மகா சிவராத்திரியை வித்தியாசமாகக் கொண்டாடும் 7 கோயில்கள்...!

மகா சிவராத்திரி...
மகா சிவராத்திரி...

1. மகாசிவராத்திரி அன்று முழு நாள் பூஜை காணும் சிவன் – தேவிகாபுரம் கனககிரீஸ்வரர்

தேவிகாபுரம் கனககிரீஸ்வரர்
தேவிகாபுரம் கனககிரீஸ்வரர்

திருவண்ணாமலை மாவட்டத்தின் தேவிகாபுரம் கிராமத்தில் பொன்மலை என்ற மலைமீது இந்தக் கோயில் அமைந்துள்ளது. சேத்துப்பட்டில் இருந்து போளூர் செல்லும் வழியில் தேவிகாபுரம் கிராமம் அமைந்துள்ளது. மலை மேல் அமைந்துள்ள இந்தக் கோயிலை அடைய 400 படிகள் ஏறவேண்டும். இந்தக் கோயில் ஒரு குறுநில மன்னரால் கட்டப்பட்ட அழகிய கோயிலாகும். சுயம்புவாக இருக்கும் எம்பெருமானை கனககிரீஸ்வரர் என்றும், மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானை காசி விஸ்வநாதர் என்றும் அழைக்கிறார்கள்.

மகா சிவராத்திரி அன்று மட்டும் இம்மலையில் நாள் முழுவதும் கோயில் திறந்திருக்கும். பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் 10 வரை மட்டுமே பூஜை நடைபெறும். உலகெங்கிலும் சிவபெருமானுக்கு பால், இளநீர், மஞ்சள், தயிர், தேன், அபிஷேகப்பொடி, வாசனை திரவியங்கள், பஞ்சாமிர்தம், விபூதி போன்றவற்றால் அபிஷேகம் செய்வதை நாம் பார்த்து இருப்போம்! ஆனால், இந்தக் கோயிலில் அவருக்கு வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்படுகிறது!

2. மகாசிவராத்திரியில் சூரிய பூஜை காணும் சிவன் – கருப்பூந்துறை ஈசன்

கருப்பூந்துறை ஈசன்
கருப்பூந்துறை ஈசன்

திருநெல்வேலியில் குறுக்குத்துறை அருகே கருப்பூந்துறை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அழியாபதி ஈசன் சமேத சிவகாமி அம்பாள் ஆலயம். கோரக்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலய இறைவனுக்கு, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டிய மன்னனால் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி அன்று சூரிய பகவான், அதிகாலையில் தனது கதிர்களால் ஈசனது கருவறையில் ஒளிவீசுவார். இந்த ஆலயம் தீபம் ஏற்றுவதற்கு என்றே உள்ள பிரதானமான ஆலயம். இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் அகல் தீபம் ஏற்றிய பின்னர்தான் ஈசனையே வழிபடுகிறார்கள். கோரக்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகச்சிறப்பான லிங்கம் இவ்வாலயத்தில் உள்ளது. ஆலயத்திற்கு நுழையும் வழியில் அத்தி மரமும், வில்வ மரமும் ஒன்றுக்குள் ஒன்று பொதிந்து ஒரே மரமாக இருப்பதும் அதிசயமாகும். இந்த ஆலயத்தில் 7 வியாழக்கிழமைகள் தொடர்ந்து பூஜை செய்து சித்தர்களின் அருளை பெறலாம். திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் வழியாகவும், திருநெல்வேலி டவுனில் இருந்து குறுக்குத்துறை, நத்தம் ரோடு வழியாகவும் இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்.

3. பக்தர்களே அபிஷேகம் செய்யும் ஈசன் - கோவை வில்வ லிங்கேஸ்வரர்

கோவை வில்வலிங்கேஸ்வரர்
கோவை வில்வலிங்கேஸ்வரர்

கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் ராம் நகர் என்ற இடத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமசுவாமி திருக்கோயில். இக்கோயிலின் பின்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வில்வ மரத்தின் அடியில் வில்வ லிங்கேசுவரர் சன்னிதி உள்ளது. வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு தினமும் பக்தர்களே நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடலாம். ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் வில்வலிங்கேசுவரருக்கு, பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் பொருட்களை வைத்தே அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் மாலையில் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து நெய் விளக்கேற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வழிபடலாம்.

சிவராத்திரியின் போது வில்வலிங்கேசுவரருக்கு 4 கால அபிஷேகம் விடிய, விடிய நடைபெறும். இந்த பூஜையிலும் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்து இறைவன் அருளை பெறலாம். அன்றைய தினம் கோவிலே விழாக்கோலத்துடன் காணப்படும்.

4. சூறை விடப்படும் தானியங்கள் – மேல்மலையனூர் அங்காளம்மன்

மேல்மலையனூர் அங்காளம்மன்
மேல்மலையனூர் அங்காளம்மன்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை அன்று லட்சக்கணக்கில் வருவர். மாசி சிவராத்திரி இங்கு மிகவும் பிரபலமானது அந்நாளில் நடக்கும் மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் அங்காள அம்மனை நினைத்து வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி பழங்கள், காய்கள், மஞ்சள், கொழுக்கட்டை, கீரை, பிஸ்கட், சாக்லெட், வளையல் எனப் பல பொருள்களை அம்மனுக்கு செலுத்த கொண்டுவந்து, அவற்றை மக்கள் கூட்டத்துக்கு நடுவே வீசி இறைப்பார்கள். இப்படி இறைக்கப்படும் பொருட்களை பக்தர்களும், விவசாயிகளும் போட்டி போட்டுக்கொண்டு எடுப்பார்கள். பயிர்களைத் தேடி எடுக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்யும்போது இந்தப் பயிரையும் சேர்த்து விதைப்பார்கள். அப்போது வழக்கத்தைவிட அதிக அளவில் மகசூல் கிடைக்குமாம்.

5. சிவராத்திரியில் பிரமோற்சவம் காணும் சண்டிகேஸ்வரர் – திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர்

திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர்
திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர்

கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 2 கிமீ தூரத்தில் உள்ளது திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில். அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 40வது தேவாரத்தலம் ஆகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை வழிபடும் முறையில் தனிக் கோயிலில் உள்ளார். இக்கோயிலில் மட்டும் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருக்கின்றன. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள்பாலிப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.

6. மகா சிவராத்திரி வித்தியாசமான நம்பிக்கை – புட்லூர் அங்காளம்மன்

புட்லூர் அங்காளம்மன்
புட்லூர் அங்காளம்மன்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில், புட்லூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில்.இங்கே உள்ள அம்மனுக்கு, பூங்காவனத்தம்மன் என்றும் பெயர். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரிக்கு மறுநாள் இங்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மண்ணாலும் மரத்தாலும் செய்யப்பட்ட மனித உருவம் உற்சவ மூர்த்தியின் முன்பு எரியூட்டப்படுகிறது. அது எரிந்து முடிந்தபிறகு எச்சமாகும் மண்ணை பெண்கள் தங்கள் முந்தானையிலும், ஆண்கள் துண்டில் முடிந்தும் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். இந்த மண்ணை வீட்டு வாசலில் கட்டினால் காற்று -கருப்பு அண்டாது என்பது பக்தர்கள் நம்பிக்கை.

7. சிவராத்திரி அன்று மட்டும் தாழம்பூ – திருப்பாச்சூர் வாசீஸ்வரர்

திருப்பாச்சூர் வாசீஸ்வரர்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர்

திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாச்சூர் உள்ளது. இங்குள்ள வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். பிரம்மாவுக்கு ஆதரவாக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளிலிருந்து ஒதுக்கிவைத்தார் சிவபெருமான். பின்னர் சிவனிடம் மன்னிப்புக்கேட்டு தாழம்பூ அடைக்கலம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்குப் பயன்படுத்தும்படி வரம் கொடுத்தார். அதனடிப்படையில் இக்கோயிலில் சிவராத்திரி அன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்துப் பூஜை செய்கின்றனர். இந்தப் பூஜையில் பங்கேற்று வழிபட்டால் ஆணவம், பொய் சொல்லும் குணம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com