தமிழ் வருடத்தின் இறுதி மாதத்துக்கு முன்பு வரும் மாசி மாதம் மிகவும் மகத்தான ஒரு காலகட்டமாகும். வேதம் மற்றும் கலைகளைக் கற்றறியவும், உபநயனம் போன்ற விசேஷங்களைச் செய்ய அற்புதமான மாதம் மாசி. இந்த மாதத்தில் நாம் எதைச் செய்தாலும் அதற்கு இரட்டிப்புப் பலன் உண்டு என்பது உறுதி.
முல்லை நிலத்தின் முதல் தெய்வமாக மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில்தான். மாசி மாத சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருப்பவர்கள் அனைத்து வித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர். காளிந்தி நதியில் பார்வதி தேவி, ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றியது மாசி மாதத்தில்தான். சிவபெருமானின் திருவிளையாடலுக்கு அதிகளவு அந்தஸ்து பெற்றதும் மாசி மாதம்தான்.
மந்திர உபதேசம் பெறுவதற்கு மாசி மாதம் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. மாசி மாத புனர்பூச நட்சத்திர நன்னாளில் குலசேகர ஆழ்வார் அவதரித்தார். அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகத் திருநாள். முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசம் செய்தது மாசி மாத பூச நட்சத்திர தினமாகும்.
பாவத்திலேயே பெரும் பாவமான பிரம்மஹத்தியைப் போக்கி நற்கதி கொடுக்கும் இரண்டு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில்தான். இந்த மாதத்தில் மேற்படிப்பு, ஆராய்ச்சி போன்ற செயல்களைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.
தனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற அகத்திய முனிவர் தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாத நன்னாளில்தான். மாசி மாதத்தில் வரும் காரடையான் நோன்பும், சாவித்ரி விரதமும் விசேஷமான விரதங்கள் ஆகும். மேலும், மாசி மகத்தன்றுதான் காம தகன விழா நடைபெறுகிறது.
மாசி மாதத்தில் குடிபெயரும் எந்த வீடாக இருந்தாலும், அதில் நீண்ட நாட்கள் வாழலாம் என்து ஐதீகம். மேலும் இம்மாதத்தை ‘மாங்கல்ய மாதம்’ என்றும் கூறுவர். இம்மாதம் பெண்களுக்கு மிகவும் சிறப்பானது. மாசி மக ஸ்நானத்தின்போது சுமங்கலிப் பெண்கள் புது மாங்கல்யச் சரடு அணிவது மாங்கல்ய பலத்தைக் கூட்டுவதாகும். மாசி மக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம் அல்லது கேட்கலாம். மாசி மகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாகி நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் மூலம் அவை கலப்பதால் அன்று நீர்நிலைகளில் நீராடுவது மிகுந்த நன்மைகளைப் பெற்றுத் தரும். மாசி மாதத்தில் அதிகாலை நீராடி மகாலக்ஷ்மி தாயாரை துளசி கொண்டு வழிபடுவதன் மூலம் பூரண அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை.