சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது மனிதர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய கனவு. மருதமலை முருகன் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வேண்டிக் கொண்டால் சொந்த வீட்டுக் கனவு விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோயம்புத்தூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதமலையின் மீது அமைந்துள்ளது இந்த முருகன் கோயில். மருதமலை மேல் கோயில் கொண்டதால் இத்தல முருகன் மருதாச்சல மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சுப்பிரமணிய சுவாமி, தண்டாயுதபாணி என்ற சிறப்பு பெயர்களும் அவருக்கு உண்டு.
முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாகக் கருதப்படுகிறது மருதமலை. சுமார் 800 ஆண்டுகள் பழைமையான இக்கோயில், பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடல் பெற்ற தலம் இது. இந்தத் தலத்தில் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் உள்ளது. இத்தலத்தில் சித்தருக்கு முருகப்பெருமான் பாம்பு வடிவில் காட்சியளித்ததாக வரலாறு.
இந்தக் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 740 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியைச் சேர்ந்த இம்மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாக செல்ல படிக்கட்டுகள் உள்ளன. பாதையின் தொடக்கத்தில், 'தான் தோன்றி விநாயகர்' சன்னிதி உள்ளது. சற்று மேலே, காவடி சுமந்த வடிவில் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. படிகளில் ஏறிச்செல்ல முடியாதோருக்கு வளைவு மலைப்பாதையில் வாகனங்களில் நேரடியாக கோயிலுக்கு செல்லும் வசதியும் உள்ளது. மலை அடிவாரம் வரை அரசு பேருந்துகளும் கோயில் நிர்வாகத்தால் இயக்கப்படும் கட்டண சிற்றுந்துகளும் உள்ளன. தனியார் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும் செல்லும் வசதி உண்டு.
ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சுயம்புலிங்க வடிவில் காட்சி தருகிறார். தற்போதைய மூலஸ்தான கடவுளை தரிசனம் செய்யும் முன்பு பஞ்ச விருட்ச விநாயகர் சன்னிதிக்கு சென்று வழிபடலாம். அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என்று ஐந்து மரங்களுக்கு அடியில் ஐந்து முகங்களுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார் விநாயகர். ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் கல்லால் ஆன கொடி மரத்திற்கு முன்பு வலம்புரி விநாயகர் சன்னிதி உள்ளது. அவர் முன்பு பெரிய மயில் முக குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்து உலோக கொடிமரத்தை தாண்டி மயில் வாகனம் இருக்கிறது அபூர்வமாக இங்கு முன் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் சன்னிதி உள்ளது. வெளிமண்டபத்தில் பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, நவகிரக சன்னதி, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர் துர்கை, சண்டிகேஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மருதாச்சல மூர்த்தியின் சன்னிதி நுழைவாயிலில் ‘மருதாச்சலம் இருக்க மனக்கவலை ஏன்?’ என்கிற வாசகமே நெகிழச் செய்கிறது. பகல் நேரங்களில் மஞ்சள் பட்டாடையில் ராஜ அலங்கார கோலத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் முருகப்பெருமானின் திருவுருவம் காணக் கண்கோடி வேண்டும். மாலை நேரங்களில் நீலப் பட்டாடை அணிந்து அழகுறக் காட்சி தருகிறார். நுழைவாயிலில் இருந்து அருகில் செல்லும் வரை எங்கிருந்து பார்த்தாலும் முருகனின் திருவுருவம் தெரியக்கூடிய அளவில் அமைந்துள்ளது இந்த சன்னிதி.
மருதாச்சலம் மூர்த்தியை வேண்டிக்கொண்டால், சொந்த வீட்டுக் கனவு நிறைவேறும் என்பது ஐதீகம். இங்கு வந்து வழிபட்ட பலருக்கும் அது வாய்க்கப் பெற்றிருக்கிறது. இதற்கு அடையாளமாக ஆதி மூலஸ்தானத்திற்கு செல்லும் வழியில் கற்களை அடுக்கி வைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.