மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் - சில சுவாரசியத் தகவல்கள்!

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் - சில சுவாரசியத் தகவல்கள்!

துரை என்று சொன்னதும் சட்டென்று நினைவுக்கு வருபவள் அன்னை மீனாட்சி தான். அம்மனுக்கான 64 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் மீனாட்சி அம்மன் சன்னிதியே முதன்மை பெற்றது. அதனால்தான் முதலில் மீனாட்சியை வணங்கிய பிறகே சுந்தரேஸ்வரரை வழிபடும் மரபு பின்பற்றப்பட்டு வருகிறது.

சிவபெருமான் தனது கனவில் வந்து கூறியதால் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டை அழித்து இன்றைய மதுரை மாநகரை உருவாக்கியவன் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன்.

மதுரையை அழிக்க வருணன் ஏழு மேகங்களையும் ஏவியபோது அதைத் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தனது சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாக கூடி மதுரையை காத்தன. இதனால்தான், ’நான்மாடக்கூடல்’ என்ற பெயர் மதுரைக்கு ஏற்பட்டது.

இந்தக் கோயிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளைக் கொண்ட பிரம்மாண்டமான நாலு கோபுரங்கள் உள்ளன. இவற்றுள் தெற்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் 160 அடி.

சிவபெருமான் நடனம் ஆடியதாகச் செல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ’வெள்ளி சபை’ என்று போற்றப்படுகிறது. மற்ற எல்லா இடங்களிலும் இடது காலை தூக்கி நடனமாடும் நடராஜர், இங்கும் மட்டும் வலது காலை தூக்கி நடனம் ஆடுகிறார்.

கருவறையில் சுந்தரேஸ்வரர் சிவலிங்க உருவில் காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தானாகத் தோன்றிய சுயம்பு லிங்கமாகும். திருநாவுக்கரசரின் திருத்தாண்டக தேவாரப் பாடலில் இதற்கான ஆதாரத்தைக் காண முடிகிறது. இந்தக் கோயிலின் தல விருட்சம் கடம்ப மரம்.

இத்தல சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

இக்கோயில் மீனாட்சி அம்மன் சிலை மரகத கல்லால் ஆனது. அதனால் மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்றொரு பெயரும் உண்டு. இது தவிர, அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்தத் திருவிளையாடல் காட்சிகள் கோயில் சுவாமி சன்னிதி பிராகாரங்களில் சிற்பங்களாக இன்றும் காட்சி தருகின்றன.

மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளம் பிரசித்தி பெற்றது. ’நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சிவபெருமானையே எதிர்த்து வாதிட்ட மாபெரும் தமிழ் புலவர் நக்கீரர் சிவபெருமானது நெற்றிக்கண் அக்னியின் வெப்பத்தைத் தாங்க முடியாமல்  தஞ்சம் புகுந்த இடம் இந்த பொற்றாமரை குளமே. பொற்றாமரை குளத்தின் பெயரை மெய்ப்பிக்கும் பொருட்டு தங்கம் முலாம் பூசப்பட்ட தாமரை ஒன்று குளத்தில் மிதக்க விடப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பொற்றாமரை குளத்தில் ஸ்படிக லிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த லிங்கம் இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும் அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி, என சதுர அமைப்பிலான தெருக்களும் காணப்படுகின்றன. இந்த வீதிகள் தமிழ் மாதங்களின் பெயர்களில் அழைக்கப்படுவது சிறப்பு.

இக்கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்டு விட்டு சுந்தரேஸ்வரரை வணங்கச் செல்லும் வழியில் எழுந்தருளி உள்ள பிரம்மாண்ட விநாயகர் முக்குருணி விநாயகர் என அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு 18 படி அரிசியை கொண்டு செய்யப்பட்ட பிரம்மாண்ட கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்படும்.

மீனாட்சி அம்மன் கோயிலில் காண வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று ஆயிரம் கால் மண்டபம். ஆனால், இங்கே 985 தூண்களே உள்ளன. எங்கிருந்து பார்த்தாலும் இவை நேர் வரிசையில் காட்சி அளிக்கின்றன.

மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை என்று கூறும் அளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திருக்கோயில் சக்தி பீடங்களில் சிறப்பித்து கூறப்படுகிறது. இந்த பீடத்துக்கு, ’ராஜமாதங்கி சாம்பவி பீடம்’ என்று பெயர்.

மீன் போன்ற கண்களைக் கொண்டவள் என்பதால் மீனாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. மீன் தனது முட்டைகளை பார்வையாலேயே காப்பது போல், பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அன்னை மீனாட்சி காத்து அருள்பாலிக்கிறாள்.

ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை. 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், எட்டு கல் யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமான கருவறை.

அன்னை மீனாட்சி சன்னிதியின் பிரசாதம் தாழம்பூ, குங்குமம். இந்தக் குங்குமம் வேறு எங்கும் கிடைக்காது.

மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால் அபிஷேகங்களைப் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மட்டும் 33,000 சிற்பங்கள் உள்ளன. இந்த சிறப்பு உலகில் எந்த ஆலயத்துக்கும் கிடையாது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மீன்கள் வாழ்வது கிடையாது. அதனால் இந்தக் குளத்தில் தங்க தாமரை மிதக்க விடப்பட்டுள்ளது.

தமிழ் வருடங்களைக் குறிக்கும் சக்கரம் மதுரை கோயில் ஆயிரம் கால் மண்டபத்தின் வாயிலின் மேற்புறத்தில் அமைந்திருக்கின்றது.

’வாக் வாஹினி’ என்ற தேவதையின் அடையாளம்தான் கிளி. மீனாட்சியை வழிபடுபவர்களுக்கு வாக் தேவதையின் அருள் கிடைத்து வாக்கு வன்மை சிறக்கும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com