மானிடர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். தனது தந்தை தசரதரின் கட்டளைப்படி, பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் கழிக்க வேண்டிய நிலையில், ஒரு நாள் தனது தந்தை தசரத சக்ரவர்த்திக்கு திதி கொடுக்க வேண்டி வந்தது. அப்போது கயா கரைக்கு (கேக்கரை) வந்து திதி கொடுக்க தசரத சக்ரவர்த்தி மோட்சம் அடைந்தாராம்.
ஒருவர் செய்யும் கர்மாக்களுக்கு உதவியாக இருப்பது, ஸ்வதா மற்றும் ஸ்வாஹா எனும் இரு தேவதைகள். இந்த தேவதைகளிடம் தாம் பெற்ற வரத்தால், கேக்கரையில் ஸ்ரீராமர் செய்த திதியின் அங்கமான தர்ப்பண தீர்த்தத்தை கீழே விட்டபோது, அதை கண் இமைக்கும் நேரத்தில் தசரதரிடம் கொண்டு சேர்த்தாராம் அனுமன். இதற்கு, ‘மனோவேகம்’ என்று பெயர், அந்தப் பெருமை கேக்கரை அஞ்சனேயருக்கு உண்டு. இங்கு இவர் மனோவேக ஆஞ்சனேயராகக் காட்சி தருகிறார்.
ஸ்ரீராமர் இங்குள்ள குருவி ராமேஸ்வரம் (திருப்பள்ளி முக்கூடல்) குளத்தில் நீராடி, கேக்கரை கரையில் உள்ள சிவன் கோயில் நந்திக்குப் பின்புறம் இருக்கும் ஆறு குழிகளில் தனது தந்தைக்கு பிண்டம் கொடுத்தாராம். இன்றும் அந்தக் குழிகள் காணப்படுகின்றன. சிராத்தம் முடிந்தபின் கயா தீர்த்தத்தில் நீராடி இங்கு கோயில் உள்ள இடத்தில் அன்னதானம் செய்து அனைவரையும் மகிழ்வித்தாராம். ஸ்ரீராமர் தங்கிய இந்த இடம், ‘தக்ஷிண கயாகரை’ என்றே அழைக்கப்படுகிறது.
எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் ஸ்ரீராமரின் வில்லுக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. மூன்று பௌர்ணமிகள் இந்த வில்லுக்கு திருமஞ்சனம் செய்து வேண்டிக்கொண்டால், திருமணம், புத்திர பாக்கியம், வியாபார விருத்தி என அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறுவதாகக் கூறப்படுகிறது.
கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் மனோவேக ஆஞ்சனேயர் சன்னிதி உள்ளது. ஸ்ரீராமர் சன்னிதிக்கு எதிர்ப்புறம் கூப்பிய கரங்களுடன் கருடன் காட்சி தருகிறார். கருவறையில் நுழையும் முன் வலதுபுறம் கலியன், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் மற்றும் சன்னிதியில் ஸ்ரீராமர், சீதாபிராட்டி சமேதராக ஸ்ரீலக்ஷ்மணர் மற்றும் ஆஞ்சனேயருடன் அருள்புரிகிறார்.
இந்தக் கோயிலில் வருடப் பிறப்பு, தக்ஷிணாயணம், உத்ராயணம் மற்றும் அமாவாசை நாட்களில் திருப்பள்ளி முக்கூடல் குளத்தில் குளித்துவிட்டு கயாக்கரை விஸ்வநாதர் கோயில் குளக்கரையில் திதி, தர்ப்பணம் போன்றவற்றை செய்து, ஸ்ரீராமர் கோயிலில் பூஜித்தால் யாரை நினைத்து திதி செய்கிறோமோ அவர்களுக்கு மோட்சம் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை.
அமைவிடம்: திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.