கால பைரவரும் சிவனை வழிபடும் அனுமனும்
கால பைரவரும் சிவனை வழிபடும் அனுமனும்

முக்கால வழிபாட்டில் மூன்று வித பலன் தரும் காலபைரவர்!

Published on

ந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் நாகலாபுரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் அமைந்துள்ளது வாலீஸ்வரர் திருக்கோயில். இங்குள்ள கால பைரவர், ‘சந்தான பிராப்தி பைரவர்’ என அழைக்கப்படுகிறார். கால பைரவர்தான் இந்த தலத்தின் பிரதான மூர்த்தியாவார். ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீ காலபைரவர்தான். அதனால்தான் இத்தலத்தை காலபைரவர் க்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள்.

இங்கு சிவபெருமான் சன்னிதிக்கு நேராக ஆஞ்சனேயரும், நந்தியும் காட்சி தருகின்றனர். ஈசனின் திருநாமம் வாலீஸ்வரர். அம்பிகையின் திருநாமம் மரகதாம்பிகை. தல விருட்சம் அரச மரமாகும். இத்தலத்தில் சிவபெருமானுக்கு முன்பு ஆஞ்சனேயர் வீற்றிருப்பதால் இங்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.

கோயிலுக்கு வெளியில் உள்ள தீர்த்தக் குளத்தில் நந்தி சிலையின் வாயிலிருந்து தண்ணீர் தீர்த்த குளத்துக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் நந்தி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

காலபைரவர் தனது மனைவி ஸ்ரீ காளிகா தேவியுடனும், எதிரில் நாய் வாகனத்துடனும், ஐந்து கோஷ்ட மூர்த்திகள் உள்ள பிரத்தியேகமான கர்ப்ப கிரகத்தில் அருள்புரிகிறார். சூலம், உடுக்கை, கத்தி, தண்டம் ஆகியவற்றையும் வலது கரங்களிலும், அங்குசம், பாசம், மணி, கபாலம் ஆகியவற்றை இடது நான்கு கரங்களிலும் தாங்கிக் காட்சி தருகிறார். கோரைப் பற்களுடைய முகத்துடனும், சூரியன், சந்திரன், கங்கை உள்ள ஜடாமுடியுடன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். பாம்பினை பூணூலாகவும், அரைஞாண் கொடியாகவும் அணிந்துள்ளார்.

இரும்புக் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட, சனி பகவானின் தாக்கம் இருக்காது என்பதால் இங்கு காலபைரவர் சன்னிதி முன்பு விளக்கேற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அமாவாசை காய்கறிகளில் வாழைக்காயை கட்டாயம் சேர்ப்பதன் காரணம் தெரியுமா?
கால பைரவரும் சிவனை வழிபடும் அனுமனும்

சிவபெருமானின் 64 அவதாரங்களில் ஒன்றான காலபைரவரே மோட்சத்திற்கு அதிபதியாவார். அதனால்தான் காசி தலத்திற்கு காலபைரவர் அதிபதியாக உள்ளார். மோட்ச தீபம் என்பது பைரவருக்கு உரியது. இவரை வணங்கி வழிபட, கால நேரம் எதுவும் கிடையாது. காலையில் வழிபட நோய்கள் விலகும். பகலில் வழிபட விரும்பியது கிட்டும். இரவில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி முக்தி நிலையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பைரவருக்கு சாம்பிராணி தைல அபிஷேகமும், செவ்வரளி போன்ற சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிப்பதும், மாதுளம் பழம் மற்றும் கதம்ப சாதம் நெய்வேத்தியம் செய்வது மிகவும் விசேஷம். தை மாத செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். அதேபோல், எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். அத்துடன் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமியும் இணைந்து வரும் நாட்களில் விரதம் இருப்பது மிகச் சிறப்பான பலனைத் தரும்.

இக்கோயில் பல்லவர்களால் 9ம் நூற்றாண்டில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் பிற்கால சோழர்களும், விஜயநகர மன்னர்களும் திருப்பணிகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com