மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோத்ஸவப் பெருவிழா!

மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோத்ஸவப் பெருவிழா!
Picasa 3.0

சென்னை, புறநகர் பகுதியான மாங்காடு திருத்தலத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில். வேண்டியதை வேண்டியபடி அருளும் மிகச் சிறந்த பரிகாரத் தலமாகத் திகழும் மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உபகோயிலாக இது திகழ்வது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயிலின் பிரம்மோத்ஸவப் பெருவிழா இன்று (23.6.2023) வெள்ளிக்கிழமை காலை தொடங்கி, அடுத்த பத்து நாட்களுக்கு (2.7.2023 வரை) வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதன்படி இன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் இந்தக் கோயிலில் கொடியேற்றம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோத்ஸவப் பெருவிழாவில் காலை, மாலை, இரவு என பல்வேறு திருக்கோலங்களில் அருள்மிகு ஸ்ரீவெள்ளீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.

இந்தப் பத்து நாட்களிலும் சுவாமியின் பல்வேறு வாகன வீதி உலாவும், 25.6.2023 அன்று முற்பகல் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சன அபிஷேகமும், 29.6.2023 அன்று காலை 7 மணிக்கு மேல் திருத்தேர் உற்ஸவமும், 2.7.2023 அன்று மாலை 6 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெற உள்ளது. திருவிழாவின் நிறைவாக அன்று இரவு 7 மணிக்கு கொடியிறக்க நிகழ்வோடு, இந்த பிரம்மோத்ஸவப் பெருவிழா நிறைவு பெற உள்ளது. மேற்கண்ட இந்தத் திருநாட்களில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக, அலங்காரங்களும் நடைபெற இருக்கிறது.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் பத்து நாட்கள் பிரம்மோத்ஸவத் திருவிழாவைத் தொடர்ந்து அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு முறையே ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உத்ஸவம், உத்ஸவர் சாந்தி அபிஷேகம் மற்றும் விடையாற்றி உத்ஸவம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த பத்து நாட்கள் பிரம்மோத்ஸவப் பெருவிழாவில் பக்தகோடி பெருமக்கள் அனைவரும் திரளாய் கலந்துகொண்டு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் அருள் பெற வேண்டுமாய் கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com