பாவங்களை தீர்க்கும் மகா சிவராத்திரி!

பாவங்களை தீர்க்கும் மகா சிவராத்திரி!
Published on

- வனஜா செல்வராஜ்

அன்னை உமாதேவி மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சிவராத்திரி அன்று தான் சிவபெருமானை பூஜித்து வழிபட்டார். அதனால் நாமும் அதே தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால் நமக்கும் நினைத்தது எல்லாம் நிறைவேறுவதோடு அளப்பரிய பலன்களும் கிடைக்கும்.சிவராத்திரிக்கு விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு அகன்று விடும்.

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் ஆகிய இருவரும் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றனர்.

மாலை சூரியன் அஸ்தமனம் ஆனது முதல் மறுநாள் காலை உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னை உமாதேவி சிவபெருமானை வேண்டிக் கொண்டதன் படி சிவபெருமான் அதற்கு சம்மதித்து அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரியாக நம்மால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவராத்திரி நோன்பு மேற்கொள்ள வேண்டிய முறைகளை "மகா சிவராத்திரி கற்பம்" என்னும் நூல் தெளிவாக விளக்குகிறது.

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

நித்திய சிவராத்திரி

மாத சிவராத்திரி

பட்ச சிவராத்திரி

யோக சிவராத்திரி

மகா சிவராத்திரி

முதல் ஒருநாள் ஒரு வேளை உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசம் இருந்து சிவனை மனதில் இருத்தி கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் குளித்து, சிவபெருமானை வணங்கி விட்டு சிவனடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் நீங்குவதோடு நினைத்தன யாவற்றிலும் வெற்றி ஏற்படும். சிவாய நமஹ என்று சிந்தித்து இருந்தால் அபாயம் ஏற்படவே ஏற்படாது. நல்ல உபாயம் மட்டுமே ஏற்படும். புண்ணியம் கூடி பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த ஒரே நாளில் ஓர் ஆண்டு இறைவனை துதித்த பலனும் நமக்கு கிடைக்கும்.

மறுநாளும் சிவபுராணம் படித்து மாலை ஆனதும் அனுஷ்டானங்களை முடித்து விரதம் இருந்து உபவாசத்தை கடைப்பிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் நம்மை காப்பதுடன் வாழ்வில் மகிழ்ச்சியும், சகல சௌகரியங்களும் அளிப்பார் என்பது ஐதீகம். தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்தோடு மட்டுமல்லாது அவர்களின் மூவேழு தலைமுறையும் நற்கதி அடைந்து முக்தியை அடைவது சத்தியம் என்று கூறுகின்றன புராணங்கள்.

சிவராத்திரி அன்று சிவனுக்கு உகந்த கோலங்களை போட்டு அந்த சிவபெருமான் அருளை பெற்று மகிழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com