அன்னை மீனாட்சி அரசாட்சியோடு, அருளாட்சியும் புரியும் மதுரையம்பதியில் நவராத்திரி பண்டிகை மிகவும் விசேஷம். இந்த ஒன்பது நாள் விழாவில் ஏழாம் நாளன்று, அன்னை மீனாட்சியின் திக்விஜய அலங்காரக் காட்சி நடைபெறும். அன்று அன்னை மீனாட்சியின் ஆயுதங்கள் தாங்கிய போர்க்கோல திருக்காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.
சோழர்தம் குலக்கொடியாம் காஞ்சனமாலையின் மன வேதனை கண்ணீராய்த் திரண்டு விழிகளைக் குளமாக்க, கணவன் மலையத்துவஜ பாண்டியன் மனம் நிறைந்த வேதனையுடன் மனைவியையும் அவள் மடியில் தவழ்ந்த குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தான். அடுத்த நொடி, “இறைவா...” என அழைத்து பூஜை அறையை நோக்கி நடந்தான்.
அங்கே, வேரற்ற மரமாய் சாய்ந்து, “இறைவா, பிள்ளைப்பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தேன். இம்மாமதுரை மண்ணை ஆள ஒரு மகனைத் தருவாய் என எண்ணி வேள்வி வளர்த்து வழிபட்டேன். ஆனால், நீ தந்ததோ, மூன்று வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை. அதுவும், அங்க மாறுபாடாய் மூன்று தனங்களுடன் கூடிய குழந்தை! வேற்று நாட்டரசர்களும் பகையாளிகளும் என்னைப் பழித்து, எள்ளி நகையாடவும், வாழ்நாள் முழுவதும் நான் இதை நினைத்து நொந்து சாகவுமா இக்குழந்தையை எனக்குப் பரிசாகத் தந்தாய்?” என்று கண்ணீர் ஆறாய்ப் பெருக, பலவாறாகப் புலம்பித் தீர்த்தான் மலையத்துவஜ பாண்டியன்.
அப்போது வானிலிருந்து, “மலையத்துவஜ பாண்டியனே, மனம் கலங்காதே. யாம் உமக்குத் தந்த மகளை, மகனாகவே பாவித்து வளர்த்து முடிசூட்டுக. உகந்த மணாளனை அவள் காணும் தருணம் அவளது ஒரு தனம் மறையும். அதன் பிறகு உனது குலம் செழித்து வாழ்வு மலரும்” என்று அசரீரி ஒலித்தது.
அந்த ஒரு வாக்கையே ஈசன் தமக்களித்த திருவாக்காக ஏற்றுக்கொண்ட மன்னன் மனம் தெளிவுற்று, வேள்வியில் தோன்றிய அக்குழந்தைக்கு, ‘தடாதகை’ எனப் பெயர் சூட்டி வளர்த்தான். வயதுக்கேற்ற அனுபவங்களைக் கொடுத்ததோடு, பலவகைக் கலைகளின் பயிற்சிகளையும் பாங்குறவே கற்பித்தான். தக்கப் பருவத்தில் மதுரை மாநகரின் அரசியாக முடிசூட்டு விழாவையும் கோலாகலமாக நடத்தி, அரியாசனத்தில் அமர்த்தினான். தடாதகை தமது சிறப்புமிகு திறத்தால் மதுரையம்பதியை, ‘கன்னிநாடு’ என்று போற்றும்படி அரசாட்சி நடத்தினாள்.
மண்ணுக்கே மகாராணியானாலும் ஒரு தாய்க்கு மகளைக் குறித்த கவலைகள் உண்டாவது இயற்கைதானே. பருவம் எய்தி ஆண்டுகள் பலவாகியும் மகளுக்கு மணம் கூடிவரவில்லையே என்ற மனவேதனை காஞ்சனமாலையின் உள்ளத்தைப் பாடாய்ப்படுத்தியது. வேள்வியில் தோன்றிய அந்த வேதமாதா, வெண்பனித்தலை முடித்த ஈசனுக்கே உரியவள் என்பதை அந்தத் தாய் உள்ளம் அறியவில்லை. தாயின் மனவேதனை, தடாதகைப் பிராட்டியாரின் உள்ளத்தைத் தொட, அதுவே அகில உலகத்தையும் வென்று விட வேண்டுமென்ற வெஞ்சினமாக மாறியது.
அன்னைக்கு ஆறுதல் மொழி கூறிய தடாதகை, “அனைத்துலகையும் எனது காலடியின் கீழ் கொணர்வேன்” எனச் சூளுரைத்து, நால்வகைப் படைகளும் பின் தொடர, திக்விஜயம் மேற்கொண்டாள். தடாதகையாரின் கோபக்கனலில், கயபதி, துரகபதி, நரபதி முதலான வடபுல மன்னர்கள் இருந்த இடச்சுவடி தெரியாமல் தோற்று ஓடினர்.
மண்ணுலகை வெற்றி கொண்ட அம்மங்கை, ‘விண்ணுலகையும் ஒருகை பார்ப்பேன்’ எனக் கூறி, அஷ்ட திக்கு பாலகர்களையும் வென்று, ஜய கோஷ முழக்கத்துடன் கயிலை மலையை வந்தடைந்தாள். தம்மை உணராத மலையரசனின் மகளான தடாதகைப் பிராட்டியார், ஈரேழு லோகத்தையும் தமது கடைக்கண் பார்வையினால் கட்டியாளும் அந்த ஈசனின் சரிபாதியான பராசக்தியே என்பதை உணர்ந்த மலைகளும், அதில் சரியும் அருவிகளும், அன்னையவள் திரும்பி வந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்தன.
பிராட்டியார் தலைமையில் அணிவகுத்த போர்ப்படை முழக்கம் அந்தக் கயிலை மலையையே அசைத்துப் பார்த்தது. தடாதகையாரின் கோபக்கனலில், உறைந்த வெண்பனியும் கரைந்து அருவியாய் கொட்டித் தீர்த்தது. தம்மில் சரிபாதி திரும்பி வந்த மகிழ்ச்சியில் ஈசனின் மனம் ஆனந்தத் தாண்டவமாடியது.
ஆனாலும், மனதில் மகிழ்ச்சியையும் முகத்தில் கனலையும் காட்டி, தடாதகைப் பிராட்டியாரின் போர்ப் படைகளைத் தடுத்து நிறுத்தச் சொல்லி, நந்தி தேவருக்குக் கட்டளையிட்டார் அந்தப் பனித்தலை முடித்த பரமன்.
அண்ணல் உத்தரவை சிரமேற்கொண்ட நந்தி தேவர், அம்மை இவளென உணராது, சிவகணங்கள் புடைசூழ, சீறிப் புறப்பட்டார் போர் புரிய. தம்மை உணராத இரு தரப்பும் கடும் போர் புரிந்த கொடுமை அங்கு நிகழ்ந்தது. ஆனாலும், அதுவும் சில கணங்கள்தான். அண்ட சராசரங்களும் அஞ்சிப் பணியும் அன்னை பராசக்தியின் முன் அவர்கள் அனைவரும் தூசெனத் தோற்று, தெரிந்த திசைகளில் தலைதெறிக்க ஓடி மறைந்தனர்.
செய்யும் வகையறியாது திகைத்த நந்திதேவரோ ஈசனிடம் ஓடி வந்து, “நம்மிடம் போருக்கு வந்திருப்பது சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணரசியின் பேராற்றலைப் புரிய வைப்பதற்கோ வார்த்தையில்லை” எனக் கூறி, வெட்கி நின்றார். அதைக் கேட்ட புலித்தோல் உடுத்திய பொன்னார் மேனியன், “யாமே சந்திப்போம்” எனக்கூறி திருவாய் மலர்ந்தார்.
முற்றும் உணர்ந்த அந்த முக்கண்ணன் போலியாக போர்க்கோலம் பூண்டு பிராட்டியாரை எதிர்த்துப் போர் புரிய வந்தார். யுத்தத்துக்கு வந்த யுக நாயகன் ஈசனை, அன்னை பிராட்டியார் நேருக்கு நேர் நோக்குகிறார். பல காலம் பிரிந்த, தம்மில் சரிபாதியான உமையவளை சிவனாரும் வைத்த கண் வாங்காமல் அன்னையின் எழிற்கோலத்தை அள்ளிப் பருகுகிறார். நோக்கிய இருவரின் விழிகளும் நிலைகுத்தி நிற்கின்றன. நெற்றிக்கண் பரமனின் திருநோக்கைச் சந்தித்த அக்கணமே தடாதகைப் பிராட்டியாரின் முத்தனங்களில் ஒன்று தானே மறைந்தது. அதுமட்டுமின்றி, ஈரேழு லோகத்தையும் வெல்லும் திறம் படைத்த அன்னையின் வீர உணர்வு, அண்ணலில் ஒரே பார்வையில் நாண உணர்வாய் மாறி, உடலெங்கும் பரவசம் பாய்ந்தோடியது. அன்னை மீனாட்சியின் பேரழகில் சிவபெருமான் சொக்கி நின்றதால், மதுரையம்பதியில் அருள்புரியும் ஈசனுக்கு, ‘சொக்கநாதன்’ என்று பெயர். அதுமட்டுமின்றி, போர் புரிய வந்த சிவன், அன்னை தடாதகைப் பிராட்டியாரின் கண்களுக்கு சுந்தரரூபமாய் காட்சியளித்ததால், சுந்தரேஸ்வரர் என்றும் இத்தல ஈசனுக்குப் பெயர்.
அப்போது, அருகில் இருந்த தலைமை சிவகணங்கள் சிலர், தடாதகைப் பிராட்டியாரிடம் பூர்வத்தினை உரைத்து, அன்னை பார்வதியின் சொரூபமே தாங்கள் என்பதைப் புரியவைத்தனர். அதை ஆமோதிப்பது போல் சிவனாரும் அன்னையிடம் அருள்கூர்ந்து, “இனி, நீ மதுரையம்பதிக்குச் செல். யாம் விரைந்து வந்து அங்கேயே உன்னை மணம் புரிவோம்” என்று கூறி திருவாய் மலர்ந்தருளினார்.
அதேபோல், ஒரு நன்னாளில் மதுரையம்பதியில் மண்ணுலக மாந்தர்களும் விண்ணுலக தேவர்களும் புடைசூழ, திருமால் பொற்கலசப் புனிதநீரை வார்த்து, தமது தமக்கையாம் தடாததைப் பிராட்டியாராய் அவதரித்த பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க, அவ்விருவர் மலர்க் கரங்களையும் இணைத்தார். வேதமந்திர நாதம் ஒலித்தது. வேதநாயகன் நான்முகன் முன்னின்று நடத்தி வைக்க, சிவபெருமான், தடாதகைப் பிராட்டியாரின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்ட, அந்தத் தெய்வத் திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது.