திருமண தோஷம் தீர்க்கும் தில்லைக் காளி!

திருமண தோஷம் தீர்க்கும் தில்லைக் காளி!

தில்லையம்பதியாம் சிதம்பரத்தில் உள்ள தில்லைக் காளி, சிவபெருமானுடன் போட்டி போட்டு தாண்டவம் புரிந்தாள்! சிவனார் வலது கையைச் சுழற்றி ஆட, உமையவளும் அவ்விதமே ஆடினாள். அவர் இடது காலைச் சுழற்றி ஆட, அம்பிகையும் அதேபோல் ஆடினாள். சபையில் இருந்தவர்கள் வியந்து நிற்கும் வேளையில், சட்டென்று தனது காதிலிருந்து குண்டலத்தை கீழே விழச் செய்தார் சிவபெருமான்.

உடனே தனது கால் விரல்களால் அதைப் பற்றி எடுத்த நடன நாயகன், அப்படியே காது வரைக்கும் காலை உயர்த்தித் தூக்கி, காலாலேயே குண்டலத்தைத் தமது காதில் அணிந்துகொண்டார். இதைக் கண்டு விக்கித்து நின்றாள் உமையவள்! அதோடு, தனது ஆட்டத்தை நிறுத்தினாள். ‘சபையில் அனைவரும் கூடியிருக்கும் வேளையில், ஒரு பெண்ணானவள் இப்படிக் காலைத் தூக்கி ஆடுவது எப்படிச் சாத்தியம்?’ என்று யோசித்தவளாக, அவமானத்துடன் தலைகுனிந்து நின்றாள் தேவி.

அந்த வெட்கமும் தலைக்குனிவும் அவளுள் கோபத்தைத் தூண்ட, உக்கிரமாகி மகா காளியாக உருவெடுத்து நின்றாள். விறுவிறுவென வனத்தின் எல்லைக்குச் சென்று அங்கு கோயில் கொண்டாள். இன்றைக்கும் எல்லைக்காளியாக, தில்லைக் காளி கோயில்கொண்டபடி அருள்பாலித்து வருகிறாள். தில்லை மரங்கள் சூழ்ந்த அந்தப் பகுதி தில்லை வனம் எனப்பட்டது. தற்போது இத்தலம் சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. சிவனாரும் தேவியும் ஆடிய அந்த இடமே பொற்சபை எனப் போற்றப்படுகிறது. இன்றைக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் தலத்தையும் ஆடல்வல்லான் ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கின்றனர். முன்னதாக, தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தில்லைக்காளியை தரிசித்துவிட்டுத்தான்,
ஸ்ரீ நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்!

மன்னன் கோப்பெருஞ்சோழன், காளி தேவியின் பெருமையை அறிந்து இங்கே கோயில் கட்டி, வழிபட்டு போர்களில் வெற்றி வாகை சூடினான் என்கிறது தல வரலாறு. எட்டு திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தியபடி, ஒரு காலைத் தூக்கிய நிலையில், கடும் உக்கிரமாகக் காட்சி தருகிறாள் தில்லைக்காளி. கோயிலின் உள்ளே மேற்குப் பார்த்தபடி சாந்த முகத்துடன் தில்லையம்மனும், கிழக்கு பார்த்தபடி உக்கிரமாக தில்லைக் காளியும் தனிச் சன்னிதிகளில் தரிசனம் தருகின்றனர்.

திருமண தோஷத்தால் தவிப்பவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்குபவர்கள், செய்வினை மற்றும் பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள், கடன் தொல்லையிலிருந்து மீள முடியவில்லையே என வருந்துபவர்கள், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிப்பவர்கள் ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை மற்றும் பௌர்ணமி என ஆடி மாதம் முழுவதும் எந்த நாளிலேனும் இங்கு வந்து ஸ்ரீ தில்லைக்காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், நிம்மதியும் சந்தோஷமும் பெற்று வாழலாம் என்கின்றனர் பலன் அடைந்தவர்கள்.

இது தவிர, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரை திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் தில்லைக்காளி முன் எலுமிச்சம் பழத்தில் நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தால் கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். அதனாலேயே ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இக்கோயிலை திக்குமுக்காட வைக்கிறது. மேலும், எந்த நல்ல காரியம் தொடங்கினாலும், இந்த ஆலயத்தில் வந்து தில்லைக்காளியை வழிபட்டு சென்றால் ஒரு தடையும் குறுக்கே வராது, வரும் தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகிவிடும். எதிரிகள் அஞ்சி விலகுவர்.

மாதம் தோறும் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் தில்லைக்காளிக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் சிறப்பு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்துகொண்டு பக்தர்கள் தங்கள் மனக்குறைகளை காளி தேவியிடம் கொட்டி தீர்க்க, அடுத்த அமாவாசைக்குள் அந்தக் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து வைக்கிறாள். ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் பெருமளவில் இந்த நல்லெண்ணெய் அபிஷேகத்தில் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

தில்லைக் காளி காண்பதற்கு உக்கிரமாகத் தெரிந்தாலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விஷயத்தில் கேட்ட வரம் கொடுக்கும் அன்புள்ளம் கொண்ட தாயாகவே திகழ்கிறாள். காளிக்கு 108 எலுமிச்சம் பழ மாலை அணிவித்தால் எதிரிகளை சம்ஹாரம் செய்கிறாள். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளை நீங்கிக் காக்கிறாள் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அதேசமயம், தவறு செய்துவிட்டு மற்றவர் மீது பழி போட்டு இவளை வணங்கினால் நிச்சயம் நமக்கு தண்டனை தருவாள் தில்லைக்காளி என்பதையும் பக்தர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். அதேபோல், இந்த அம்மனிடம் உண்மையான வழிபாடு இருக்க வேண்டும். யாரையும் துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்தலத்துக்கு வந்து காளியை வேண்டுபவர்களுக்கு நிச்சயம் எதிர்மறையான விளைவுகளையே இன்றுவரை ஏற்படுத்தியிருக்கிறாள்.

தில்லை நகரை மட்டும் காக்கும் காவல் தெய்வம் அல்ல இந்தக் காளி. அகில உலகத்தையும் காக்கும் காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறாள். கருவறையில் காட்சி தரும் தில்லைக்காளியின் இரு கண்களையும் நேருக்கு நேர் பார்த்து, மனமுருகி வேண்டினாலே, அந்த கோர விழிகளில் இருந்து உங்களுக்கு ஏற்படும் சில மாற்றங்கள் உங்கள் மனதை பலப்படுத்துவதோடு, தெளிவடையவும் செய்கிறது. அதனாலேயே இந்த அம்மனை வணங்கும் பக்தர்கள் நீண்ட நேரம் அந்த இடத்தில் நின்று தரிசனம் செய்வதைப் பார்க்க முடிகிறது.

அமைவிடம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தில்லைக்காளியம்மன் கோயில்.

தரிசன நேரம்: காலை 6 முதல் பகல் 1 மணி வரை. மாலை 5 முதல் இரவு 9.30 மணி வரை. அமாவாசை அன்று இரவு 10.30 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com