

அம்பிகை, சிதக்னி குண்டத்தில் தோன்றியவள். தேவர்களின் காரியத்தைச் சிறப்பாகச் சாதிப்பதற்காகவே அவள் இவ்வாறு தோன்றினாள். சிதக்னி குண்டத்திலிருந்து தோன்றிய அம்பிகையைச் 'சண்டி ஹோமம்' செய்து நாம் வழிபடுகிறோம். யாக குண்டத்தில் வளரும் தீயில் உருப்பெற்று எழும் சக்கரத்தின் உச்சியில் உள்ள பிந்துவில், அன்னையானவள் பரமசிவனின் மடியில் எழுந்தருளியிருக்கிறாள்.
இவ்வாறு ஈசனின் திருமடியில் எழுந்தருளியிருக்கும் அன்னை மகாதிரிபுரசுந்தரி (Maha tripura sundari) நான்கு கரங்கள் கொண்டவளாக விளங்குகிறாள். அங்குசமும் பாசமும் பின்னிரு கரங்களிலும், கரும்பு வில்லும் பஞ்ச பாணங்களும் முன்னிரு கரங்களிலும் மிளிர்கின்றன. பரம்பொருள் 'விமர்சனம்' என்ற கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போது, அப்பரம்பொருளுக்கே ஓர் ஈர்ப்பு ஏற்படுகிறது; இதனால் அவர் காமேஸ்வரன் ஆகிறார், அம்பிகையோ காமேஸ்வரி ஆகிறாள். இங்குதான் 'ஸ்ரீசக்ர உபாசனை' முக்கியத்துவம் பெறுகிறது என்பர்.
சக்கரத்தின் மத்தியில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட 'பஞ்ச பிரம்மாசனத்தில்', சர்வானந்தமய பீடம் என்ற பிந்துவாகிய மகா பீடத்தில் அன்னை வீற்றிருக்கிறாள். காமேஸ்வரனின் இடது மடியில், அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்ச பாணங்களையும் ஏந்தியவளாக மகாதிரிபுரசுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் கூறுகின்றன.
சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது. 'சிவஞானப்பிரதாயினி' என்பது அவளின் திருநாமங்களில் ஒன்று. சிவஞானத்தைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளே. அன்னையை மனதில் கற்பித்து, மனத்தூய்மை பேணி, வைதீக மரபின்படி அக்னியிலும், ஆகம மரபின்படி விக்கிரகத்திலும், தாந்த்ரீக மரபின்படி சக்கரத்திலும் வழிபடுவர். அறுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபட வேண்டும் என்று திருமந்திரம் கூறுகிறது.
அம்பிகையைச் 'சக்கரம்' என்ற மந்திர அமைப்பின் நடுவில் உள்ள பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவளது பரிவார தேவதைகள் அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களிலும் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து வழிபடுவதே 'சக்கர பூஜை' ஆகும். பூஜை மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தன்னைத் தூய்மை செய்துகொண்ட ஒருவர், குரு வழிபாடு புரிந்து, சங்கல்பம் செய்துகொண்டு தேகரட்சை செய்ய வேண்டும். தலைவி எழுந்தருளும் சக்கரத்தைச் சுற்றியுள்ள மதில்களாகவும் கோட்டைகளாகவும் 44 வரிசைகளைப் பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே சக்கர பூஜையின் முதல் அம்சமாகும்.
அடுத்து, பூஜை செய்பவர் தம் உடலை மந்திரங்கள் மூலம் தெய்வீகமாக்கிக்கொள்ள வேண்டும். உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்ற சக்கரங்களை எழுப்பி தேவதைகளை நியாசம் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் சுத்தி செய்துகொண்ட பின்னரே சக்கர பூஜையில் நுழைய வேண்டும். சக்கர பூஜையில் கலச பாத்திரம், சாமானியார்ச்சிய பாத்திரம், குரு பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், பலி பாத்திரம், ஆத்ம பாத்திரம் எனப் பல உள்ளன.
நிறைவாக நவாவர்ண பூஜையும், லலிதா சகஸ்ரநாமம் அல்லது திரிசதி அர்ச்சனையும் செய்து, நைவேத்தியத்துடன் விசேஷ பூஜை செய்வர். பின்னர் பலிதானம் மற்றும் சுவாசினி பூஜை நடைபெறும். முடிவில், "எம் தாயே! நான் தவறேது செய்யினும் பொறுத்தருள வேண்டும்" என்று விண்ணப்பம் செய்து சக்கர பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
ஆதிசங்கரர் சிருங்கேரியில் சக்கரத்தின் மீது சாரதா தேவியைப் பிரதிஷ்டை செய்துள்ளதாகக் கூறுவர். சிதம்பரத்தில் பெருமானின் வலப்பக்கத்தில் சிவசக்கரமும் சக்தி சக்கரமும் இணைந்துள்ளன; இதனையே 'சிதம்பர ரகசியம்' என்பர். சக்கர பூஜை செய்பவர்களுக்கு யோகமும் குரு பலனும் கிடைத்து, தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறுவர் என்பது ஐதீகம்.