ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வரும் அதிசய சிவலிங்கம்!

ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வரும் அதிசய சிவலிங்கம்!
Published on

வ்வொரு ஆண்டும் ஆறு முதல் எட்டு அங்குலம் வரை தொடர்ந்து வளர்ந்து வரும் அதிசய சிவலிங்கம் ஒன்று நம்முடைய இந்தியாவில் உள்ளது. பூதேஸ்வரர் மகாதேவ் என்னும் சுயம்புவாக உருவான சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை இதுவரை தெரியாமலே உள்ளது. சதீஷ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் காரியாபந்த் மாவட்டம் உள்ளது. அங்குள்ள மரோடா என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் பூதேஸ்வரர் மகாதேவ் சிவலிங்கம் அமைந்துள்ளது. உலகிலேயே பெரிய சுயம்பு லிங்கம் இதுவெனச் சொல்லப்படுகிறது.

இப்பகுதி மக்கள் இந்த சிவலிங்கத்தை பாகுர்ராமகாதேவ் என்று அழைக்கிறார்கள். மிகப் பிரபலமான இந்த சிவலிங்கத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த சிவலிங்கம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு அதிசய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, உயரம் மற்றும் அகலம் ஆகியவற்றின் வளர்ச்சி தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி அதனுடைய உயரம் 18 அடியாகும். சுற்றளவு 20 அடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கத்தின் அளவு ஒவ்வொரு வருடமும் மகாசிவராத்திரியன்று வருவாய்த்துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்படுவதாக கோயிலில் பூஜை செய்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 6 முதல் 8 அங்குலம் வரையில் அந்த சிவலிங்கம் வளர்ந்து வருவதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் ஒருவர் தனது விவசாய நிலத்துக்குச் சென்ற பொழுது அங்கு ஒரு சிங்கத்தின் கர்ஜனை சத்தத்தை கேட்டிருக்கிறார். தொடர்ந்து இந்தச் சத்தம் கேட்கவே, அவர் அதை கிராம மக்களிடம் சொல்லியிருக்கிறார். உடனே அங்கு வந்து பார்த்த கிராம மக்களும் அந்தச் சத்தத்தை கேட்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சுற்றுவட்டாரத்தில் எங்கும் எந்த விலங்கும் இல்லை. திடீரென ஒரு இடத்தில் மேடு போன்று சிவலிங்கம் இருப்பதைப் பார்த்து திடுக்கிட்ட ஜமீன்தார், அதை மக்களிடம் காண்பிக்க, அப்போதிருந்து மக்கள் இந்த மேட்டை சிவலிங்கமாக வழிபடத் தொடங்கியிருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் ஆரம்பத்தில் இந்த சிவலிங்கத்தை வணங்கியபோது அது சிறியதாக இருந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் அது உயரத்திலும் அகலத்திலும் வளர ஆரம்பித்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

சவான் என்ற புனித மாதத்தில் இந்த சிவலிங்கத்தை தரிசிக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்த இடத்துக்குச் சென்று சிவலிங்கத்துக்கு ஒரு குடம் தண்ணீரால் அபிஷேகம் செய்பவர்களுடைய விருப்பங்களும், வேண்டுதலும் உடனடியாக நிறைவேறுவதாகச் சொல்லப்படுகிறது.

பூதேஸ்வர் மகாதேவ் சிவலிங்கத்தின் வளரும் அளவு 1952ம் ஆண்டு முதல் அளவிடப்பட்டு வருகிறது. அன்று முதல் இன்று வரை உயரமும், அகலமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சுயம்புவாக உருவான இந்த சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை அறியப்படாத மர்மமாகவே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com