விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இதன் பெருமையை புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். அதன்படி ஒரு ஆண்டில் 24 ஏகாதசி வருகின்றன. சில நேரம 25ம் வருவதுண்டு. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு சிறந்த பலனை தரவல்லது. அறியாமல் செய்த பாவங்களால் கஷ்டப்படுபவர்கள் தங்கள் பாவங்கள் தீர்ந்து நற்பலன்களை அடைய உதவும் ஏகாதசியே காமிகா ஏகாதசி. இந்த விரத நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஏகாதசி என்றாலே அது, பெருமாளை வழிபடும் நாள். காமிகா ஏகாதசி தினத்தின் பெருமைகள் குறித்து ஏகாதசி மகாத்மியம் கூறுகிறது. யார் காமிகா ஏகாதசியின் மகத்துவங்களைக் கேட்கிறார்களோ அவர்கள் யாகங்களில் உயர்ந்ததான அஸ்வமேத யாகத்தைச் செய்த பலனைப் பெறுவர் என்று சொல்கிறது.
மகாபாரத யுத்தம் நிகழ்ந்த இடம் குருக்ஷேத்திரம். தர்மத்தை பகவான் கிருஷ்ணன் நிலைநாட்டிய புண்ணிய பூமி. அந்தப் புண்ணிய பூமியில் சூரிய கிரகண வேளையில் செய்யும் கிரியைகள் பல மடங்கு புண்ணியம் அருள்பவை என்கின்றன புராணங்கள். நம் வாழ்வும் ஒரு யுத்தக்களம் போன்றதே. அந்த யுத்தக்களத்தில் நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் நமக்கு புண்ணிய பலன்களைத் தருவதோடு பகவானின் அனுகிரகத்தையும் பெற்றுத்தரும்.
காமிகா ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவர். விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு அர்ச்சிப்பதை விட, ஒரே ஒரு துளசி இலை சமர்ப்பித்து வழிபடுவது மேன்மையுடையது. துளசிச் செடியில் துளசி மாதா வாசம் செய்வதாக ஐததீகம். எனவே, காமிகா ஏகாதசி அன்று துளசிச் செடியை தரிசனம் செய்வதே புண்ணியம் தரும். துளசிச் செடிக்கு நீரூற்றி அருகே ஓர் விளக்கேற்றிக் கோலமிட்டு நமஸ்காரம் செய்து வழிபட்டால் நோய் நொடிகள் நம்மை அணுகாது. மேலும், இந்த நாளில் புதிதாகத் துளசிச் செடி நடுவது மிகவும் மங்கலமானது. அவ்வாறு செய்பவர்களுக்கு யம வாதை இருக்காது. எனவே, தவறாமல் காமிகா ஏகாதசி அன்று துளசி கொண்டு பூஜிக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் ஒரு நாள் என்றாலும், இந்த விரத முறை மூன்று நாட்கள் சேர்ந்தது. தசமி திதி அன்றே விரதம் தொடங்கி விடுகிறது. தசமி திதி அன்று இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். ஏகாதசி அன்று செய்ய வேண்டிய பூஜைகளுக்காகவும் தீர்த்தத்தில் சேர்ப்பதற்காகவும் வேண்டிய துளசி இலையை தசமி அன்றே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று துளசி இலையைப் பறிப்பது பாவம் என்கிறது சாஸ்திரம். மறுநாள் ஏகாதசி அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம். பழம் அல்லது பால் ஆகியவற்றை பகவானுக்குப் படைத்து உண்ணலாம். ஏகாதசி நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் நாம ஜபத்திலுமே செலவிட வேண்டும். துவாதசி அன்று காலை பாரனை முடித்து விரதத்தை முடித்துக்கொள்வது சிறப்பு.