இதய நோய் நிவாரண பரிகாரத் தலமாகத் திகழும் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்!

இதய நோய் நிவாரண பரிகாரத் தலமாகத் திகழும் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்!
Published on

யிலாடுதுறை மாவட்டம், மூவலூரில் அமைந்துள்ளது மார்க்க சகாயேசுவரர் ஆலயம். திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம், மகிஷாசுரனை வதம் செய்த துர்ககையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட சிறப்பு மிக்கது இந்த ஆலயம். ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன க்ஷேத்ரம் என வழங்கப்பட்டது. இறைவன், ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார்.

ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால் இறைவனுக்கு, ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலாயிற்று. இதேபோல் மூவரும் வழிபட்ட ஊர் இதுவென்பதால், ‘மூவரூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது, ‘மூவலூர்’ என்றாகி இருக்கிறது.

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு, தேவர்களையும் மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள், ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்களுக்கு சாபம் ஏற்பட்டது. இதனால் மனம் வருந்திய இம்மூவரும், இறைவனிடம் விமோசனம் வேண்டினர். இறைவனின் ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அங்கு ஈசனை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என்கிறது தல புராணம்.

பங்குனி ஆயில்யத்தில் சவுந்திரநாயகி திருக்கல்யாண உத்ஸவம், உத்திர நட்சத்திரத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி, தைப்பூசம், நவராத்திரி, மகா சிவராத்திரி, மாசி மகம், தீர்த்தவாரி, பிரதோஷம் உள்ளிட்ட சிவாலய விழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன. இத்தலத்து இறைவனை, அன்னை பார்வதி, திருமால், பிரம்மா, சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் ஜாமத்தில் நவ நாகங்களும், ரத சப்தமியில் சப்த மாதர்களும் வழிபட்டுப் பேறு பெற்றனர். இது தவிர, கர்மசேனகியர் என்ற மன்னன், பிப்பிலர் என்ற உபமன்யு முனிவர் என பலரும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலபிஷேகம் செய்தும், அபிஷேகப் பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகியுடன், மங்களாம்பிகை என்ற அம்மனுக்கும் தெற்கு முகமாய் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்திரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும், லலிதா திரிசடையும், சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com