மோகினி அலங்காரத்தில் ஸ்ரீ சென்னகேசவர்!

மோகினி அலங்காரத்தில்
ஸ்ரீ சென்னகேசவர்!
Published on

ர்நாடகா மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் பேளூர் என்னும் தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சென்னகேசவர் திருக்கோயில். இந்தக் கோயில் மூலவர் நின்ற திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பு.
ஸ்ரீ சென்னகேசவரின் நெற்றியில் உள்ள ஸ்ரீ சூர்ணம் செந்நிறத்தில் காட்சி தருகிறது. முகத்தில் பெண்மையின் எழிலும், கண்களில் அருளும் இழையோடுகிறது. இவர் தனது நாசியில் மூக்குத்தியும், பாதத்தில் சதங்கையும், கொலுசும் அணிந்து காட்சி தருகிறார்.

பெருமாளின் மேலிரு கரங்கள் சங்கு, சக்கரம் தாங்கி நிற்கின்றன. கீழ் வலக்கரத்தில் திருமகள் போல தாமரையையும், இடக்கரத்தில் கதாயுதத்தையும் பற்றிக் காட்சி தருகிறார். கருவறை மூலவரின் பின்புறத்தில் பெருமாள் பாதம் உள்ளது. இவரது சன்னிதியின் முன்பு காணப்படும் நவரங்க மண்டபத்தை, 'அந்தராளம் சுதநாசி' என்கின்றனர் பக்தர்கள். கோயில் கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது, கருடாழ்வார் சிறகை விரித்தபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

கருவறைச் சன்னிதியின் பக்கச் சுவர்கள் முழுவதும் யானை, குதிரை வீரர்கள், நடன மாதர்களின் கலைநயம் மிக்க சிற்பங்கள் ஏழு வரிசையில் அமைந்துள்ளன. தசாவதாரக் காட்சிகள், சிவனின் கஜ சம்ஹாரக் கோலம், லட்சுமி நாராயணர், சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி, இரண்ய வதம் செய்யும் உக்ர நரசிம்மர் ஆகியோர் சிற்பங்களும் இதில் உள்ளன.

Picasa

இக்கோயிலில் கட்பே சென்னகேசவர், வேணுகோபாலர், வீரநாராயணர், ஆண்டாள் ஆகியோருக்குச் சன்னிதிகள் உள்ளன. அது என்ன ‘கட்பே’ எனக் கேட்கத் தோன்றுகிறதல்லவா? சென்னகேசவர் சிலை செய்யும்போது தேரை ஒன்று அந்தக் கல்லில் இருந்து வெளிவந்ததால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டது. ‘கட்பே’ என்றால் தேரை என்றும், கேசவன் என்றால் தடைகளை நீக்குபவன் என்றும் பொருள். இக்கோயில் கோபுரக் கலசத்தைக் காண்பதால் சாப விமோசனமும், சென்னகேசவரின் பாதத்தைத் தரிசிப்பதால் பாவ விமோசனமும் உண்டாகும் என்பது ஐதீகம்.

பக்தர்கள் தங்களது அனைத்துப் பிரார்த்தனைகள் நிறைவேறவும்
ஸ்ரீ சென்னகேசவரை வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி, கோகுலாஷ்டமி ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்: சிக்மகளூரில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் பேளூர். அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com