பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்!

பெற்ற தாய் அன்பும்; காக்கும் தாய் அருளும்!

லப்படமே இல்லாத அன்பு தாயினுடையது. அவளின் அன்பைப் போல் சிறந்த ஒன்றை நாம் வேறு யாரிடமும் காண இயலாது. பெற்ற குழந்தை வெறுத்தாலும் அவளால் பிள்ளைகளை வெறுக்க முடியாது. இதையே தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம், ‘துஷ்டப் பிள்ளைகள் உண்டு. ஆனால், துஷ்ட தாய் என்று ஒருத்தி கிடையாது’ என்கிறது. இந்த உலகத்துக்கு நம்மைக் கொண்டு வந்த தாயுடனான தொடர்பு சரீரம் உள்ள வரை மட்டுமே. ஆனால், லோகத்துக்கே மாதாவான பராசக்தி நாம் எடுக்கும் பிறவிகள் தோறும் அன்னையாய் நம்முடன் பயணிக்கிறாள்.

தன் குழந்தைக்கு வேண்டியதை நேரத்திற்கு கவனித்துச் செய்யும் பெற்ற தாய் போல் பராசக்தி தன்னால் படைக்கப்பட்ட ஜீவன்களுக்கு தகுந்த நேரத்தில், தகுந்ததைச் செய்கிறாள். அவள் நம் உயிருக்குத் தாய். இந்தத் தாயே, நம் உயிரின் கவசம். நிரந்தரமானவள். எடுக்கும் ஜன்மங்கள் தோறும் அவளே தாயாக இருக்கிறாள். அந்தப் பராசக்தியின் மேல் முதல் நாமமாக, ‘ஸ்ரீ மாத்ரே’ என்று போற்றுகிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

நம் சக்தி எல்லாம் தாயிடமிருந்தே வருகிறது. ஒரே சக்திதான் அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்திருக்கிறது. அந்த மகாசக்தியின் கருணைதான் தாயாக நம்மை வாழ வைக்கிறது. உலகில் நாம் செய்யும் காரியங்கள் யாவும் நம்மால் செய்யப்பட்டது இல்லை. அவளின் கைப் பொம்மைதான் நாம். அவளே தாயாக இருந்து நம்மைப் பேச, சிந்திக்க, செயல்பட வைக்கிறாள். நான் செய்தேன் என்று பெருமைப்படுவதில் அர்த்தமே இல்லை.

நாம் எதைச் செய்தாலும், பெற்றாலும் அது அன்னை பராசக்தி கொடுத்தது. அவள் சக்தியால்தான் அனைத்தும் நடக்கிறது. அவளின் கடாக்ஷ கிருபைதான் உலகையே இயங்க வைக்கிறது. இதையே ஸ்ரீமூக கவி,

‘மாதா ஜயந்தி மாதாக்ரஹமோக்ஷணானி

மஹேந்த்ரநீலருசிசி க்ஷண தக்ஷினானி

காமாக்ஷி கல்பிதஜகத் – த்ரய ரக்ஷணானி

த்வத் வீக்ஷணானி வரதான விசக்ஷணானி’

என்கிறார்.

“கருணையால் சிவந்த அம்பிகையின் உள்ளம், நம்முள் இருக்கும் மமதை என்ற பிசாசை துரத்துவதோடு பூலோகம், சுவர்க்கம், பாதாளம் என்ற மூவுலகங்களையும், தோற்றுவித்து, அந்த உலகங்களை, தனது கடைக்கண் பார்வையால் காத்து, நாம் கேட்டதற்கும் மேலாக வரங்களை அள்ளித் தரும் அந்த ஜகஜ்ஜெனனி ஸ்ரீ காமாக்ஷி தேவியின் ரத்ன நீல விழிகளைப் போற்றுகிறேன்” என்று துதிக்கிறார்.

மையான ஸ்ரீ மூக கவி, முன் ஜன்மத்தில் மகாகவி காளிதாஸாக இருந்தார். அம்பிகையை அவதூறாகப் பேசிய காரணத்தால் மறுபிறவியில் ஊமையாகப் பிறக்கும்படி சாபம் அடைகிறார். அதன்படி சக்தி பீடங்களில் முதன்மையான ஸ்ரீ காஞ்சியில் பிறந்த அவர் ஊமையாக இருந்தார். எந்நேரமும் அன்னையின் தியானத்தில் இருந்த மூகரின் குருவான வித்யா, உபாசகரை கடாக்ஷிக்கும் எண்ணத்துடன் தோன்ற, மூகர் அம்பிகையின் அதிரூப சௌந்தர்யத்தைக் கண்டு முன் ஜன்ம உணர்வால் அன்னையைப் பாட முயன்றார். ஆனால், ஊமை என்பதால் வார்த்தைகள் வராமல், ‘பே, பே’ என்று கத்தினார். அதில் தியானம் கலைந்த உபாசகர் இதற்குக் காரணம் அந்தக் கன்னி என்று மாயையால் மதி மயங்கி அம்பிகையை, “போ அப்பால்” என்று கத்தினார்.

அன்னை புன்சிரிப்புடன் தன் வாயில் ஊறிய தாம்பூலத்தை மூகரின் வாயில் உமிழ்ந்து விட்டுச் சென்றாள். அப்போதே அவரின் ஊமைத்தனம் மறைந்து, அற்புதமான சொற்பிரயோகங்களுடன், அம்பிகையின் மீதான ஸ்லோகங்கள் பிறந்தன. அதுவே மூக பஞ்சசதி.

அன்னையை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன? நம் நன்மையை மட்டுமே மேலாக நினைக்கும் அன்னை எப்படி அழைத்தாலும் ஓடி வருவாள். அவள் எல்லா உயிரிலும் ஒன்றியவள். அனைத்திலிருந்தும் விடுபட்டு, அதேசமயம் காரண காரியமாகவும் விளங்குபவள்.

கருணையை வாரி வழங்கும் காமதேனு அம்பிகை. குவித்து வைத்த குங்குமமாக காட்சி அளிக்கும் அவளை அம்மா என்று நினைத்தாலே போதும். கன்றின் குரல் கேட்டு ஓடி வரும் பசுவாக ஓடி வருவாள்.

உலகின் முதன் சொல் அம்மா. மாதாவே உயிர் மூச்சு. அவளை, ‘ஸ்ரீ மாத்ரே நமஹ’ என்று துதித்தால் ஓடி வந்து, நமக்குத் தேவையான அனைத்தையும் தருவாள்
ஸ்ரீ லலிதாம்பிகா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com