அற்புதங்கள் பல செய்த விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்

ஆன்மிக அனுபவம்
அற்புதங்கள் பல செய்த
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்

ன் தந்தை ஒரு விஷ்ணு பக்தர். எங்கள் குலதெய்வமும் பெருமாள் தான்.  எங்கள் வீட்டில் தினமும் காலையில் திருமதி எம்.எஸ். அம்மா அவர்கள் பாடிய  விஷ்ணு சகஸ்ர நாமத்தை டேப்பில் ஒலிக்க விட்டு, அதனுடன் சேர்ந்து அப்பாவும் சத்தமாக விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்வார். அதைக் கேட்டே வளர்ந்ததால் எனக்கும் அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது.

எங்கள் வீட்டில் ஒரு பழமையான விஷ்ணு சகஸ்ர நாம புத்தகம் இருந்தது. ‘’இதில் ஏராளமான ஸ்லோகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சுலோகத்திற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும்’’ என்று கூறிய என் தந்தை  புத்தகத்தை என்னிடம் காண்பித்தார். அதில் படிப்பில் சிறந்து விளங்க ஒரு மந்திரம் இருந்தது.                    

                                 வேதோ வேதவிதவ்யங்கோ
                                  வேதாங்கோ வேதவித் கவி:

என்ற ஸ்லோகத்தை 108 முறை கூறி வா. குறைந்தது 18 முறையாவது பாராயணம் செய்து வா’’ என்று சொன்னார். நானும் பக்தியோடு ஜபித்துப் பலன் பெற்றேன்.

 அதன் பின் விஷ்ணு சஹஸ்ரநாமம் என் வாழ்வில் ஏற்படுத்திய அற்புதங்கள் பல. நான் கருவுற்று இருந்தபோது எனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டு விஷ்ணு சகஸ்ரநாமத்தில் இருக்கும் நினைத்ததை நடத்தித் தரும் மந்திரமான

                             ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
                              ஸித்தித: ஸித்தி ஸாதன:

என்ற மந்திரத்தை தினமும் சொல்லிக் கொண்டே இருந்தேன். என்னுடைய இரண்டு பிரசவங்களும் சுகப்பிரசவம் தான். 

 ஒருமுறை கண் டாக்டரிடம் பரிசோதனைக்கு சென்று இருந்த போது என்னுடைய மூத்த மகளுக்கும் பரிசோதனை செய்தோம். அவளுக்கு அஸ்டிக்மேடிசம் என்ற பார்வைக் குறைபாடு உள்ளதாக தெரிவித்த மருத்துவர் அவளுக்கு கண்ணாடி போடச் சொன்னார். எப்போதுமே கண்ணாடியைக் கழட்டக் கூடாது என்றார். என் மகளுக்கோ கண்ணாடி

அணிவதில் விருப்பமில்லை. நான் அவளிடம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் கண் பார்வை திருந்த ஒரு மந்திரம் உள்ளது.

ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

என்ற மந்திரத்தை தினமும் 18 முறை சொல்லச் சொன்னேன். அந்தக் குழந்தையும் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தது. மிக விரைவிலேயே கண்ணாடியை கழற்றி விட்டது. அதன் பின் எந்த பார்வை கோளாறும் அவளுக்கு இல்லை. அதன் பின் அவளும் தினமும் நம்பிக்கையோடு ஸ்லோகங்களைப் பாராயணம் செய்ததில், ப்ளஸ் டூவில் பள்ளியில் முதலாவதாக வந்தாள். எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் நல்ல ரேங்க் வாங்கி, தான் விரும்பிய கோர்சை விரும்பிய நகரத்தில் தற்போது படித்து வருகிறாள்.

எனக்கு மனதில் சஞ்சலம் தோன்றி வருத்தம் மேலோங்கும் போதெல்லாம் உற்சாகத்தை தரும் மந்திரத்தை பாராயணம் செய்வேன். எங்கிருந்துதான் அவ்வளவு உற்சாகமும் மகிழ்ச்சியும் வருமோ தெரியாது. அதுதான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் மகிமை.

நம்பிக்கையோடு பாராயணம் செய்பவர்களுக்கு கை மேல் பலன் தரும் அற்புத மந்திரங்கள் கொண்டது விஷ்ணு சஹஸ்ரநாமம். மஹா பெரியவர் ஸ்வாமிகள் இதன் பெருமைகளை பலமுறை எடுத்துக் கூறியுள்ளார்கள். ஒரு முறை மஹா பெரியவருக்கு காய்ச்சல் வந்த போது, மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளாமல்  விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயாணம் செய்து, அதன் மூலமே காய்ச்சலை சரி செய்த அனுபவத்தை ஒரு புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொண்டேன்.

இத்தனை அற்புதங்கள் செய்யும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் காதால் கேட்டாலே மிகவும் நன்மை தரும். சத்தமாக பாராயாணம் செய்தால் எண்ணற்ற பலன்களை அளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com