தஞ்சாவூர் மாவட்டம், திருநறையூரில் அமைந்துள்ளது சித்தநாதீஸ்வரர் திருக்கோயில். ஈஸ்வரனும் பார்வதியும் மகாலட்சுமியை மகளாக பாவித்து மகாவிஷ்ணுவிற்கு மணம் செய்து கொடுத்த தலம் இது. மேதாவி மகரிஷி, தாயார் மகாலட்சுமியே தனக்கு மகளாக வரவேண்டும் என்று கடும் தவம் புரிந்து பெரும் பாக்கியமாக மகாலட்சுமியை மகளாக அடைந்த திருத்தலம் இது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று மகாலட்சுமிக்கு 108 தாமரை மலர்களால் குபேர மகாலட்சுமி ஹோமம் செய்து வரப்படுகிறது.
சைவ, வைணவ பேதம் சிறிதும் இல்லாத தனிச்சிறப்பு உடையது இக்கோயில். இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்புரிகிறார். ஈசனின் பெயர் சித்தநாதீஸ்வரர். அம்பாள் பெயர் அழகம்மை என்கின்ற சௌந்தர்ய நாயகி. தல விருட்சம் பவளமல்லி. இக்கோயிலில் சண்முகருக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது.
நாச்சியார்கோவில் என்று அழைக்கப்படும் தலத்தில் சீனிவாச பெருமாளுக்கு மகாலட்சுமியை கன்னிகாதானம் செய்து கொடுத்து இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப் புடைவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல் பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீர் கொடுக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் நாச்சியார்கோவில் பெருமாள் கோயிலுக்குச் செல்கின்றனர்.
சிவன் கோயிலில் மகாலட்சுமிக்கு தனிச் சன்னதி உள்ளது. இவளது அவதார ஸ்தலம் என்பதால் குழந்தை வடிவில் இங்கு மகாலட்சுமி காட்சி தருகிறாள். எனவே, ‘மழலை மகாலட்சுமி’ என அழைக்கப்படும் இவளுக்கு பாவாடை சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள்.
இக்கோயிலில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, தேவர்களின் சாபத்தால் சரும வியாதி உண்டாக, நோய் நீங்குவதற்காக அவர் இங்கு வந்து ஈசனை வழிபட சிவன் அவருக்குக் காட்சி தந்து நோயை நீக்கி அருள்புரிந்தார். சித்தருக்கு அருள்புரிந்தவர் என்பதால் இவர் சித்தநாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சுவாமி கோஷ்டத்தில் சிவ வழிபாடு செய்யும் கோரக்கர் சிற்பம் உள்ளது. அருகிலேயே இங்கு தவம் இயற்றிய மேதாவி மகரிஷியும் இருக்கிறார்.
சரும வியாதி உள்ளவர்கள் ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் கோரக்கருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதனை உடலில் பூசிக்கொள்ள நோய் நீங்குவதாக நம்புகின்றனர்.
இக்கோயில் சண்டிகேஸ்வரர் சன்னிதியில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பது மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. தேவார பாடல் பெற்ற 65வது தலம் இது. மார்கழி திருவாதிரையில் 10 நாட்கள் பிரம்மோத்ஸவமும், ஐப்பசியில் அன்னாபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். இக்கோயில், கும்பகோணத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.