150 ஆண்டுகால வரலாறு கொண்ட மதுரை புனித மரியாள் பேராலயம்!

புனித மரியாள் பேராலயம்
புனித மரியாள் பேராலயம்

-மரிய சாரா

துரை கிழக்கு வேலி தெருவில் திருமலை நாயக்கர் மஹாலுக்கு அருகில் அமைந்துள்ளது புனித மரியாள் பேராலயம். ரோமன், ஐரோப்பிய மற்றும் பிற கட்டடக்கலைகளைக்கொண்டு 150 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பேராலயம், மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் உள்ள பிரபலமான பேராலயங்களின் வரிசையில் உயர்ந்து நிற்கின்றது. மதுரை சுற்றுலா தலங்களின் பட்டியலில் இதன் வடிவமைப்பு மற்றும் வேலைப்பாடுகள் காரணமாக இப் பேராலயம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

வரலாறு:

1841ஆம் ஆண்டு கட்டப்பட்ட புனித மரியாள் பேராலயமானது கதீட்ரல் என்ற அந்தஸ்த்தைப் பெற்றதாகும். கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்ட ஆயரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் பேராலயம் ஆகும். அந்த வகையில், மதுரை மறைமாவட்ட கதீட்ரல் இந்தப் புனித மரியாள் பேராலயம்தான்.

1840-ம் ஆண்டு Fr. Bertrand SJ அவர்களால் வாங்கப்பட்ட சிறிய நிலத்தில், இந்தத் தேவாலயம் 1841-ம் ஆண்டு Fr. Garnier  என்பவரால் ஒரு சிறிய தேவாலயமாகக் கட்டப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி ஆலயத்திலிருந்து வெளியே துரத்திவிடப் பட்ட  கப்பலோட்டும் தொழிலாளர் குடும்பத்தினரை இங்கு குடியமர்த்தினார். பின்னர் அந்தப் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக கத்தோலிக்கர்கள் பெருகினர்.

இதனால் அந்தப் பகுதியை Fr. Hibolite sj மற்றும் Br. Lemothe SJ ஆகியோர் தங்களது பணிக்காலத்தில் விரிவாக்கம் செய்தனர். 1916-ல் தற்போதுள்ள தேவாலயமானது கட்டப்பட்டது. 1938-ல் மதுரை மறைமாவட்டம் நிறுவப்பட்டபோது, இந்தத் தேவாலயம் சார்பு நிலை கதீட்ரல் என்ற அந்தஸ்த்தைப் பெற்றது.

அப்போது மதுரை பேராயரின் சிம்மாசனமும் இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் 1969-ல் இந்தத் தேவாலயம் கதீட்ரல் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டு மதுரை உயர் மறைமாவட்டத்தின் தலைமையகமாக இன்று விளங்குகின்றது. ரோமானிய கட்டடக் கலையைப் பயன்படுத்தி கட்டப்பட்ட  42  அடி உயரமுள்ள பெரிய மணி கூண்டுகள் இரண்டும் வியக்கவைக்கும் அழகுடன் இங்கு காட்சியளிக்கின்றன. 

தாங்கள் வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கையுடனும் கட்டடக்கலை வியப்புகளைப் பார்த்து ரசிப்பதற்காகவும் இங்கு மக்கள் திரளாக வருகின்றனர். மதுரைக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் பார்த்து ரசிக்கக்கூடிய சிறந்த சுற்றுலா தலமாகவும் இந்தத் தேவாலயம் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வெற்றியடைய இந்த மூன்று பயங்களை கைவிடுங்கள்!
புனித மரியாள் பேராலயம்

மதுரை ரயில் நிலையத்திலிருந்து  2 கிலோமீட்டர், விமான நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர், பேருந்து நிறுத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில்தான் இந்தப் பேராலயம் அமைந்துள்ளது.

வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 7:00 மணி முதல் மாலை 7:00 மணிவரை தேவாலயத்திற்குச் செல்லலாம். பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இருந்து மார்ச் மாதம் மத்தியில் வரை விழாக்காலம் என்பதால் அந்தச் சமயத்தில் செல்வது மேலும் சிறப்பாக இருக்கும். மதம் சார்ந்த தடைகள் இல்லை. நுழைவுக் கட்டணமும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com