மார்கழி மாதமும் மகளிரும்!

மார்கழி மாதமும் மகளிரும்!

மது முன்னோர்கள் ஆடியில் அம்மனுக்கும், புரட்டாசியில் பெருமாளுக்கும், மார்கழியில் அனைத்து தெய்வங்களுக்கும் என மாதத்துக்கு ஒரு தெய்வத்தை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது போல, மார்கழி மாதத்துக்கும் தனி சிறப்பு உள்ளது. அனைத்து விரதங்களும் பெண்களை முன்னிலைப்படுத்தியே இருக்கின்றன. காரணம், பெண்கள் ஆறு விதமான தன்மைகள் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். பெண் என்பவள் தெய்வமாகவும், மனைவியாகவும், குருவாகவும், நண்பனாகவும், ஆசானாகவும், போதகனாகவும் (செயல்திறன்) ஒரு ஆணுக்கு அமைகின்றாள். அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆகவேதான், பெரும்பாலான விரதங்களில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது.

எந்தவொரு மனிதரும் தவறுகள் செய்யாமல் இருப்பதில்லை. அறிந்தும், அறியாமலும் சில தவறுகள் செய்திருக்கலாம். மேலும், நடக்கும்போது நம் காலடிபட்டு எறும்பு, பூச்சி போன்ற எத்தனை உயிர்கள் இறக்கின்றன? இதுவும் ஒருவகையில் பாவம்தான். இதனால் வரும் தோஷத்தினால்கூட கன்னிப் பெண்களுக்கு திருமணத்தடை ஏற்படும். இதைத் தவிர்க்கவே மார்கழியில் பெண்கள் வாசலில் அரிசி மாவினால் கோலம் போடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

மழை, பனி, குளிர் காரணமாக உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் உணவு இல்லாமல் இருக்கும் சிறு உயிரினங்கள், அதிகாலையில் தமக்குத் தேவையான உணவைத் தேடி வருகின்றன. அப்போது நாம் அரிசி மாவில் கோலம் போடுவதால் அதற்கு உண்டான உணவு கிடைத்துவிடுகிறது. அந்த உணவினை சிறு உயிரினங்களுக்கு அளித்த அந்தப் பெண்களுக்கு தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

அந்தக் காலத்தில் ஆண்டாள் மார்கழி மாதத்தில்தான் தினமும் ஒவ்வொரு பாசுரமாகப் பாடி பெருமாளை வழிபடுவார். ஆனால், ‘தான் மட்டும் பெருமாளைப் பாடிப் பலன் அடையக்கூடாது’ என்று எண்ணி தன் தெருவில் இருக்கும் கன்னிப் பெண்கள், குழந்தை இல்லாதவர்கள் என அனைவரையும் தன்னுடன் அழைத்துச் சென்று வழிபட வைத்தார். தன் மனம் கவர்ந்த கண்ணனின் முன் நின்று, ‘நீயே என் கணவனாக வர வேண்டும்’ என்று கூறி வழிபாடு செய்தார்.

அதிகாலையில் எழுந்து ஒருமனதுடன் தனக்குச் சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்ற ஆழ்மனது நம்பிக்கையுடன், பரிசுத்தமான காற்றை சுவாசித்து விரதம் மேற்கொள்ளும்போது அப்பெண்ணிடமிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலகி, மன ஆரோக்கியம் மேம்பட்டு அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.

பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த ஆண்டாள், பெருமாளின் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக, அவரையே தனது கணவனாக அடைய விரும்பினாள். கண்ணனை மணக்க வேண்டி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்த ஆண்டாளுக்கு அருள்புரிந்த பெருமாள், பங்குனி உத்திரத்தில் ஆண்டாளை மணந்து கொண்டார். எனவே, பெண்கள் பாவை நோன்பு இருந்தால், விரும்பிய கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை. இதனால்தான் மார்கழி மாதம் பெண்களுக்கு உகந்த மாதமாக கருதப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com