மகத்தான மாசியும், மகமும்!

Makathana Maasiyum Mahamum!
Makathana Maasiyum Mahamum!https://wanderingheritager.blogspot.com
Published on

மாதங்களில் மகத்துவம் வாய்ந்ததாக மார்கழி எப்படிக் கருதப்படுகிறதோ, அதற்கு இணையாக மாசி மாதமும் விளங்குகிறது. அதிலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் சிறப்பிற்குரியதாகும்.

‘மகத்துப் பெண் ஜகமாள்வாள்’ என்கிற பழமொழிகூட உண்டு. உமா தேவியார் மாசி மாத மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால், இது புண்ணிய நாளாகவும், பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.

மாசி மக சிறப்பு:

பெருமாளுக்கும் மக நட்சத்திரம் உகந்த நாளாகும். இந்நன்னாளில், நீர்நிலைகள் இருக்குமிடங்களில் தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறுவதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷி எனக் கூறப்படுகிறது.

காரணம்?

அன்றலர்ந்த தாமரை மலரை, திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாளின் காலில் வைத்து வணங்க வேண்டுமென்று ஆவல் கொண்டார் புண்டரீக மகரிஷி. பாற்கடலுக்குச் செல்ல வழி ஏற்பாடு செய்வதற்காக, மாமல்லை கடற்கரையில் தாமரை மலரை வைத்துவிட்டு, கடல் நீரை இறைக்க ஆரம்பித்தார்.

இவரின் தளராத முயற்சியையும், அளவிலா பக்தியையும் கண்ட பெருமாள் ஒரு முதியவராக உருக்கொண்டு மகரிஷியிடம் வந்து, “பசியாக இருக்கிறது. உணவு ஏதாவது ஊருக்குள் சென்று வாங்கி வாருங்கள். அதுவரை நான் நீரை இறைக்கிறேன்” எனக் கூற, மகரிஷியும் ஊருக்குள் போய் உணவு வாங்கிவந்து பார்க்கையில், கடல் நீர் உள்வாங்கியிருக்க, முதியவரை காணவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். அச்சமயம் ஒரு அசரீரி குரல் கேட்டது. முனிவர் திரும்பிப் பார்க்கையில் தாமரை மலரை தனது பாதங்களில் வைத்தவாறு, திருமால் தரையில் சயனக் கோலத்தில் காட்சியளித்தார். பெருமாளே தனது திருக்கரத்தால் கடலின் நீர் இரைத்தக் காரணம், கடல் மற்றும் நீர் நிலைகளில் மாசி மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

மேலும், வராக அவதாரம் எடுத்து பூமியை பெருமாள் வெளியே கொண்டு வந்த நாளும் மாசி மகம்தான்.

மாசி மகமும், பெளர்ணமியும் சேர்ந்து வருகையில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. மகாமகக் குளத்தில், மாசி மகத் தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும், கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து போன்ற பல நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து நீராடி, தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்கின்றனர் என்பது ஐதீகம்.

மாசி மகத்தன்று அனைத்து நீர்நிலைகளிலும் அமிர்தம் கலந்திருப்பதாக கூறப்படுவதால், நதி நீராடல் சிறப்பானதாகும். இதனால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகி, சுபிட்சம் ஏற்படும்.

* இன்று அன்னதானம் வழங்குதல் சிறப்பானதாகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, பிராணிகள், பறவைகளுக்கும் உணவு அளிப்பது புண்ணியச் செயலாகும்.

* இன்றைய தினம் முன்னோர்களுக்கு நீர் நிலைகள் அருகே தர்ப்பணம் கொடுத்தால், ஏழு தலைமுறையில் செய்த பாவங்கள் நீங்குவதோடு, நன்மைகளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

* மாசி மாதத்தில் காரடையார் நோன்பு வரும் காரணம், மாங்கல்ய மாதமெனவும் அழைக்கப்படுகிறது.

* சிவபெருமான் வருணனுக்கு சாப விமோசனமளித்தது, இந்நாளில் என்பதால் சிவபெருமானை வழிபடுவதற்கும் உகந்த தினம் மாசி மகம். (சிவபெருமானுக்கு உரிய மகா சிவராத்திரி பண்டிகை வருவதும் மாசி மாதத்தில்தான்.)

https://tamil.oneindia.com

* முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்த நாள் மாசி மகமென்பதால் முருகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பான தினம் இன்று.

* மகம் நட்சத்திரத்திற்கு, ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான் அதிபதி என்பதால், இந்நாளில் அவரை வணங்கி, நவகிரக சன்னிதியிலிருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்வது நன்மையை அளிக்கும்.

* இந்நாளில், குலதெய்வத்தை வழிபடுவதும், தரிசிப்பதும் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
சொத்தை பல்லுக்கான காரணமும் நிவாரணமும்!
Makathana Maasiyum Mahamum!

* நதிகளுக்குச் சென்று நீராட இயலாதவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மாசி மகம் பலனை வீட்டிலேயே மேற்கண்ட வழிபாடுகளை செய்து எளிய முறையில் அடையலாம்.

வீட்டு பூஜையறையில், செம்பு பாத்திரத்தில் இல்லையெனில் மண் பாத்திரத்தில் நல்ல நீர் விட்டு, சிறிது மஞ்சள் பொடி, வாசனைப்பொடி சேர்த்து அதற்கு தூப தீபம் காட்டி, நவ நதிகளின் பெயரை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும். நன்றாக பிரார்த்தனை செய்த பிறகு, தலையில் லேசாக அந்த நீரை தெளித்துக்கொண்டு, சிறிது பருகலாம். சாதாரண நீராக இருந்தாலும், பூஜை செய்த பிறகு, அது கடல் தீர்த்தத்திற்கு இணையாக மாறுகிறது. இந்நீரில் குளிக்கையில் புனித நீராடிய பலன் கிடைக்கும்.

நாளை சனிக்கிழமை மாசி மகத் திருநாள். மாசியையும் மகத்தையும் கொண்டாடி, வணங்கி, நற்பலனை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com