Thirumalai Kumaraswamy Murugan Temple
Thirumalai Kumaraswamy Murugan Temple

எறும்புகள் வழிகாட்டி கண்டறியப்பட்ட முருகன் திருக்கோயில்!

Published on

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என அறிவோம். ஆனால், எறும்புகளால் வழிகாட்டப்பட்டு  வெளிப்பட்ட முருகன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், பண்பொழில் தென்காசியில் அமைந்த ஸ்ரீ திருமலை குமார சுவாமி திருக்கோயில் ஆகும். இது முருகப்பெருமானின் புகழ் பெற்ற மலைக்கோயில்களுள்  ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தென்காசி மாவட்டத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள திருமலை குமாரசுவாமி முருகன் கோயிலுக்கு விஜயம் செய்த அகஸ்திய முனிவருக்கு முருகப்பெருமான் தரிசனம் தந்ததாக வரலாற்று ரீதியாக அறியப்படுவது சிறப்பு. ஏற்கெனவே இங்கிருந்த திருமலை காளியம்மன் கோயிலின் பூசாரியான பூவன் பட்டர் என்பவர் கனவில் திருமலை முருகன் தோன்றி, தான் அச்சன்கோயிலுக்குச்செல்லும் வழியில் ‘கோட்டைத்திரடு’ என்ற இடத்தில் மூங்கில் புதருக்குள் இருப்பதாகவும், தான் இருக்கும் இடத்தைக் கட்டெறும்புகள் (எறும்புகள் என்ற கூற்றும் உள்ளது) ஊர்ந்து சென்று காட்டும் என்றும் கூறினார்.

இதுகுறித்து பூசாரி பந்தள மகாராஜாவிற்குத் தெரிவிக்க, சேர மன்னரான பந்தள மகாராஜாவும், பூவன் பட்டரும் கோட்டைத்திரடுவிற்கு வந்து கட்டெறும்பு ஊர்ந்து சென்று வழிபட்ட மூங்கில் புதருக்குள் இருந்து முருகப்பெருமானின் விக்கிரகம் இருக்கக் கண்டு மகிழ்ந்தனர். அதை பக்தியுடன் எடுத்து வந்த அவர்கள்,  குன்றின் உச்சியில் கருவறையில் நிறுவி வழிபடத் துவங்கினர். எறும்புகள் வழிபட்ட முருகப்பெருமான் குன்றின் மீது எழுந்தருளி பாலசுப்பிரமணியராக திருமலைக் குமரன் என்ற நாமத்துடன் தற்போது காட்சி தருகிறார். குற்றாலம் அருவியிலிருந்து 15 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு ‘திருமலையம்மன்’ என்று அழைக்கப்படும் மேலும் ஒரு அம்மன் கோயிலும் உள்ளது. மலையில் இருக்கும் கோயிலை இணைக்க முன்பு சாலை வசதி இல்லை என்பதால் 624 படிகள் கொண்ட மலையின் மேல் நடந்து செல்வதுதான் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல ஒரே வழியாக இருந்த நிலையில், தற்சமயம் மேலே உள்ள கோயிலுக்கு பக்தர்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல வசதியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
‘நறுவிலி’ மூலிகையின் மருத்துவப் பயன்கள்!
Thirumalai Kumaraswamy Murugan Temple

கருவறை தெய்வமான முருகன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இங்கு குவளை மலர்களால் சப்த கன்னியர் முருகப்பெருமானை  வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு சான்றாக நீரூற்றின் கரையில் சப்த கன்னியர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மலையின் உச்சியில் அகஸ்தியரின் தெய்வீக சக்தியால் உருவான தூய நீர் கொண்ட புனிதக் குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தில் தினமும் ஒரு தாமரை மலர் மலரும் என்று கூறப்படுகிறது.

முருக பக்தர்களான அருணகிரிநாதர் மற்றும் அச்சன்புதூர் சுப்பையா ஆகியோர் இந்த ஸ்ரீ திருமலை குமாரசாமி முருகனைப் பற்றி பல கவிதைகளை எழுதியுள்ளனர். திருமலை முருகன் அந்தாதி, திருமலை குமார சுவாமி அலங்காரப் பிரபந்தம் போன்ற படைப்புகளும் உள்ளன. தண்டபாணி ஸ்வாமிகள், கவிராச பண்டாரதியா ஆகியோர் திருமலைக் குமரனைப் போற்றிப் பாடிய கவிஞர்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

சித்திரை மாதம் படி திருவிழா,  வைகாசி விசாகம்,  ஸ்கந்த சஷ்டிப் பெருவிழா,  கார்த்திகை தீபம், தை பூசம் ஆகியவை இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்கள். வாய்ப்பு கிடைத்தால் இத்தல முருகனை வணங்கி நன்மைகள் பெறுவோம்.

logo
Kalki Online
kalkionline.com