சுவாமிநாதனாக வந்த மகாபெரியவர்!

சுவாமிநாதனாக வந்த மகாபெரியவர்!
Published on

சிறு வயது முதலே காஞ்சி மகாபெரியவாளிடம் அதீத பக்தி கொண்டது ரவி வெங்கட்ராமன் குடும்பம். எந்த ஒரு காரியத்தையும் மகாபெரியவா அனுமதியின்றி செய்ததில்லை! நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது தாயார், இளையாத்தங்குடியில் மகாபெரியவா தங்கியிருந்த வேளையில், ‘தனது பிரசவத்தை எங்கு வைத்துக் கொள்வது?’ என்று கேட்க, திருச்சியில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவாயிற்றாம். இப்படிப்பட்ட அனுக்ரஹத்துடன் பிறந்தவர்தான் ரவிசங்கர் என்று அழைக்கப்படும் ரவி வெங்கட்ராமன்!

1984ஆம் ஆண்டு பிலானியில் தனது பொறியியல் படிப்பை படித்து முடித்து திருச்சி திரும்பினார் ரவிசங்கர். விடுமுறை முடிந்து பரீட்சை ரிஸல்ட் வந்தவுடன் மறுபடி பிலானிக்கு சான்றிதழ்களை வாங்கச் சென்றார். டெல்லி வரை சென்று அங்கிருந்து பிலானிக்கு பஸ்ஸில் சென்றபோது, ஆபத்தும் உடன் வருவதை அவர் உணரவில்லை. பக்கத்தில் இருந்த இவரது வயது ஒத்த இளைஞனிடம் பேசிக்கொண்டு வந்தார். பின் சீட்டில் இரண்டு வாலிபர்கள் இருந்தனர். அந்த சில மணி நேரத்தில் கள்ளம் கபடு இல்லாமல் தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர்களிடம் சொல்லி வந்தார் ரவிசங்கர்.

நடு வழியில் அந்த நண்பர்கள் இறங்கிவிட, ரவி மட்டும் பிலானி சென்று தனது சர்டிஃபிகேட்களை வாங்கிக் கொண்டு அன்றிரவு கல்லூரி விடுதியில் தங்கிவிட்டு, மறுதினம் காலையில் டெல்லி செல்லும் பஸ்ஸுக்காகக் காத்திருந்தார். காலேஜ் லீவானதால் அங்கு கூட்டம் இல்லை. திடீரென முதல் நாள் பார்த்த அதே நண்பர்கள் அங்கே வந்தனர். ரவிக்கு ஆச்சரியம்! வியப்புடன் அவர்களை விசாரித்ததற்கு மௌனமே பதில்!

திடீரென அவர்களின் நடவடிக்கை அச்சமூட்டுவதாக இருந்தது. ''நீ மரியாதையோடு எங்களுடன் வந்து விடு. புத்திசாலித்தனமா ஏதாவது செய்தால் நாங்க சும்மா விட மாட்டோம் ஜாக்ரதை'' என்று மிரட்டினர்! முதலில் விளையாடுகிறார்கள் என்று நினைத்தவருக்கு, பின் அது சீரியசான விஷயம் என்று தெரிந்து மிகவும் பயந்து போனார். முன்பின் தெரியாதவர்களிடம் நம் விஷயத்தை எல்லாம் சொல்லி இப்படி மாட்டிக் கொண்டோமே என்ற பயத்துடன் அவர்கள் சொல்படி நடப்பதைத் தவிர வேறு வழியில்லை என அவர்களைப் பின் தொடர்ந்தார். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அவர்கள் ரவியையும் அதில் ஈடுபடுத்த வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

மிகவும் பயந்த நிலையிலும் மகாபெரியவாளையே நினைத்துக்கொண்ட அவருக்கு அவர் அருளால் ஓர் யோசனை தோன்றியது! தனது குடும்பத்துக்கு ஒரு கடிதம் எழுதி அவர்களிடமே அதை போஸ்ட் செய்யச் சொன்னார். அவர்களும் போகும் வழியில் அதனை போஸ்ட் செய்தனர். டெல்லியிலிருந்து கடத்திக்கொண்டு வந்து ஒரு பஸ்ஸில் ஏறி ரிஷிகேஷ் வந்தடைந்தனர். பயந்த நிலையிலும் பெரியவா ஸ்மரணையிலேயே இருந்தார் ரவி. அவர் பிரார்த்தனையைக் கண்ட அவர்கள் கேலி செய்தனர்.

அவர்களிடமிருந்து தப்ப நினைத்ததெல்லாம் வீணாயின. சுமார் ஒன்றரை நாட்கள் ஒன்றும் சாப்பிடாமல் பயணித்ததால், பசியால் தாங்க முடியாமல் அவர்களிடமே ஏதாவது சாப்பிட வாங்கித் தருமாறு கேட்க வைத்தது. ரவியின் பிரார்த்தனை வீணாகவில்லை! அவர்கள் ரவியிடமே பணத்தைக் கொடுத்து அவரையே ஏதாவது தங்களுக்கும் சேர்த்து வாங்கி வருமாறு பணித்தார்கள். அது அவரது நல்ல காலம்! சாலை குறுகல்! சாலையைக் கடந்து எதிரே இருக்கும் கடையில் வாங்குவதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கலக்க மனத்துடன் பசி உடலை வருத்த கடையை நோக்கிச் செல்கையில் இன்பத் தேனாக தமிழ் மொழி காதில் விழுந்தது! திரும்பிப் பார்க்கையில் ஒரு மிலிடரி ட்ரக். அதிலிருந்த இரண்டு சிப்பாய்கள்தான் தமிழில் பேசினது! தான் கடத்திக் கொண்டு போகப்படுவதை அவர்களிடம் விளக்கிச் சொன்னார் ரவி. ரவி பேசியது தீவிரவாதிகளுக்குக் கேட்க வாய்ப்பில்லை. அந்த ஜவான்கள் ரவியிடம், ''பஸ்ஸில் போய் உட்கார்'' என்று சொல்லவும், ரவிக்குப் பெருத்த ஏமாற்றம்! சரி வேறு வழியில்லை என நினைத்து பெரியவாளை மனதில் தியானித்தபடி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து விட்டார்!

ப்போது திடீரென அந்த மிலிடரி ட்ரக் பஸ்ஸுக்கு முன் வந்து வழி மறித்து நின்றது! அந்த தமிழ் சோல்ஜர்களோடு இரண்டு பேர் வந்து பஸ்ஸை நிறுத்தி ''யார் உள்ளே டெர்ரரிஸ்ட்” என்று கேட்க, ரவி ஜாடையால் இவர்களைக் காண்பிக்க, அந்த மூவரும் அதிர்ச்சி அடைந்து ஓட ஆரம்பித்தனர். ஜவான்கள் அவர்களை மடக்கி சிறை பிடித்தனர். ஜவான்களில் ஒருவர் பெயர் முருகன். முருகனாக ஸ்வாமிநாதன் எனப் பெயர் கொண்ட மகாபெரியவாதான் அங்கு வந்து தன் பக்தரைக் காப்பாற்றினார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை! இதற்குள் இவரது பெற்றோருக்கு இவர் எழுதிய கடிதம் கிடைத்து, பயத்துடன் பெரியவாளைச் சரணடைந்தனர்.

அந்தக் கடிதத்தில், 'நான் இனி திரும்ப முடியாது’ என்ற வாசகம் அவர்களைக் கலங்கச் செய்து சரணாகதியாக ஓடி வந்திருக்கிறார்கள். பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னபோது, ''ரிஷிகேசில் நமது மடத்து ராஜகோபாலைத் தேடச் சொல்'' என்ற உத்தரவு பிறந்தது! அது மட்டுமில்லாமல், இவா ஊருக்குப் போகட்டும் என்ற கட்டளை வேறு! அன்று மதியம் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது, ‘ரவி கிடைத்து விட்டார்’ என்ற மங்களகரமான தகவல் கிடைத்தது. பெரியவா திருவாக்குப்படி ரவி ரிஷிகேஷிலிருந்து மீட்கப்பட்டார்! பெற்றோர் தங்களது கரங்கள் காஞ்சி மடத்தை நோக்கித் தங்களது கரங்களைக் குவித்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com