி செய்ய வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில் ஒருவரும் திருமணத்துக்கு வந்து சேரவில்லை.

தயாள மனம் கொண்ட சிலர் கொடுத்த காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், இலை போன்றவை மட்டுமே கொஞ்சம் இருந்தன. ஆனால், அவை திருமணத்துக்கு வருபவர்களுக்கு விருந்து வைக்க போதுமானதாக இருக்குமா? என்று நீளோபாவின் மனைவி கவலையில் ஆழ்ந்தாள். அப்போது அந்த வீட்டு வாசலில் முதியவர் ஒருவர் வந்து நின்றார். வெளியே வந்த நீளோபாவிடம், ‘ஏப்பா… நீளோபான்னா நீதானா? உன் மகளுக்கு கல்யாணமாமே?’ என்று கேட்டார் அந்த முதியவர்.

‘ஐயா! நீங்கள் யாரென்று தெரியவில்லையே? எந்த ஊர்?’ என்று பணிவாக கேட்டார் நீளோபா.

‘எனக்கு ஏது ஊரு? எல்லா ஊரும் நம்ம ஊருதான். குருவாயூர், மதுரா, பிருந்தாவனம், கோகுலம், உடுப்பி… இப்படி ஊர் ஊராய் போய் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கிறேன்’ என்று கூறிக்கொண்டே, தான் அணிந்திருந்த கந்தல் துணியில் போட்டிருந்த சிறு சிறு முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினார்.

‘எனக்கு இப்போது அபார பசி. என்னிடம் இருக்கும் இந்த அரிசி, பருப்பு, காய்கறி, புளி, மிளகாயை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் சாப்பாடு போட்டால் நல்லது’ என்றார் அந்த முதியவர்.

உடனே நீளோபா, ‘திருமண வீட்டில் சாப்பாட்டுக்கு பஞ்சமா? உள்ளே போய் பசி தீர உணவருந்துங்கள். அரிசி, பருப்பு கொடுத்துதான் சாப்பிட வேண்டுமா என்ன?’ என்று கூறினார்.

‘நீளோபா! நாளை உனது வீட்டில் கல்யாணம். அதற்கடுத்த நாள் வரை இந்த பொருட்களைக் காப்பாற்ற முடியாது. இந்தப் பொருட்களை உனக்கு இந்த பிச்சைக்காரனிடம் வாங்குவதற்கு அவமானமாக இருக்கிறது போலும். நானும் மானம் உள்ளவன்தான். எனக்கு உன் வீட்டு சாப்பாடு வேண்டாம்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்படத் தயாரானார் அந்த முதியவர்.

நீளோபா மிகவும் பதறி, ‘ஐயா! நில்லுங்கள். அந்தப் பொருட்களை தாருங்கள்’ என்று கூறியவர், தனது மனைவியை அழைத்து அதனை வாங்கிக் கொள்ளும்படி கூறினார். முதியவரிடம் இருந்து பொருட்களை நீளோபாவின் மனைவி பெற்றுக் கொண்டாள். அவளிடம், ‘தாயே! இதனை நீங்கள் கல்யாண சமையலுக்கு வாங்கி வைத்திருக்கும் பொருட்களோடு சேர்க்க வேண்டும்’ என்றார் அந்த முதியவர். அவளும் அப்படியே செய்தாள். அதன் பிறகு அளிக்கப்பட்ட உணவை முதியவர் சாப்பிட்டு முடித்தார். அப்போது சமையல் அறையில் நீளோபாவின் மனைவியும், மகளும் கல்யாண சமையல் பொருட்களை தரம் பிரித்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்த அந்த முதியவர், ‘என்ன! எல்லா வேலைகளையும் கல்யாண பொண்ணும், அம்மாவும் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் வைத்துக்கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டார் முதியவர்.

அதைக்கேட்ட நீளோபா வருத்தம் தோய, ‘ஐயா! நானே உஞ்சவிருத்தி பெற்று சாப்பிடுபவன். நான் எப்படி வேலைக்கு ஆள் வைத்துக்கொள்ள முடியும்?’ என்றார்.

‘அப்படியானால் நாளைக்கு சமையல்?’ என்று முதியவர் கேட்க, ‘அதற்காகத்தானே நேரம் கழித்து முகூர்த்தம் பார்த்தது. சீக்கிரமே எழுந்து சமையலை முடிக்க வேண்டியதுதான்’ என்றார் நீளோபா.

‘நன்றாக இருக்கிறது! தனது கல்யாணத்துக் மணப்பெண் தானே சமைப்பதா? நாளைக்கு அடுப்படி பக்கம் நீங்கள் யாருமே வரக்கூடாது. நான் நன்றாக சமைப்பேன். திருமண விருந்துக்கு என்னென்ன வேண்டும்? என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை திருமணத்துக்கு வரும் அனைவரையும் வரவேற்று, விருந்துண்ண அனுப்ப வேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை’ என்று கூறினார் முதியவர்.

அதைக் கேட்டதும் மகிழ்ந்து போனார் நீளோபா. ‘அந்த பகவானே உங்களை அனுப்பி வைத்ததாக கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி’ என்றார்.

அப்போது அடுப்படியில் நுழைந்தவர்தான், அனைத்துப் பணிகளையும் பார்க்கத் தொடங்கினார் முதியவர். இரவு நேரங்கழித்து தூங்கி, அதிகாலையிலேயே எழுந்து சமையல் வேலைகளை முடித்துவிட்டார். திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் சமையலை ‘ஆஹா, ஓகோ’ என புகழ்ந்து தள்ளிவிட்டனர். அந்த வர்ணிப்பைக் கேட்டு நாக்கில் எச்சில் ஊற சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். வந்த உறவினர்கள் திருமண விருந்தைக் கண்டு வாயடைத்துப் போய்விட்டார்கள்.

விருந்தினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும் நீளோபாவை பாராட்டித் தள்ளினர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். நீளோபா, விருந்து சமையலை சிறப்பாகச் செய்து கொடுத்த முதியவரைக் கண்டு அவருக்கு வஸ்திரம் அணிவிப்பதற்காக மடைப்பள்ளிக்குச் சென்றார். ஆனால், அங்கு முதியவரைக் காணவில்லை. அங்கே சமையல் பொருட்கள் குறையாமல் அப்படியே இருப்பதைக் கண்டு திகைத்தார். வந்தவர் சாதாரண சமையல்காரர் அல்ல என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது. அவரது எண்ணம் பொய்யில்லை என்பதை, மடைப்பள்ளியில் சிலையாக நின்று கொண்டிருந்த பாண்டுரங்கனின் விக்கிரகம் மெய்ப்பித்துக் கொண்டிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com