தமிழ் வருடத்தின் பெயர்களை படிகளாகக் கொண்ட முருக ஸ்தலம்!

தமிழ் வருடத்தின் பெயர்களை படிகளாகக் கொண்ட முருக ஸ்தலம்!
Published on

மிழ் வருடத்தின் அறுபது பெயர்களும் சுழற்சி முறையில் அறுபது வருடங்களுக்கு ஒரு முறை வந்துகொண்டே இருக்கும். தஞ்சை மாவட்டம், சுவாமிமலையில் உள்ள முருகன் கோயில் சன்னிதானத்துக்குச் செல்லும் வழியில் உள்ள அறுபது படிக்கட்டுகளிலும் அறுபது தமிழ் வருடங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்! தஞ்சை மாவட்டத்தில் மலைகளே கிடையாது. மலைகளே இல்லாத இப்பகுதியில் இந்த சுவாமிமலை உள்ளது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு இணங்க இம்மலை மீது முருகப்பெருமான் அருள்புரிவது சிறப்பாகும்.

இக்கோயிலின் மேல் தளத்தை அடைய அறுபது படிக்கட்டுகள் உள்ளன. தமிழ் வருடங்கள் அறுபது பெயர்களும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ் வருடங்களின் தேவதைகளே முருகப்பெருமானை பிரார்த்தனை செய்தபடி படிகளாக உள்ளதாக ஐதீகம். இந்தப் படிகளுக்கு பக்தர்கள் வஸ்திரம் சாத்தி தேங்காய் பழம் வைத்து பாடல் பாடி பூஜை செய்வார்கள். இதற்கு, ’திருப்படி பூஜை’ என்று பெயர். இந்தத் தலத்தில் இது மிகவும் விசேஷம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது சுவாமிமலை திருத்தலம்.

படைப்புத் தொழில் செய்து வந்த ஆணவத்தில் இருந்தார் பிரம்மா. ஒருமுறை அவரை நேரில் சந்தித்த முருகப்பெருமான், ’’படைப்புத் தொழில் செய்யும் உமக்கு, ’ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா?’ என்று கேட்டார். முருகப்பெருமானின் கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். இதனால் அவரை தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதற்குப் பின்னர்தான் பிரம்மனை விடுதலை செய்தார் முருகப்பெருமான். பிறகு முருகப்பெருமானிடம், ’பிரணவத்தின் பொருள் உனக்கு தெரியுமா?” என்று கேட்டார் சிவபெருமான். ’எனக்கு நன்றாகத் தெரியும்’ என்றார் முருகன்.

’அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?’ என்றார் ஈசன். ’உரிய முறையில் கேட்டால் சொல்வேன்’ என்றார் முருகன். அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் முருகனுக்கு சீடனாக தரையில் பவ்யமாக அமர்ந்தபடி முருகனிடம் பிரணவத்துக்கன பொருளை உபதேசமாகப் பெற்றார். அன்று முதல் சிவபெருமானுக்கும் குருநாதனாக ஆனார் முருகன். அதனாலேயே முருகன் சுவாமிநாதன் என்றும் பரமகுரு என்றும் தகப்பன்சாமி என்றும் போற்றப்படுகிறார். ஆகையால் இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் கம்பீரமாக நான்கரை அடி உயரத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து சிரசில் ஊர்த்துவசிகா முடியும் மார்பில் பூணூலும் ருத்ராட்சமும் தரித்து கருணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர தரிசிக்கலாம். முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் யானை வாகனமாகத் திகழ்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள்புரியும் சாமிநாதனுக்கு தங்க கவசம், வைரவேல் தங்க சகஸ்ர நாம மாலை, இரத்தின கீரிடம் போன்ற பல்வேறு அணிகளும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். தல விருட்சமாக நெல்லி மரம் உள்ளது.

கோயில் மொட்டை கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இறைவனைச் சுற்றி வழிபட மூன்று திருச்சுற்றுகள் உள்ளன. முதல் சுற்று மலையின் அடிவாரத்திலும் இரண்டாம் சுற்று மலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. முதல் திருச்சுற்றில் இருந்து 28 படியில் கடந்து மேலே சென்றால் நடுச்சுற்றை அடையலாம். நடுச்சுற்றில் இருந்து 32 படிகள் ஏறிச் சென்றால் மூன்றாவது மேல் சுற்றை அடையலாம். கோயிலின் கீழே இருந்து மேலே செல்வதற்கு 60 படிகளைக் கடக்க வேண்டும். மனித வாழ்வில் அறுபது ஆண்டுகள் நிறைவு செய்வதை மணிவிழா என்று கூறுவர்.

முருகப்பெருமானை தரிசிக்க படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முன்பு முதல் படியில் தேங்காய் உடைத்து தீபாராதனை செய்த பின்பு மேலே செல்வதுதான் வழிபாட்டு மரப்பாகும். சுவாமிமலை முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு கல்வியும் ஞானமும் நல்வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். வியாழக்கிழமைகளில் வைரவேலுடனும் தங்கக் கவசத்துடனும் காட்சி தரும் கந்த பெருமானுக்கு கார்த்திகை மாதம் முழுவதும் விழா கோலம்தான். சுவாமிமலையில் வஜ்ர தீர்த்தம், குமாரதாரை, சரவண தீர்த்தம், நேத்ர புஷ்கரணி, பிரம்ம தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. மூலவர் முருகனை தரிசனம் செய்வதற்கு முன்பு கருவறை நுழைவாயிலின் அருகே அமைந்திருக்கும் நேத்ர விநாயகரை வழிபட வேண்டும் என்பது மரபு.

அமைவிடம்: தஞ்சை - கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. நகர பேருந்து வசதி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com